Wednesday, June 26, 2013

திமுகவை மமகட்சி ஆதரிப்பது ஏன்?

திமுகவை மமகட்சி ஆதரிப்பது ஏன்?


அரசியல்வாதிகள் தங்கள் நடவடிக்கைகளுக்குச் சொல்லும் காரணம் ஒருகாலத்திலும் உண்மையானதாக இருக்காது.

எங்களின் ஆதாயத்துக்கு எது சரிப்பட்டு வருமோ, அந்த முடிவை எடுத்துள்ளோம் என்று அவர்கள் சொல்வது தான் சரியாக இருக்கும்.

இவர்கள் சொல்லும் போலியான மற்ற காரணங்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றாலும் இந்த நடவடிக்கை சமுதாயத்துக்காக அல்லது நாட்டு மக்களுக்காக அல்லது தமிழுக்காக என்று எதையாவது வெட்கமில்லாமல் சொல்வது அரசியல்வாதிகளின் வாடிக்கையாக இருக்கிறது.

மமகட்சி என்பதும் ஒரு அரசியல் கட்சியாக இருப்பதால், பல வகைகளில் கடைசித் தரத்தில் உள்ள கட்சி என்பதால் இடஒதுக்கீட்டிற்காக ஆதரித்தோம் என்கிறார்கள்.

இடஒதுக்கீட்டிற்காக ஆதரிப்பது என்றால் கருணாநிதி தமிழக முதல்வராகவோ அல்லது பிரதமராகவோ இருக்கிறாரா? அந்த அடிப்படையில் அவர் வாக்குறுதி கொடுத்தால் இடஒதுக்கீட்டிற்காக ஆதரித்தோம் என்பதில்  கொஞ்சமாவது அர்த்தமிருக்கும். மத்திய அரசில் இப்போது அங்கம் வகிக்காத கருணாநிதி இடஒதுக்கீட்டிற்காக என்ன செய்வார் என்பதற்காக ஆதரித்தார்கள்?

மத்திய அரசை வற்புறுத்துவதற்காக ஆதரித்தார்கள் என்றால், மத்திய அரசில் அங்கம் வகிக்கும்போது கருணாநிதி இடஒதுக்கீட்டிற்காக கடிதம் எழுதினாரே, அப்போது திமுகவை ஆதரிக்கவில்லையே ஏன்?
இரண்டாண்டுகளுக்கும் மேலாக அதிமுகவினரைவிட அதிகமாக ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடித்துவிட்டு ஒரே நாளில் அந்தர்பல்டி அடிக்கும் நிலையை அல்லாஹ் இவர்களுக்கு ஏற்படுத்தினான் என்று தான் நமக்குத் தெரிகிறது.

34 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றால்தான் ஒருவர் ராஜ்யசபா உறுப்பினர் ஆக முடியும். காலியான 6 இடங்களிலும் அதிமுக வெற்றி பெற முடியாது. அதிமுகவிடம் 150 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு ராஜ்யசபா  எம்பிக்கு 34 வாக்குகள் வீதம் நான்கு பேரை அதிமுக வெற்றி பெறச் செய்வதற்கு 136 உறுப்பினர்கள் போதும். ஆனால் மேலதிகமாக 14 உறுப்பினர்கள் உள்ளனர்.
ஐந்து பேரை தேர்வு செய்ய அதிமுக விரும்பினால், 170 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படும். ஆனால் அதிமுகவிடம் 150 உறுப்பினர்கள் உள்ளதால் மேலும் 20 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். பிறகட்சிகளின் ஆதரவைப் பெற்று ஐந்தாவது உறுப்பினரையும் தேர்வு செய்வது அதிமுகவுக்குச் சிரமமானதல்ல.

ஜெயலலிதா நான்கு பேரை நிறுத்தினால் மமகட்சி, புதிய தமிழகம், சரத்குமார், தமிழரசன், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட யாருடைய ஆதரவும் அதிமுகவுக்குத் தேவைப்படாது. நான்கு பேரை தேர்வு செய்வதற்குத் தேவையான உறுப்பினர்களைவிட மேலதிகமாக 14 உறுப்பினர்கள் இக்கட்சியிடம் உள்ளனர்.

நான்கு பேர் போக மீதமுள்ள வாக்குகளை தங்களுக்குத் தரவேண்டும்  என்ற  கோரிக்கைகளை கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து அதிமுகவிடம் வைத்தனர். டெல்லி சென்ற ஜெயலலிதாவை நேரில் சந்தித்தும் இதை வலியுறுத்தினர்.

அதிமுக ஐந்து பேரை நிறுத்தினால், பற்றாக்குறையான வாக்குகளுக்காக நம்மை அணுகுவார்கள். தகுந்த முறையில் பேரம் பேசலாம், கம்யூனிஸ்ட்டுகளுக்கு விட்டுக் கொடுத்தால் அதிமுகவுக்கு நம் தயவு தேவைப்படாது என்று மம கட்சியினர் கதி கலங்கி நின்றார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்த பின்னரும் ஜெயலலிதா ஐந்து வேட்பாளர்களை நிறுத்தினார். மமகட்சி வட்டாரம் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடியது.

அதிமுக அணுகியது, திமுக அணுகியது என்றவாறு செய்திகளைக் கொடுத்தார்கள். 

ஜெயலலிதாவிடமிருந்து விரைவில் அழைப்பு வரும் என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்கள். இரண்டு  நாட்கள்கூட இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஜெயலலிதா நிறுத்திய ஐவரில் ஒருவரை வாபஸ் பெற்று நால்வர் மட்டுமே அதிமுக வேட்பாளர் என்று முடிவை மாற்றினார். தனது எஞ்சிய வாக்குகளை கம்யூனிஸ்ட்டுகளுக்கு வழங்கப்போவதாகவும் அறிவித்தார்.

ஜெயலலிதா நான்கு பேரை நிறுத்தினால் தனது ஓட்டுக்கள் மூலமாகவே வென்றுவிடுவாரே? அதைவிட அதிகமாகவும் அவரிடம்  ஓட்டுக்கள் உள்ளதே? இனிமேல் நம்மைச் சீண்ட மாட்டார்களே? 
கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஜெயலலிதாவின் ஆதரவு கிடைத்தால், கம்யூனிஸ்டுகளிடம் என்ன பேரம் பேச முடியும் என்று குழம்பிப் போனார்கள்.

தனது குடும்பத்தினருக்காக மட்டுமே கட்சி நடத்தும் கருணாநிதிக்கு மட்டுமே இவர்களின் ஆதரவு தேவையாக இருந்தது. மகளை வெற்றி பெறச் செய்வதற்காக அவர் எது வேண்டுமானாலும் செய்வார். எந்த வாக்குறுதியையும் கொடுப்பார். (பின்னர் அல்வாவும் கொடுப்பார்)

ஒரு பொருள் பலருக்கும் தேவைப்படும் போதுதான் எதையும்  நல்ல விலைக்கு விற்க முடியும். ஒரேயொரு நுகர்வோருக்கு மட்டுமே விற்பது என்றால் பெரிய அளவில் பேரம் பேச இயலாது. ஏதோ வந்த வரைக்கும் லாபம் என்ற நிலைக்கு அவர்களின் ஓட்டு மதிப்பை அல்லாஹ் குறைத்து விட்டான்.
ஜெயலலிதா ஐந்து பேரை நிறுத்துவதாக அறிவித்து, ஐந்து பேரை வெற்றி பெற வைக்க முடியும் என்ற நிலையிலும் ஜெயலலிதா அதைச் செய்யவில்லை.

பிறர் தயவால் ஜெயலலிதா ஜெயித்தார் என்ற விமர்சனம்தான் ஜெயலலிதாவை அதிகம் கோபப்படுத்தும் என்பது தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

காங்கிரஸோடு கூட்டணி வைத்து அவர் ஜெயித்தபின், எங்களால்தான் அதிமுக ஜெயித்தது என்று காங்கிரஸ் சொன்னபோது சோனியாவை அவரது பூர்வீகப் பெயரைச் சொல்லி கிழிகிழி என்று ஜெயலலிதா கிழித்தார்.

தேமுதிகவுடன் கூட்டணி வைத்து ஜெயித்த ஜெயலலிதாவுக்கும், தேமுதிகவுக்கும் பெரிய பிரச்சினை ஏதும் இல்லாமல் இருந்தது. தேமுதிக மூலம்தான் அவர் ஜெயித்தார் என்ற பிரச்சாரம் காரணமாகத்தான் அக்கட்சியை பிரதான எதிரியாக ஆக்கினார்.

பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை என்னால்தான் நீ ஜெயித்தாய் என்று இருவரும் சொல்லிக் கொள்ள முடியும். வாக்களித்தவர்கள் யாருக்காக வாக்களித்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாது. இவரது வாக்கு அவருக்கும் அவரது வாக்கு இவருக்கும் பயன் பட்டிருக்கலாம்.

ஆனால் ராஜ்யசபா தேர்தல் என்பது சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவதாகும். அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற கம்யூனிஸ்டுகள் உதவினாலும், தங்களது தயவில்தான் அதிமுக வென்றது எனக்கூறினால் அதை மறுக்க இயலாது. எங்கள் ஆதரவில்தான் அதிமுக வென்றது என மமகட்சியும் கூறலாம். மமகட்சியின் இருவர் வாக்களித்து இப்படிக் கூறினால் ஜெயலலிதாவால் அதை மறுக்க இயலாது.

பிறர் தயவில் வெற்றி பெற்றுள்ளதை ஒரு போதும் ஒப்புக் கொள்ளாத  ஜெயலலிதா ஒரு ராஜ்யசபா எம்.பி.க்காக அல்லரை சில்லரைகளிடம் ஏன் கெஞ்ச வேண்டும் என்ற ரீதியில்தான் முடிவு எடுப்பார்.
மேலும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போடுவதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு எம்.பி.சீட் கேட்டார்கள் என்றால் இது ரொம்ப ஓவர் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

ஒருவன் 100 ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கச் செல்லும்போது இரண்டு ரூபாய் குறைகிறது. அருகில் இருந்த ஒருவர் நான் அதைத் தருகிறேன் என்று கூறி இரண்டு ரூபாயைத் தருகிறார். இதனால் அந்தப் பொருளை அவரால் வாங்க முடிகிறது. மறுநாள் அதைச் சொல்லிக்காட்டி இந்தப் பொருள் வாங்க உனக்கு நான்தான் உதவினேன். எனவே என்னிடம் 2 ரூபாய் உள்ளது. நீ 98 ரூபாய் போட்டு இதை எனக்கு வாங்கித் தரலாமே என்று கேட்க  முடியுமா?

ராஜ்யசபாவிற்கு, இரண்டு ஓட்டைப் போட்டுவிட்டு ஒரு எம்.பி. (34 எம்.எல்.ஏ.க்கள் மதிப்புடையது) கேட்டால் இது சரிப்பட்டு வராது. இப்படிப் பேரம் பேசும் நிலை சில்லரைக் கட்சிகளுக்கு இருக்கக் கூடாது என்பதற்காக  ஜெயலலிதா இம்முடிவை எடுத்தார். கம்யூனிஸ்ட்டுகளுக்கு தனது 15 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுக்களைப் போட்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டுச் சேர நேர்ந்தால் அவர்களின்  பேரம் பேசும் பலத்தை வெகுவாகக் குறைத்துவிட்டார்.

கருணாநிதிக்கு இது மகளின் பிரச்சினை என்பதால், மமகட்சிக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்கலாம். இரண்டு ஓட்டிற்காக இரண்டு எம்.பி.க்கள் சீட்டு தருவதாகவும் சொல்லியிருக்கலாம். என்ன பேசப்பட்டது என்பது பேசியவர்களுக்குத்தான் தெரியும்.

இவர்கள் என்ன வாங்கியிருந்தாலும், ஜெயலலிதாவின் அதிரடி முடிவால் பெரிய அளவில் பேரம் பேசும் வாய்ப்பை அல்லாஹ் பறித்து விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.

1 கருத்துரைகள் :

இந்த ஜால்டரா அடிக்கவி்ல்லை என்றால் 8 நமிடம் பேச முடியுமா? இனி வாத்தியார் அடிக்கடி வெளி நாடப்பு செய்ய வேண்டியிருக்கும்.

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.