Thursday, December 15, 2011

பெண்கள் தேர்தலில் போட்டியிடலாமா?

பெண்களை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தக் கூடாது என்பது சரிதான். அது போல் முஸ்லிமல்லாதவர்களை ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தக் கூடாது என்றும் மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது.

நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறைவனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது. அல்குர்ஆன் (3 : 28)

இறை மறுப்பாளர்களை நமது பொறுப்பாளர்களாக ஆக்கிக் கொள்ளக் கூடாது என்று இவ்வசனம் கூறுகிறது. இதன்படி பார்த்தால் நாடாளுமன்றம், சட்டமன்றம், மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் நாம் பெரும்பாலும் வாக்களிக்கக் கூடாது என்ற முடிவுக்கு வர வேண்டும். அங்கொன்றும் இங்கொன்றுமாக சில முஸ்லிம்கள் போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் தான் வாக்களிக்க வேண்டும்.

ஒரு வகையில் பார்த்தால் அதுவும் கூடாது என்று தான் கூற வேண்டும். ஏனெனில் முஸ்லிமுக்கு வாக்களித்தாலும் அந்த முஸ்லிம் கருனாநிதியையோ ஜெயலலிதாவையோ விஜயகாந்தையோ முதல்வராக ஆக்குவதற்குத் தான் போட்டி இடுகிறார். இந்த அடிப்படையில் பார்த்தால் நாம் யாருக்கும் வாக்களிக்கக் கூடாது என்று முடிவு செய்ய வேண்டும். ஆனாலும் இதை நாம் சரியான முறையில் புரிந்து கொண்டிருப்பதால் முஸ்லிமல்லாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு வாக்களித்துத் தான் வருகிறோம்.

அதாவது மேற்கண்ட கட்டளை இஸ்லாமிய அரசு அமையும் வாய்ப்பு உள்ள நாட்டுக்கும் அதற்கேற்ற காலச் சூழ்நிலைக்கும் உரிய சட்டமாகும். இஸ்லாமிய அரசு உருவாக வாய்ப்பு இல்லாத போது மற்றவர்களைத் தான் தேர்ந்தெடுக்க முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள் படு மோசமானவர்களை விட்டு விட்டு அதற்கு அடுத்த நிலையில் உள்ளவர்களைத் தான் தேர்வு செய்ய இயலும். நாம் விரும்பினாலும் முஸ்லிம் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய முடியாத போது அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான்.

மேற்கண்ட வசனத்தில் அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர என்று விதிவிலக்கு கூறப்படுகின்றது. அதாவது நம்முடைய பாதுகாப்பிற்காக வேண்டி ஒரு இறை மறுப்பாளரை ஆட்சித் தலைவராக ஏற்றுக் கொள்ள வேண்டிய சூழல் வந்தால் அவரை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை என்று இவ்வசனம் கூறுகின்றது.

இது போல் இஸ்லாம் கூறுகின்ற முறையில் ஆட்சியாளர்களாக ஆண்களைத் தேர்வு செய்ய முடியாமல் பெண்களைத் தேர்வு செய்யும் நிலை ஏற்பட்டால் அதே நிர்பந்தம் காரணமாக பெண்களுக்கு வாக்களிக்கலாம். பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட உள்ளாட்சித் தலைவர் பதவிக்கு பெண்களைத் தான் தேர்வு செய்ய முடியும்.

நம்முடைய சமுதாயப் பெண்கள் போட்டியிடும் போது ஆண்களுடன் தனித்திருத்தல் போன்றவற்றைத் தவிர்க்கும் வகையில் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும்.