Friday, September 20, 2013

கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள்


கணவன் மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள் உள்ளன
அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து உமது விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன என்ற கூறினார்கள் (புகாரி (1974)

மனைவியிடம் சிறந்தவரே மக்களில் சிறந்தவராவார்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இறைநம்பிக்கையாளர்களில் ஈமானில் முழுமையானவர் அவர்களில் அழகிய நற்குணமுடையவரே தன்னுடைய மனைவியிடத்தில் குணத்தால் சிறந்தவரே உங்களில் சிறந்தவராவார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் தன்னுடைய மனைவியிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவராவார். நான் என்னுடைய மனைவியிடத்தில் சிறந்தவனாவேன். நூல்: திர்மிதி (3830)

கணவன் மனைவியிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்
ஹய்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் எங்கள் மனைவிமார்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன? தவிர்க்க வேண்டியவை என்ன? என்று கேட்டேன் அதற்கு நபியவர்கள் (உங்கள் மனைவிமார்கள்) உங்கள் விளைநிலங்கள் உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு சென்றுகொள்ளுங்கள். (அவளை கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதே அவளை அசிங்கமாகத் திட்டாதே நீ உண்ணும் போது அவளையும் உண்ணச் செய் நீ ஆடை அணியும் போது அவளுக்கும் ஆடை கொடு. வீட்டில் வைத்தே தவிர (மற்ற இடங்களில்) அவளிடம் வெறுப்பைக் காட்டாதே., நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அவர்களின் மீது உங்களுக்கு ஆகுமானவை தவிர மற்ற விஷயங்களில் எப்படி நீங்கள் (அவர்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முடியும்?) என்று கூறினார்கள். (நூல்: அஹ்மத் (19190)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (மக்களே) பெண்கள் விஷயத்தில் நல்லவிதமாக நடந்து கொள்வது பற்றி (என்னுடைய) உபதேசங்களை கவனத்தில் கொள்ளுங்கள். நிச்சயமாக (பெண்களாகிய) அவர்கள் உங்களுடைய பொறுப்பில் இருக்கின்றார்கள். இதைத்தவிர அவர்களிடமிருந்து நீங்கள் எதையும் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. அவர்கள் தெளிவான மானக்கேடான காரியங்களைச் செய்தாலே தவிர. அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டால் அவர்களை படுக்கையறைகளில் காயம் ஏற்படாதவாறு (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழிகளைத் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் மனைவிமார்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உள்ளன. அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளாகிறது நீங்கள் வெறுப்பவர்களுக்கு உங்கள் படுக்கையறைகளில் இருக்க இடம்கொடுக்காமல் இருப்பதும் நீங்கள் வெறுப்பவர்களை உங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாகிறது அவர்களுக்கு அழகிய முறையில் ஆடையளிப்பதும் உணவளிப்பதும் ஆகும். நூல் திர்மிதி (1083)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பதுபோல் அடிக்க வேண்டாம். (ஏனெனில்) பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே (நாணமில்லாமல்) உறவு கொள்வீர்கள் நூல்: புகாரி (5204)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பெண்கள் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும்) என்னுடைய அறிவுரையை ஏற்,றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில் பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள்.மேலும் விலா எலும்பிலேயே அதன் மேல் பகுதி மிகவும் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியே விட்டு விட்டால் அது கோணலானதாகவே இருக்கும். ஆகவே பெண்கள் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள். நூல்: புகாரி (3331)

மனைவி தொழுகைப் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் மறுக்கக் கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பெண்கள் பள்ளிக்கு (தொழ)ச் செல்வதை தடுக்காதீர்கள். நூல்: புகாரி (900)
கணவன் மனைவிக்குச் செலவிடுதல்
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். (அல் குர்ஆன் 4: 34 ‏)
மனைவியை வெறுப்பது கூடாது
அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான் (அல் குர்ஆன் 4: 19 ‏)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இறைநம்பிக்கை கொண்ட ஒரு ஆண் இறைநம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கொண்டு திருப்தி‎கொள்ளட்டும். நூல்: முஸ்லிம் 2915

மனைவியோடு பிணக்கு ஏற்பட்டால் நடந்து கொள்ள வேண்டிய முறை
பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப் பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்த வனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான் (அல் குர்ஆன் 4: 34 ‏)

மனைவிமார்களிடம் நீதமாக நடந்து கொள்ள வேண்டும்
மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே முழுமையாக (ஒரு பக்கமாக) சாய்ந்து, (இன்னொருத்தியை) அந்தரத்தில் தொங்க விடப் பட்டவளைப் போல் விட்டு விடாதீர்கள்! நீங்கள் நல்லிணக்கம் பேணி (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல் குர்ஆன் 4 129
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் யாருக்கு இரண்டு மனைவிகள் இருந்து அவர். இருவரில் ஒருத்திக்கு எதிராக இன்னொரு மனைவியின் பக்கம் சாய்ந்து கொண்டால் மறுமையில் தனது இரண்டு புஜங்களில் ஒன்றை சாய்ந்தவனாக இழுத்துக் கொண்டு வருவான் நூல் அஹ்மது (7595)

நீண்டநாள் பயணத்திலிருந்து திரும்பும் போது இரவில் வீட்டிற்கு செல்லக்கூடாது
நபி (ஸல்) அவர்கள் ஒருவன் (நீண்ட நாள் பயணத்திலிருந்து வீடு திரும்பும் போது எந்தவித தகவலும் தெரிவிக்காமல்) தன்னுடைய குடும்பத்தினரை பயமுறுத்தும் வகையிலும் அவர்களுடைய குறைகளை கண்டறியும் நோக்கத்திலும் இரவு நேரங்களில் வீட்டுக் கதவுகளை தட்டுவதை தடைசெய்தார்கள் நூல் முஸ்லிம் (3559)

மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
நல்ல மனைவி
நபி (ஸல்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கூறினார்கள் ஒரு மனிதனுடைய பொக்கிஷங்களில் சிறந்ததை நான் உனக்கு அறிவிக்கவா ? (அதுதான் நல்ல மனைவியாவாள்) நல்ல மனைவியென்பவள் (கணவன்) அவளை நோக்கும் போது அவனை சந்தோஷப்படுத்துவாள். அவன் அவளுக்கு கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது அவனுக்காக (அவனுக்குரியவைகளை) பாதுகாத்துக் கொள்வாள். நூல் அபூதாவூத் (1417)

கணவனின் கைகளில்தான் மனைவியின் சொர்க்கம் இருக்கிறது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (பெண்ணே நீ உன்னுடைய கணவனுக்குச் செய்யும் கடமைகளில்) என்னிலையில் இருக்கின்றாய் என்பதைக் கவனித்துக் கொள். நிச்சயமாக அவர் ஒன்று உன்னுடைய சொர்க்கமாக இருப்பார். அல்லது நரகமாக இருப்பார். நூல்: அஹ்மத் (18233)
அதாவது கணவனுடைய கடமைகளை முறையாக நிறைவேற்றுகின்ற பெண் அதன் காரணமாக சுவர்க்கம் செல்வாள். முறையாக நிறைவேற்றாத பெண் அதன் காரணமாக நரகம் புகுவாள்.

கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நான் ஒருவர் மற்றவருக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளையிடுபவனாக இருந்தால் மனைவி தன்னுடைய கணவனுக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருப்பேன். (ஏனென்றால் அந்த அளவிற்கு அவள் தன்னுடைய கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. ஆனால் அல்லாஹ்வுக்கே தவிர யாரும் யாருக்கும் ஸஜ்தா செய்யக் கூடாது) நூல்: திர்மிதி (1079)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே ஒரு பெண் மனிதர்களில் யாருக்கு அதிகம் கடமைப்பட்டிருக்கிறாள் ? எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் அவளுடைய கணவனுக்கு என்று கூறினார்கள் நூல்: ஹாகிம் (7244)

மனைவியே கணவனுடைய வீட்டிற்கும் அவன் குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு பெண்மணி தன்னுடைய கணவனின் வீட்டிற்கும் அவன் குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். அவைகளைப் பற்றி (மறுமையில்) அவள் விசாரிக்கப்படுவாள். நூல்: புகாரி(2554)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஒட்டகத்தில் பயணம் செய்யும் பெண்களிலேயே சிறந்தவர்கள்) நல்ல குறைஷிக் குலப் பெண்களாவர். அவர்கள் குழந்தைகள் மீது அதிகப் பாசம் கொண்டவர்களாவர். தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக்காப்பவர்கள் ஆவர். நூல்: புகாரி (5365)

கணவனுடைய உபகாரங்களுக்கு நன்றி மறக்கக் கூடாது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக்கு நரகம் காட்டப்பட்டது. அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில் அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர். அப்போது இறைவனையா நிராகரிக்கிறார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கணவனை நிராகரிக்கிறார்கள் உதவிகளை நிராகரிக்கிறார்கள். அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து. பின்னர் (அவளுக்கு பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானாள் உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை. என்று பேசிவிடுவாள். என்றார்கள் நூல்: புகாரி (29)

மலக்குமார்களின் சாபம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவர் தன்மனைவியைப் படுக்கைக்கு அழைத்து அவள் (அவருக்கு உடன்பட) மறுத்து விட அதன் விளைவாக அவர் இரவுப் பொழுதை கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர். நூல்: புகாரி (3237)

மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் மனைவிமார்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உள்ளன. அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளாகிறது நீங்கள் வெறுப்பவர்களுக்கு உங்கள் படுக்கையறைகளில் இருக்க இடம்கொடுக்காமல் இருப்பதும் நீங்கள் வெறுப்பவர்களை உங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாகிறது அவர்களுக்கு அழகிய முறையில் ஆடையளிப்பதும் உணவளிப்பதும் ஆகும். நூல் திர்மிதி (1083)

கணவனுடைய அனுமதியில்லாமல் செய்யக் கூடாதவை
ஒரு பெண் தன்னுடைய கணவன் ஊரில் இருக்கும் போது அவரது அனுமதியில்லாமல் (சுன்னத்தான) நோன்பு நோற்பது கூடாது. அவரது அனுமதியில்லாமல் (யாரையும்) அவரது இல்லத்திற்குள் அவள் அனுமதிக்கக் கூடாது. கணவர் கட்டளையிடாமலேயே ஒரு பெண் (அவனது பொருளை தர்மமாக) செலவு செய்தால் (அதன் நன்மையில்) பாதி அவருக்கும் கிடைக்கும் நூல்: புகாரி (5195)

கணவனுடைய அனுமதியில்லாமல் அவசியமான நல்லகாரியங்களுக்கு தேவையான அளவு செலவுக்கு பணம் எடுத்துக் கொள்ளலாம்

(ஒரு முறை) ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என்குழந்தைக்கும் போதுமான பணத்தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவு எடுத்துக் கொள் என்று சொன்னார்கள். நூல்: புகாரி (5364)

கணவன் மற்றொரு மனைவியை தலாக் விடுமாறு கூறுவது கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு பெண் மற்றொரு பெண்ணின் பாத்திரத்தை (வாழ்வாதாரத்தை) க் காலி செய்(துவிட்டு அதை தனதாக்கிக் கொள்) வதற்காக அவளை விவாகரத்துச் செய்துவிடுமாறு (தன் கணவணிடம்) கோர அனுமதியில்லை. அவளுக்கென விதிக்கப்பட்டது நிச்சயம் அவளுக்கே கிடைக்கும். நூல் புகாரி (5152

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.