பேய் பிசாசுகளைத் துரத்தியடித்த டிஎன்டிஜே!
“பேய் நடமாட்டத்தால் மக்கள் பீதி!”, “பிசாசு நடமாட்டத்தால் மக்கள் கலக்கம்” என்று அடிக்கடி பரபரப்பு செய்தி வெளியிட்டு, தங்களது விற்பனையை சூடுபிடிக்க வைத்து பத்திரிக்கைகள் காசு பார்க்கின்றன. அந்த வகையில் கடந்த 12.07.2012 அன்று தினமலர் பத்திரிக்கையில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள ஆத்தங்கரை பகுதியில் உள்ள ஒரு மின் கம்பத்தில் பெண் பேய் ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதாகவும், அது மொபைல் போனில் படம் எடுக்கப்பட்டதாகவும் ஒரு பரபரப்பு செய்தியை வெளியிட்டிருந்தது தினமலர். இதே செய்தியை சன் டிவியும் ஒளிபரப்பியது
இந்தச் செய்தி மாநிலத் தலைமையகத்திற்கு எட்டியவுடன் சம்பந்தப்பட்ட இடத்தில் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்று மாநிலத்தலைமையகம் வாயிலாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
உடனடியாக களமிறங்கிய திருவள்ளூர் மாவட்டம் :
உடனே மாநிலத்தலைமையகத்தின் வழிகாட்டுதலின் பேரில் களத்தில் குதித்த திருவள்ளூர் மாவட்டம், சம்பந்தப்பட்ட ஆவடி கிளையின் மூலமாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முடிவு செய்து உடனடியாக ஆவடி நகர நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை 13.07.2012 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு கூட்டியது. அனறைய தினமே பேய் நடமாட்டம் இருப்பதாக சொல்லப்பட்ட அந்த மின் கம்பத்திற்கு நமது நிர்வாகிகள் சென்றனர். அந்த மின் கம்பத்தில் நமது ஜமாஅத்தின் கொடிகளை நமது நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கட்ட ஆரம்பித்தவுடன் அந்தப்பகுதியில் பரபரப்புத் தொற்றிக் கொண்டது.
ஊரில் உள்ளவர்களெல்லாம் பேய், பேய் என்று பயந்து பீதியடைந்து தலைதெறிக்க ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் இவர்கள் தைரியமாக, எந்த மின் கம்பத்தில் பேய் உள்ளதாக சொல்லப்படுகின்றதோ அந்த மின் கம்பத்திலேயே போய் கொடிகளைக் கட்டுகின்றனரே! என்று அந்தப் பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
பேய் பயத்தை விரட்ட சிறப்புப் பிரச்சாரம் :
உடனே அங்கு பிரச்சாரக் கூட்டம் துவங்கியது. திருவள்ளூர் மாவட்டத் துணைச் செயலாளர் சகோ.ஹுசைன் அலி அவர்கள், “பேய் பிசாசு உண்டா?” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் மூன்று விஷயங்களுக்காக பேய் நடமாட்டம் இருப்பதாக மக்களுக்கு மத்தியில் பீதியை ஏற்படுத்துவார்கள்.
• சிலர் சமூக விரோத செயல்களைச் செய்யும் பொழுது அதை மக்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக இப்படி ஒரு பீதியை ஏற்படுத்தி தங்களின் சட்ட விரோத செயல்களை எந்த பிரச்சனையும் இல்லாமல் செய்து கொள்வார்கள்.
• இடங்களை விற்பனை செய்வதில் புரோக்கர்களாக செயல்படும் சில இடைத்தரகர்கள் அந்தப் பகுதியில் உள்ள இடத்தின் மதிப்பை குறைக்க வேண்டும் எனத் தீர்மானித்து விட்டால், அந்தப் பகுதியில் இப்படி ஒரு பீதியை ஏற்படுத்துவார்கள். அதனால் இடத்தின் விலை கடுமையாக சரிந்துவிடும். இப்படி வியாபாரத்துக்காக செய்பவர்களும் உண்டு.
• பேய் பிசாசுகளை விரட்டுகிறோம்; தாயத்துகளைக் கட்டுகிறோம்; மந்திரங்களைச் சொல்கிறோம் என்று சொல்லி தொழில் நடத்தக் கூடியவர்கள் இப்படி ஒரு புரளியைக் கிளப்பி விட்டு தங்களுடைய தொழிலைப் பெருக்கிக் கொள்வார்கள்.
இப்படி மூன்று சாராரில் யாரோ ஒருசாரார்தான் இதைச் செய்து இருக்கிறார்கள் என்று மக்களுக்கு விளக்கப்பட்டது.
அதே போன்று அந்தப் பேய் வரத் துவங்கியதிலிருந்து மின் கம்ப விளக்குகளும் எரியவில்லை என மக்கள் கூறியதிலிருந்து இது திட்டமிட்ட சதி வேலை என்பது அம்பலமானது.
இந்த சதிகாரக் கும்பலை விரைவில் சட்டத்திற்கு முன்னால் நிறுத்துவோம் எனக் கூறி, மேலும் உடனடியாக மின்சார வாரியத்தை அணுகி பழுது போன விளக்குகளைச் சரி செய்து தருவதாக மின்சார வாரியமும் உறுதி அளித்த செய்தியையும் மக்களிடத்தில் கொண்டு சென்ற பிறகு மக்களுக்குப் பிரச்சனை என்ன என்பது விளங்க ஆரம்பித்தது. அடுத்து உண்மையில் அந்தப் பேய்க்கு சக்தி இருக்கும் என்று சொன்னால் எங்களை ஏதாவது செய்யச் சொல்லுங்களேன் பார்ப்போம் என்று அறைகூவல் விடப்பட்டது.
மேலும் பகலில் வந்தால் பேய் வராது என்று சொல்வார்கள். அதனால்தான் இரவில் வந்து இருக்கிறோம் எனக் கூறிய பொழுது மக்களுக்கு ஓரளவு பயம் தெளிய ஆரம்பித்தது. இறுதியாக இஸ்லாம் உலகத்திற்கு சொல்லக்கூடிய செய்தி எனக் கூறி, “உயிர் என்பது அல்லாஹ்வுடைய கட்டுப்பாட்டில் உள்ளது. அல்லாஹ்வின் கட்டுப்பாட்டை மீறி அவன் போட்டுள்ள திரையைத் தாண்டி இறந்துவிட்ட எந்த ஆன்மாவாலும் இந்த உலகத்திற்குத் திரும்பவும் வரமுடியாது” எனச் சொல்லி பேய்கள் என்பது நூறு சதவிகிதம் பொய் என்று அவர் பேசி முடித்தார்.
மொபைல் போனில் பேய்ப் படம்(?):
இவ்வாறு நாம் பிரச்சாரம் செய்து முடித்தவுடன், ஒரு சகோதரர் பேய்கள் இருப்பதற்கு ஆதாரம் உள்ளதாகக் கூறி மின் கம்பத்தில் பேய் நின்ற பொழுது எடுக்கப்பட்ட படம் தனது மொபைல் போனில் உள்ளதாகக் கூறி எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை கொண்டு வந்து காட்டினார். அந்தப் புகைப்படத்தை நீங்கள் எப்பொழுது எடுத்தீர்கள் எனக் கேட்ட பொழுது, “எனக்கு என்னுடைய நண்பன் அனுப்பினார்” எனக் கூறினார். அந்தப் புகைப்படம் ஒன்றுதான் ஆதாரம் என மக்களும் நம்மிடம் தெரிவித்தனர். மேலும் அந்தப் புகைப்படம்தான் தங்களை பெரும் பயத்தில் ஆழ்த்தியதாகவும் அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். அந்தப் புகைப்படத்தை அந்த இடத்திலேயே ஆய்வு செய்த பொழுது அந்தப் புகைப்படம் இணையதளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்யப்பட்டது தெரியவந்தது. அதாவது அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்ட அந்த மின் கம்பத்திற்குப் பின்னால் உள்ள வீடு மற்றும் அந்தப் பகுதியில் உள்ள மரம் எதுவும் புகைப்படத்தில் காணவில்லை. இதுவே இந்தப் புகைப்படம் போலியானது என்பதற்குப் போதுமான சான்றாகும் என மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. அங்கு கூடியிருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்து பிரச்சனை எனக் கருதி அங்கு வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் நம்முடன் சேர்ந்து கொண்டு அவரும் மக்களுக்கு தெளிவுபடுத்தினார். பிறகு அந்தப் பகுதியைச் சார்ந்த சகோதரி ஒருவர் எங்கள் தெருவிற்கும் வந்து பிரச்சாரம் செய்யுங்கள் எனக் கேட்டுக் கொண்டதை அடுத்து அந்த இடத்திற்கும் சென்று பிரச்சாரம் செய்யப்பட்டது.
அல்லாஹ்வின் அருளால் நம்முடைய பிரச்சாரத்தைக் கண்டு அந்தப் பகுதி மக்கள் நம்முடைய ஜமாஅத்தின் நிர்வாகிகளின் தொடர்பு எண்களைப் பெற்றுக்கொண்டு ஓரளவிற்கு இயல்பு நிலைக்குத் திரும்பியதை நம்மால் அந்த இடத்திலேயே உணர முடிந்தது.
சகோதர, சகோதரிகளே! தங்களது பகுதியிலும் பேய், பிசாசு நடமாட்டம் உள்ளது என்ற புரளி கிளம்புமானால் சம்பந்தப்பட்ட சகோதரர்கள் அருகில் உள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளைகளைத் தொடர்பு கொண்டால் போலியான பேய்களை அடித்துவிரட்ட இந்த தன்னலமற்ற ஜமாஅத்தின் கிளை நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பேச்சாளர்களும் தயாராக உள்ளார்கள் என்பதை இதன் வாயிலாக தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.
இந்தக் கம்ப்யூட்டர் காலத்திலும் கூட இந்தஅளவிற்கு பேய், பிசாசு பயம் என்ற மூடநம்பிக்கை மேலோங்கியுள்ளது. இது போன்ற மூடநம்பிக்கைகள் நமது இஸ்லாமிய சகோதரர்கள் மத்தியிலும் ஒரு காலத்தில் மிகுதியாக குடிகொண்டிருந்தது. ஆனால் இந்த சத்தியப் பிரச்சாரத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கள் மத்தியில் கொண்டு சென்றதன் விளைவாக முஸ்லிம்கள் மத்தியில் நிலவி வந்த பேய் பிசாசு மூடநம்பிக்கை தற்போது பெருவாரியாக ஒழித்துக்கட்டப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்…..
இறைவனுடைய இறைமறையையும்,நபிகளாரின் வழிமுறையையும் பின்பற்றக்கூடிய ஒரு முஸ்லிமுக்கு இத்தகைய பேய் பயம் ஏற்படாது. ஏனெனில் இறந்தவருடைய ஆவிதான் பேயாய் அலைகிறது என்ற நம்பிக்கையை இஸ்லாம் தகர்த்துவிடுகின்றது. யார் இறந்துவிட்டாரோ அவருக்கும் இந்த உலகத்திற்கும் மத்தியில் பலமான ஒரு திரை உள்ளது என்று திருக்குர்-ஆனில் இறைவன் சொல்வதை நம்பிய எந்த ஒரு முஸ்லிமும் பேய் பிசாசு இருப்பதாக எண்ணி பயப்படமாட்டான் என்பதுதான் நிதர்சனமான உண்மை.
அந்த அடிப்படையில் இது போன்ற பேய் பீதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியில் பேய் பயத்தால் பீதியடைந்திருந்த ஒரு வீட்டினுள் இரவு தனியாகச் சென்று யாரும் இல்லாத அந்த கட்டடத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளை நிர்வாகி ஒருவர் படுத்து உறங்கி எழுந்து பேய் பயத்தைப் போக்கினார்.
மறுநாள் அவருக்கு எந்த தொந்தரவும் ஏற்படவில்லை என்று அறிந்த பேய் பீதியில் உறைந்த மக்கள், அவர் எதுவும் கவுச்சியான உணவுகள் உட்கொள்ளாததால்தான் பேய் அவரைப் பிடிக்கவில்லை. கறி, அல்லது மீன் சாப்பிட்டு அந்த கட்டடத்தில் உறங்குவாரேயானால் பேய் பிடித்துக் கொள்ளும் என்று பயமுறுத்த, மறுநாள் அவர் கறி உண்டுவிட்டு படுத்துறங்கி எழுந்து வந்தார்.
அதன் மூலம் அந்தப் பகுதி மக்களுக்கு பீதி தெளிந்தது. அதுபோல திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விஷயத்தில் களத்தில் குதித்து மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது பாராட்டத்தக்க ஒரு விஷயம்.
அதுமட்டுமல்லாமல், பேய் பிடித்ததாக சொல்லி வரக்கூடிய பல கேஸ்களை மாநிலத்தலைமையகத்தில் வைத்து அது எந்தப் பேய்(?) என்பதையும், எவ்வகையான பேய்(?) என்பதையும், அது கல்யாணப் பேயா? அல்லது வேறு காரியம் சாதிப்பதற்காக வந்த பேயா? என்பதையும் ஆய்வு செய்து கவுன்சிலிங் மூலமாக பல பேய்கள் தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைமையகத்தில் வைத்தே விரட்டப்பட்டுள்ளன என்ற சுவாரசியமான செய்தியும் உள்ளது.
எனவே இத்தகைய மூடநம்பிக்கைகளை ஒழிக்க நாம் களம் காணுவதுடன், இதன் மூலம் தூய இஸ்லாத்தையும் மக்கள் மத்தியில் நாம் எத்திவைக்க வேண்டும் என்பதையும் இதன் வாயிலாக உங்களுக்குக் கோரிக்கையாக வைத்துக் கொள்கின்றோம்.