திமுகவே அல்லது அதிமுகவே பாஜகவுடன் கூட்டணி வைக்காது என்று எந்த உத்திரவாதமும் தர முடியாது - பீஜே
[திமுகவே அல்லது அதிமுகவே பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டார்கள் என்ற எந்த வித உத்திரவாதத்தையும் தர முடியாது என்பதை தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பம் முதல் சொல்லி வருகிறது. தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து சகோதரர் பிஜே அவர்கள் உணர்வு வார இதழில் கேள்விகள் பகுதியில் ஜெயலலிதா மற்றும் கலைஞர் பாஜகாவுடன் சேர முகந்திரம் இருப்பதை விளக்கி பதில் அளித்து இருந்தார். இதை தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக பொய்யை பரப்புவதையே தொழிலாக கொண்ட ஒரு இணையதளம், ஜெயலலிதா பாஜகாவுடன் கூட்டணி வைப்பார் என்று பீஜே சொல்லிவிட்டார் என்று திரித்து செய்தி வெளியிட்டுயிருந்தார்கள். முழமையான பதிலை வெளியிடாமல், பாதி பதிலை வெட்டி வெளியிட்டுயிருந்தார்கள். பின்னர் சிலர் கேள்வி எழுப்பியவுடன் முழமையான செய்தியை வெளியிட்டுயிருந்தார்கள். செய்தியை திரித்து வெளியிட்டும் இவர்களுக்கு எந்த பலனும் கிட்டவில்லை. உணர்வில் வந்த கேள்வியையும் பதிலையும் முழுமையாக இங்கு வெளியிடுகிறோம்.]
நரேந்திர மோடியைப் பிரதமராக்க நான் துணை போகமாட்டேன் என்று ஜெயலலிதா இன்றுவரை கூறவில்லையே?
நரேந்திர மோடியைப் பிரதமராக்க நான் துணை போகமாட்டேன் என்று ஜெயலலிதா இன்றுவரை கூறவில்லை. கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இதுபற்றி ஜெயலலிதா தெளிவாக அறிவிக்க வேண்டும் என்று மேடை தோறும் கேள்வி எழுப்பியும் வாய் திறக்காமல் இருக்கிறாரே, இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
காங்கிரஸ் தனது மதவாதப் போக்கில் இருந்து திருந்திக் கொண்டால் காங்கிரஸை மன்னிக்கத் தயார் என்று கருணாநிதி கூறுவதன் பொருள் என்ன?
ஜெயலலிதாவும், கருணாநிதியும் தேர்தலுக்குப் பின் தமக்கு ஆதாயம் தரும் முடிவைத்தான் எடுப்பார்கள். மத்திய ஆட்சியில் தமக்கும் பங்கு இருந்தால்தான் தமிழகத்துக்கு நன்மை செய்ய முடியும் என்ற பதிலை ரெடிமேடாக வைத்துள்ளனர்.
இருவரையும் இந்த விஷயத்தில் நாம் பிரித்துப் பார்க்க முடியாது.
கருணாநிதியை எடுத்துக் கொண்டால் அவர் பா.ஜ.க.வுடன் கூட்டு சேர முயற்சித்து, பா.ஜ.க சேர்த்துக் கொள்ளாததால், கூட்டணி வைக்காமல் போனவர்.
புதிய தலைமுறை தொலைக் காட்சியில் பா.ஜ.கவைச் சேர்ந்த பெண் தலைவி ஒருவர், திமுக சார்பில் கலந்து கொண்ட தலைவரை நோக்கி “எங்களை மதவாத சக்தி என்று சொல்லும் நீங்கள், எங்களுடன் கூட்டணிக்கு கெஞ்சினீர்கள், நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை மறந்துவிட வேண்டாம் என்று சொன்னார். அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அந்த திமுக தலைவர, இதை மறுக்கவில்லை. உலகமே பார்த்துக்கொண்டு இருந்த இந்த நிகழ்ச்சியில் கூறப்பட்ட குற்றச்சாட்டை திமுக தலைமை இன்று வரை மறுக்கவில்லை.
தேர்தலுக்குப் பின்னால் பார்த்துக் கொள்வோம் என்ற அடிப்படையில்தான் அவர்களுக் கிடையே முடிவாகியுள்ளது என்பது, உன்னிப்பாக கவனிக்கும் அனை வருக்கும் தெரிகின்றது.
இதனால்தான் திருச்சிக்கு மோடியின் முதல் வருகையை எதிர்த்து சில முஸ்லிம் அமைப்புகளும், தமிழர் அமைப்புகளும் போராட்டம் நடத்தியபோது இதைக் கருணாநிதி கண்டித்தார்.
ஏற்காடு இடைத்தேர்தலில் பா.ஜ.க ஆதரவைக் கேட்டு கடிதம் எழுதினார்.
தினமலருக்கு அளித்த பிரத்தியோகப் பேட்டியில் ”மோடி எனது நண்பர்” என்றார்.
தேர்தலுக்குப் பின்னால் பா.ஜ.க.வை ஆதரிக்கலாமா என்பதை தேர்தலுக்குப் பின் முடிவு செய்வோம் என்றும் கூறினார்.
இதனால் முஸ்லிம் வாக்குகள் முழுமையாக திசை மாறுவதை உணர்ந்து, மோடியும் ராகுலும் அல்லாத ஒருவர் பிரதமராக, ஆதரவு தெரிவிப்போம் என்று பல்டி அடித்தார்.
ராகுல் பிரதமராக ஆதரவு இல்லை என்ற சொல்லில் இருந்தும் பல்டி அடித்து காங்கிரஸை மன்னிக்கத் தயார் என்று மாற்றினார்.
காங்கிரஸ் மதவாதத்தைக் கைவிட்டால் காங்கிரஸை ஆதரிப்போம் எனக் கூறி, பா.ஜ.க போலவே காங்கிரசும் மதவாதக் கட்சி என்று இப்போது கூறுகிறார். இதுதான் இவரது கடைசி நிலையாக உள்ளது. (இதன் பிறகு அடிக்கும் பல்டிகள் எத்தனை என்று இனிமேல் தெரிய வரும்)
மதவாதக் கட்சியாக காங்கிரஸ், இருந்தது இல்லை. மதவாதத்தைக் கைவிடுவதாக காங்கிரஸ் அறிவிக்கத் தேவையில்லை. கைவிடுவதாக அறிவித்தால் இதற்கு முன் மதவாதத்தில் அக்கட்சி இருந்ததாக ஆகிவிடும். காங்கிரஸ் எதை அறிவிக்காதோ அதை அறிவிக்குமாறு கருணாநிதி கேட்கிறார்.
காங்கிரஸ் மதவாதத்தைக் கைவிடுவதாக அறிவிக்கவில்லை. எனவே பாஜக காங்கிரஸ் இரண்டுமே மதவாதக் கட்சிகள்தான். இரண்டில் ஒன்றைத்தான் ஆதரிக்க முடியும் என்பதால் பாஜகவை ஆதரிக்கிறேன் என்று தேர்தலுக்குப் பின்னால் சொல்வதற்காகவே காங்கிரஸ் மதவாதத்தைக் கைவிடுவதாக அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பத்தினிப் பெண்ணிடம் போய் இனிமேல் விபச்சாரம் செய்ய மாட்டேன் என்று, அறிவித்தால்தான் உன்னை நம்புவேன் என்று சொல்வதுபோல அவரது கடைசி வாக்குமூலம் உள்ளது.
முஸ்லிம்களை ஏமாற்றுவதற்குரிய டயலாக்குகளும் அவரிடம் உள்ளது. அவரை ஆதரிக்கும் முஸ்லிம் இயக்கத்தினர் அதை எடுத்துக்காட்டி பிரச்சாரம் செய்கிறார்கள். இந்துத்துவா சக்திகளை ஏமாற்றும் டயலாக்குகளும் அவரிடம் உள்ளன. அவரை நம்பும் பா.ஜ.க.வினர் அதை மேற்கோளாகக் காட்டி தேர்தலுக்குப்பின் திமுகவின் ஆதரவைத்தான் கோருவோமே தவிர, அதிமுகவின் ஆதரவைக் கோரமாட்டோம் என்று கூறுவது இதனால்தான்.
காங்கிரஸ் குறித்தும், மோடி குறித்தும் இந்த இரண்டு மாதத்தில் ஆயிரம் பல்டி அடித்தவருக்கு தேர்தல் முடிந்தபின் இன்னொரு பல்டி அடிப்பது எளிதானதுதான்.
தேர்தலுக்குப் பின் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்க, நான் ஒரு போதும் துணை நிற்கமாட்டேன் என்று கருணாநிதி, தெளிவாகக் கூறவேண்டும் என்று ப.சிதம்பரம் கூறுகிறார்.
அப்படி தெளிவாகக் கூறினாலும் கருணாநிதி அதை அப்பட்டமாக மீறுவதற்கு வெட்கப்பட மாட்டார். இது கருணாநிதியின் நிலை.
ஜெயலலிதா தன்னைப் பிரதமர் என்று நேரடியாக சொல்லாவிட்டாலும் அப்படித்தான் ஆரம்பத்தில் காட்டிவந்தார்.
இதை மெய்ப்பிக்கும் வகையில் மூன்றாவது அணியில் அங்கம் வகித்தார். கம்யூனிஸ்டுகள் ஆதரவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு ராஜ்ய சபா சீட்டு வழங்கினார்.
மம்தா, சந்திரபாபு நாயுடு போன்றவர்களின் ஆதரவையும் திரட்டினார்.
இப்படி அவர் காட்டிக் கொண்டாலும், பாஜக ஆட்சி அமைக்க தனது எம்பி.க்கள் பலம் உதவுமானால் நிச்சயம் அவர் பாஜகவை ஆதரிக்கத் தவற மாட்டார்.
நான் ஒரு போதும் மோடி பிரதமராக ஆதரவு தெரிவிக்க மாட்டேன் என்று அவர் கூறவேண்டும் என்று ப.சிதம்பரம் கேட்கிறார்.
நான், ஒரு போதும் மோடியை ஆதரிக்க மாட்டேன் என்று ஜெயலலிதா சத்தியம் செய்து கூறினாலும் நம்மைப் பொறுத்தவரை அதை நம்ப மாட்டோம்.
1999ல் நாம் நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில், அவர் இதுபோல் கூறினார். நான்தான் பாஜகவை ஆட்சியில் அமர்த்தினேன். நானே அதைக் கவிழ்த்துவிட்டேன். இனி ஒரு போதும் பா.ஜ.கவை ஆதரிக்கமாட்டேன் எனக்கூறிவிட்டு பின்னர் பா.ஜ.கவுடன் சேர்ந்தார்.
”எனவே ஜெயலலிதாவாக இருந்தாலும், கருணாநிதியாக இருந்தாலும் நாங்கள் பாஜகவை ஆதரிக்கவே மாட்டோம் என்று தெளிவான வார்த்தைகளால் சத்தியம் செய்து சொன்னாலும் அறிவுடைய மக்கள் அதை நம்பமாட்டார்கள்.”
ஆனால் கருணாநிதி, இரு முகம் காட்டி இருவகையாக பேசுவதால், இவர் பாஜகவை ஆதரிக்கமாட்டார் என்று அப்பாவிகள் நம்புவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஜெயலலிதா பாஜக பற்றி வாய் திறக்காததால் அவர் பாஜக பக்கம்தான் போவார் என்று அப்பாவிகள் நம்பும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
”ஜெயலலிதா கருணாநிதி இருவர் மீதும் விருப்பு வெறுப்பு இல்லாமல், இருவரது கடந்த கால செயல்பாடுகளைச் சீர்தூக்கி பார்க்கும் மக்கள் தான் இதைப்புரிந்து கொள்வார்கள்.”
கருணாநிதி, பாஜகவை ஆதரிக்க மாட்டேன் என்பதுபோல பேசுகிறார். ஆனால் ஜெயலலிதா வாய் திறக்கமாட்டேன் என்கிறார் என்பதை மட்டும் பார்க்கும் அப்பாவி முஸ்லிம்களின் ஆதரவை ஜெயலலிதா, இழப்பார். ஜெயலலிதா, பாஜகவை ஆதரிப்பார் என்ற பிரச்சாரம் ஓரளவு எடுபடக்கூடிய அறிகுறிகள் தென்படுகின்றன.
ஆனால் “கருணாநிதி பாஜக பக்கம் போகமாட்டார் என்று நம்பும் இவர்கள் பின் ஏமாறுவார்கள். இருவருமே பாஜகவின் இரகசிய நண்பர்கள் என்று நம்புவதால் நமக்கு எந்த ஏமாற்றமும் ஏற்படாது.
எனவே ஜெயலலிதாவின் மவுனம் முஸ்லிம்கள் மத்தியில் அவருக்கு இருந்த ஆதரவைக் குறைக்கும் வாய்ப்பு அதிகம் என்பதை நாம் உறுதிபடக் கூறிக்கொள்கிறோம்.”
ஆட்சி அமைக்க 272 எம்பிக்கள் ஆதரவு தேவை என்பதை நாம் அறிவோம்.
பாஜக.வுக்கு அந்த அளவு பெரும்பான்மை கிடைக்கும் என்று பாஜகவிடம் விலை போன ஊடகங்கள் கூட, கருத்துக் கணிப்பில் கூற முடியவில்லை.
கடைசியாக பாஜக ஆதரவு ஊடகங்கள் வெளியிட்ட கருத்துக் கணிப்பில், பாஜகவுக்கும், பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கட்சிகளுக்கும் சேர்த்து 233 இடங்கள் கிடைக்கும் என்கிறார்கள். எனவே, இன்னும் நாற்பது எம்பி.க்களின் ஆதரவு தேவைப்படும். இதற்காக பல்வேறு மாநிலக் கட்சிகளிடம் பாஜக பேரம் பேசும்.
அதிமுக 20, திமுக 20 என்ற அளவில் வெற்றி பெற்றால் இரு கட்சிகளில் ஏதாவது ஒரு கட்சியின் ஆதரவைத்தான் பெறமுடியும். இரு கட்சிகளுமே பாஜகவுக்கு ஆதரவு அளிக்க போட்டி போடுவார்கள். ஒரு லட்சம் கோடி இரண்டு லட்சம் கோடி என்று ஊழல் செய்ய உதவும் பதவிகளை அடைய இருவரும் துடிப்பார்கள்.
ஐந்து ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சியில் இருந்து சம்பாதித்ததை(?) விட பல மடங்கு ஒரே ஒரு மத்திய அமைச்சர் பதவியின் மூலம் சம்பாதிக்க முடியும். இதை இருவருமே எளிதாக விட்டுவிட மாட்டார்கள்.
இருவருமே பாஜகவை ஆதரிக்க போட்டி போடும்போது, 13 மாதங்களில் ஆதரவை வாபஸ் பெற்று வாஜ்பேய் ஆட்சியைக் கவிழ்த்த ஜெயலலிதாவை விட, கருணாநிதியைத்தான் பாஜக தேர்வு செய்யும். குஜராத் கலவரம் போன்ற இன அழிப்பு நடந்தாலும், கருணாநிதி நம்மை உறுதியாக ஆதரிப்பார் என்றுதான் பாஜக நினைக்கும்.
நாற்பது இடங்களையும் ஜெய லலிதா கைப்பற்றினார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது மானம் கெட்ட பாஜக அதிமுகவின் ஆதரவை நாடும். அதிமுகவும் ஆதரிக்கும்.
நாற்பது இடங்களையும் திமுக வென்றாலும் இதுதான் நடக்கும்.
ஆட்சியில் பங்கேற்று பதவிகளைப் பெற்று தம்மை வளப்படுத்திக் கொள்வதற்குத்தான் அரசியல் நடத்துகிறார்களே தவிர, சேவை செய்வதற்கு அல்ல.
பாஜகவுக்கு கிடைக்கும் என்று கணிக்கப்பட்ட 233 இடங்கள், காங்கிரசுக்குக் கிடைப்பதாக வைத்துக் கொண்டாலும் இதே நிலைதான் ஏற்படும்.
திமுக 20, அதிமுக 20 என்று வெற்றி பெற்றாலும் இருவரும் காங்கிரசை ஆதரிக்க நான், நீ என்று போட்டி போடுவார்கள். 3ஜி ஊழல் பிரச்சினை வந்தபோது, திமுகவை கழற்றிவிட்டால் காங்கிரசை ஆதரிக்க நான் தயார் என்று ஜெயலலிதா பகிரங்கமாக அறிவித்ததை நாம் மறந்து விட முடியாது.
ஆனால் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு காங்கிரஸை ஆதரிக்க முன்வந்தாலும் காங்கிரஸ், திமுக ஆதரவைத்தான் ஏற்றுக்கொள்ளும். ஜெயலலிதா, சோனியாவை அவமானப்படுத்தியதை காங்கிரஸ் மறக்காது.
எல்லா தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றினால், தனது ஆதரவினால் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றால் இரண்டு கட்சிகளுமே மானத்தை இழந்து கூட்டு சேருவார்கள்.
காங்கிரசுடன் பாஜக கூட்டுசேராது, அதிமுகவுடன் திமுக கூட்டுசேராது என்பது மட்டுமே இன்றைய நிலையில் உறுதியானது.
மற்ற யாருடனும், யாரும் கூட்டு சேருவார்கள். அரசியல் என்பது பதவி பெற்று சம்பாதிப்பதற்குத்தான். இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முடிவாகச் சொல்வது என்றால் ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே பாஜகவுடன் சேர்வதால் லாபம் கிடைக்கும் என்றால் சேர்வார்கள். ஆனால் ஜெயலலிதா, பாஜக பற்றி வாய் திறக்காமல் இருப்பது, நுணுக்கமான விஷயத்தைப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்களின் ஆதரவை இழக்கச் செய்யும் என்பதில் சந்தேகம் இல்லை.
இடஒதுக்கீட்டுக்காக ஆதரிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கும் முஸ்லிம்களின் ஆதரவில் சிறிய அளவிலாவது இந்த மவுனம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஜெயலலிதா உணர்வது, அவருக்கு நல்லது.
2 கருத்துரைகள் :
யார் அந்த நிருபர் மக்கள் மத்தியில் முகவரியோடு தெளிவு படுத்தலாமே ..?
யார் அந்த நிருபர் மக்கள் மத்தியில் முகவரியோடு தெளிவு படுத்தலாமே ..?
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.