இஸ்லாத்தைத் தவிர ஏனைய மதங்கள் அனைத்தும் இசையை ஒரு வணக்கமாகவும் வழிபாடாகவும் கருதுகின்றன. அதனால் தான் கோயில்களிலும் சர்ச்சுகளிலும் இசைக் கருவி வாத்தியங்கள் வாசிக்கப் படுகின்றன. மேள தாளங்கள் முழங்கப் படுகின்றன.
இதற்கு இஸ்லாம் ஒரு விதிவிலக்கு! இஸ்லாம் இதை எதிர்த்து நிற்கின்றது. எனவே உலகெங்கிலும் உள்ள பள்ளிவாசல்களில் ஒரு பள்ளிவாசலில் கூட இன்னிசைப் பாட்டுகள் இடம் பெறுவதில்லை.
இந்த அடிப்படையில் தான் தொழுகைக்கு அழைக்கப்படும் இஸ்லாமிய அழைப்பு என்பது மணியோசையாகவோ, ஊதியின் நாதமாகவோ இல்லாமல் ஒரு வித்தியாசமான, செவிக்கு இதமான பாங்கோசையாக அமைந்திருக்கின்றது.
மக்களின் எண்ணிக்கை அதிகமான போது, அவர்கள் அறிந்திருக்கின்ற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். அப்போது நெருப்பை மூட்டுவதன் மூலமோ மணி அடிப்பதன் மூலமோ அறிந்து கொள்ளலாம் என கருத்து சொல்லப்பட்டது. ஆனால் பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 606
மாற்று மத நண்பர்கள் கூட தங்கள் திருமணம் மற்றும் இன்னபிற திருவிழாக்களின் ஊர்வலங்கள் பள்ளிக்கு அருகில் வரும் போது மேள தாளங்களை, இசை வாத்தியங்களை நிறுத்திக் கொள்கின்றார்கள். அந்த அளவுக்கு இசைக்கும் இஸ்லாத்திற்கும் தூரம் என்று மாற்று மத நண்பர்கள் கூட விளங்கி வைத்திருக்கின்றனர்.
இப்படிப்பட்ட இந்த விளக்கம் முஸ்லிம்களுக்குத் தெரியாமல் போய் விடுமா? நிச்சயம் இவர்களுக்கு நன்றாகத் தெரியும்.
அதனால் தான் இஸ்லாம் தடுத்துள்ள இன்னிசைப் பாட்டுக் கச்சேரிகள், மேள தாளங்கள், கரகாட்டங்கள், வெடி முழக்கங்கள், நடிகர் நடிகையரின் நடனங்கள் போன்ற கூத்துக்களை எல்லாம் பள்ளிவாசலில் செய்யாமல் தர்ஹாக்களில் அரங்கேற்றி அவற்றின் மீது இவர்கள் கொண்டுள்ள மோகத்தையும் தாகத்தையும் தணித்துக் கொள்கின்றனர்.
இந்த மோகத்தின் வெளிப்பாடாகத் தான் கந்தூரியில் யானை கொடி ஊர்வலமும், வானை நோக்கிப் பறக்கும் வெடி முழக்க வெறித்தனங்களும் அரங்கேறின. தொடர்ந்து நாயகம் வாப்பா கொடி, அப்துர்ரஹ்மான் தங்கள் கொடி, பஸீரப்பா கொடி போன்ற கொடியேற்றங்களும் கொண்டாட்டங்களும் நடந்தேறுகின்றன.
ஆனை மீது ஆலிம்சா:
ஐதுரூஸ் தங்கள் கொடி ஊர்வலத்தில் வாண வேடிக்கைகளும், டிஜிட்டல் மியூசிக்கும் சிறப்பம்சங்கள் என்றால், நாயகம் வாப்பா எனப்படும் கொடி ஊர்வலம் அதை மிஞ்சும் வகையில் அமைந்திருக்கும்.
துருக்கி குஞ்சா தொப்பி போட்ட கீழக்கரை கிழடுகளின் சுழல் தப்ஸ் ஆட்டமும், வாலை மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாட்டு மெட்டில் தூள் பறத்தும் பேண்டு வாத்தியமும், அவற்றுக்குத் தக்கவாறு விசில் அடித்துக் கொண்டு ஆட்டம் போட்ட சிறுவர்கள், இளைஞர்களின் படை பட்டாளங்களும் நாயகம் வாப்பா என்ற கொடியின் சிறப்பம்சங்கள் ஆகும்.
இவை அத்தனைக்கும் மெருகூட்டுவது போல் ஊர்வலத்தில் வந்த யானையின் மீது மதரஸாவில் ஏழு வருடம் படித்து பட்டம் பெற்ற ஆலிம்சா ஒருவர் அமர்ந்து கொண்டு உலா வருவதுதான். இந்தத் தீமையிலிருந்து மக்களைத் தடுக்க வேண்டிய ஆலிம்கள் இதில் பங்கெடுத்துக் கெடுக்க வேண்டிய நிலைக்குப் போய் விட்டதால் தான் இந்தக் கொடியேற்றக் கொண்டாட்டங்களும், வெடி முழக்க வெறித்தனங்களும் வீரியம் பெற்றுள்ளன.
நாயும் மணியும் இருக்கும் ஜமாஅத்தில் மலக்குகள் உடன் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 3949, திர்மிதீ 1625, நஸயீ 5127, அபூதாவூத் 2192, அஹ்மத் 7250
மணி ஷைத்தானின் இசைக் கருவியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 3950, அபூதாவூத் 2193, அஹ்மத் 8428
இந்த ஹதீஸ்களில் சாதாரண மணி ஓசையையே ஷைத்தானின் இசைக் கருவி என்று நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கும் போது இந்தப் பேண்டு வாத்தியங்களைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை.
இந்த ஷைத்தானியப் படை தான் கொடியைத் தூக்கிக் கொண்டு வீதிகளில் உலா வருகின்றனர். இதற்கு ஓர் ஆலிம்சாவின் தலைமை வேறு!
விடலைப் பையன்களின் விசில் ஓசைகள்! குமரிப் பெண்களை நோக்கி அவர்கள் பாய்ச்சுகின்ற காமப் பார்வைகள்! கால்நடைகளும் பறவைகளும், தொட்டிலிலில் தூங்கும் குழந்தைகளும், நோயாளிகளும் அலறும் வண்ணம் முழங்கும் வெடிச் சப்தங்கள்! இத்தனையும் வணக்கம் என்ற பெயரில் அரங்கேறுகின்றன.
இடி முழக்கம் போன்ற இசைகளையும், வெடி முழக்கங்களையும், கரகாட்டங்களையும், கானா கச்சேரிகளையும் சாதாரண முறையில் அரங்கேற்றினால் ஈமான் உள்ள (?) இந்த ஆலிம்கள் சீறிப் பாய்வார்கள்.
அவ்லியாக்கள் பெயரில் அரங்கேற்றினால் ஆலிம்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். அவர்கள் அதற்கு ஆதரவாக யானை மீதேறி உளம் பொங்க, உவகை பெருக்கோடு வலம் வந்து ஆசி வழங்குவார்கள்.
இத்தகைய அலங்கோலங்கள், அனாச்சாரங்கள் மூலம் இந்த ஆலிம்களும் தர்ஹா டிரஸ்டிகளும், தரீக்கா குருட்டு பக்த கோடிகளும் மக்களை அறியாமைக் கால இருட்டிற்கு அழைத்துச் செல்கின்றனர். அறியாமைக் கால மக்களின் வணக்கம் இப்படித் தான் அமைந்திருந்தது.
சீட்டியடிப்பதும், கை தட்டுவதும் தவிர (வேறெதுவும்) இந்த ஆலயத்தில் அவர்களின் தொழுகையாக இருக்கவில்லை. “நீங்கள் (ஏக இறைவனை) மறுத்துக் கொண்டிருந்த காரணத்தினால் வேதனையை அனுபவியுங்கள்!” (என்று கூறப்படும்)
அல்குர்ஆன் 8:35
அல்லாஹ் எவற்றையெல்லாம் கயமைத் தனம் என்று கழித்துக் கட்டுகின்றானோ அவற்றைத் தான் இவர்கள் அவ்லியாக்களின் பெயரால் மார்க்க வணக்கம் என்று கருதி செய்து கொண்டிருக்கின்றனர்.
தீமைகளின் தீய கூடாரம்
இந்தத் தீமைகளுக்கு அஸ்திவார மாகவும் ஆணி வேராகவும் தர்ஹாக்கள் தான் அமைந்துள்ளன.
சுருக்கமாகச் சொல்லப் போனால் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களுக்கு எதிரான செயல்கள் நடக்கும் இணை (ஷிர்க்) இல்லங்களாக இவை எழுந்து நிற்கின்றன. இன்னும் சொல்லப் போனால் கோயில்களுக்கு மறு பெயர் தான் தர்ஹா என்று கூறி விடலாம்.
அங்கே சிலை வணங்கப் படுகின்றது. இங்கே கல்லறை வணங்கப்படுகின்றது. இரண்டுக்கும் வித்தியாசம், அங்கே நட்டி வைக்கப்பட்டிருக்கின்றது. இங்கே படுக்க வைக்கப்பட்டிருக்கின்றது.
அங்கேயும் குத்து விளக்கு! இங்கேயும் குத்து விளக்கு!
அங்கே சூடம்! இங்கே பத்தி, சாம்பிராணி!
அங்கே திருநீறு! இங்கே சந்தனம்!
அங்கே பால் அபிஷேகம்! இங்கே சந்தன அபிஷேகம்!
அங்கே தேங்காய், வாழைப்பழம்! இங்கே வெறும் வாழைப்பழம்!
அங்கே சிலைகளைச் சுற்றி வலம் வருதல்! இங்கே கப்ருகளைச் சுற்றி வலம் வருதல்!
அங்கே தேர்த் திருவிழா! இங்கே சந்தனக் கூடு திருவிழா!
அங்கேயும் யானை! இங்கேயும் யானை!
அங்கே யானையின் நெற்றியில் சூலம்! இங்கே யானையின் நெற்றியில் பிறை!
அங்கேயும் கொடியேற்றம்! இங்கேயும் கொடியேற்றம்!
அங்கே பூசாரி! இங்கே ஆலிம்சா!
அங்கும் வெடி, வாண வேடிக்கைகள்! இங்கும் வெடி, வாண வேடிக்கைகள்!
அங்கு சிலைகளுக்கு மேல் பட்டுப் புடவைகள், பூமாலைகள்! இங்கு கப்ருகளுக்கு மேல் பச்சைப் போர்வைகள், பூமாலைகள்!
திருவிழாவின் போது மேள, தாள வாத்தியக் குழுவினர் ஒரு குவார்ட்டரை உள்ளே தள்ளி விட்டு அந்த நாற்றத்துடன் மேள, தாளம் முழங்கி நாதஸ்வரம் ஊதுவர்.
அதே குழுவினர் தர்ஹாவுக்கும் அழைக்கப்படுகின்றனர். (அண்மையில் மேலப்பாளையத்தில் பஸீரப்பா கந்தூரியின் போது இக்குழுவினர் அழைக்கப்பட்டனர்)
கோயில் கொடை விழாக்களில் டிஜிட்டல் வாத்தியங்கள் உண்டு! இங்கும் டிஜிட்டல் இசை வாத்தியங்கள் உண்டு!
கோயிலை விட இங்கு இசைக் குழுவினர் கூடுதலாக அழைக்கப் படுவர். கீழக்கரை கிழடுகளின் தப்ஸ் குழு, கயிறு சுற்றும் தயிரா குழு, பக்கீர் குழு போன்ற பல்வேறு குழுக்கள் இங்கு அழைக்கப்படுகின்றன. அந்த வாத்தியக் குழுவினர் குவார்ட்டரை உள்ளே இறக்கி விட்டு ஊதுவார்கள். இவர்கள் கஞ்சாவைக் கசக்கி அடித்துக் கொண்டு கொட்டு அடிப்பார்கள். அவ்வளவு தான் வித்தியாசம்.
கோயில் விழாக்களின் போது கிடா அறுத்து சோறு படைப்பார்கள். அது போல் இங்கும் கிடா அறுத்து கடாலப் பானை வைத்து சோறு படைத்து நேர்ச்சை விநியோகம் செய்வார்கள்.
இங்கே பட்டியலிட்ட இந்தக் காரியங்களை அல்லாஹ்வுடைய பள்ளியில் வைத்து அரங்கேற்ற முடியுமா? நிச்சயமாக அரங்கேற்ற முடியாது. அதற்காகத் தான் இந்த தர்ஹாக்கள் எனும் தரித்திர மண்டபங்கள்.
தர்ஹாக்களுக்கு அனுமதி பள்ளிவாசலுக்குத் தடை:
இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில் பள்ளிவாசல்களுக்குத் தொழ வருவதற்குத் தடை விதிக்கும் இந்த ஆலிம்கள் தர்ஹாக்களுக்குப் பெண்கள் வருவதற்குத் தாராளமாக வாசல்களைத் திறந்து விட்டிருக்கின்றனர். அதனால் இந்த தர்ஹாக்கள் விபச்சாரத்திற்கு வலை விரிக்கும் வலைத் தளங்களாக, விடுதிகளாக மாறியிருக்கின்றன.
இப்படி தீமைகளின் ஊற்றுக்கள் பெருக்கெடுத்து ஓடும் திராவக அருவிகளாக தர்ஹாக்கள் அமைந்திருக்கின்றன. இதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த இடங்களைச் சபிக்கின்றார்கள்.
சாபத்திற்குரிய சன்னிதானங்கள்:
நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன் நோயுற்றிருந்த போது, “யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் மண்ணறைகளை வணக்கத்தலங்களாக ஆக்கிக் கொண்டனர்” என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையென்றால் நபி (ஸல்) அவர்களின் கப்ரைத் திறந்த வெளியில் நபித்தோழர்கள் வைத்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப் பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1244
உம்மு ஹபீபா (ரலி) அவர்களும், உம்மு ஸலமா (ரலி) அவர்களும் தாங்கள் அபீசீனியாவில் கண்ட, உருவங்கள் இடம் பெற்ற கோவிலைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து மரணித்து விட்டால் அவரது அடக்கத்தலத்தின் மேல் ஒரு வணக்கத்தலத்தை அவர்கள் எழுப்பி விடுவார்கள். அந்த நல்லவர்களின் உருவங்களையும் அதில் பதித்து விடுவார்கள். மறுமை நாளில் அல்லாஹ்வின் சன்னிதியில் படைப்பினங்களிலேயே அவர்கள் தாம் மிகவும் கெட்டவர்களாவர்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரி 427, 434, 1341, 3873, முஸ்லிம் 822
இன்று தர்ஹாக்களில் உழைக்காமல் ஊது பத்திகளைக் கொளுத்திக் கொண்டு, உண்டியலை மட்டும் நம்பிக் கொண்டு, தர்ஹாக்களின் பக்கம் மக்களை அழைத்துக் கொண்டு பரம்பரை ஹக்தார்கள், டிரஸ்டிகள் என்று வயிறு வளர்க்கும் பண்டார சன்னிதானங்களையும், அவர்களுக்குத் துணை நிற்கும் பணக்கார சுகவாசிகளையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படைப்பினத்திலேயே கெட்டவர்கள் என்று கூறுகின்றார்கள்.
அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது சமுதாய மக்கள் எரி நரகத்திற்குச் சென்று விடக் கூடாது என்ற தூய கரிசனத்துடன், தூர நோக்குடன், தீர்க்க தரிசனத்துடன் இந்த தர்ஹாக்களை தரை மட்டமாக்க வேண்டும் என்று சொல்கின்றார்கள்.
“தரை மட்டத்திற்கு மேலுள்ள எந்த ஒரு கப்ரையும் தரை மட்டமாக்காமல் விட்டு விடாதே” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்கள்: முஸ்லிம் 1609, அஹ்மத் 1175, திர்மிதீ 970, அபூதாவூத் 2801
மக்கள் வரிசையாகக் கந்தூரிகள் கொண்டாடி நரகத்திற்குச் செல்வதற்குக் காரணமாக விளங்குவது இந்த தர்ஹாக்கள் தான். இந்த தர்ஹாக்கள் தரை மட்டமாக்கப்பட வேண்டும் என்ற நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பள்ளிவாசல்களில் ஆலிம்கள் சொல்வது கிடையாது.
ஆலிம்கள் இந்த சத்தியத்தை மறைப்பதுடன், தர்ஹாக்களில் போய் அதிலும் குறிப்பாக கந்தூரி தினத்தன்றே போய் பயான் செய்கின்றார்கள். பாழாய் போன இந்த இடங்களில் பயான் வேறு வாழ்கின்றது.
என்ன தான் இவர்கள் சத்தியத்தை மறைத்தாலும் இன்று ஏகத்துவத்தை விளங்கிய ஓர் இளம் தலைமுறை தோன்றியிருக்கின்றது.
அவர்கள் எதிர்காலத்தில் சமுதாய மக்களின் சம்மதத்துடன் இந்த தர்ஹாக்களை தரை மட்டமாக்கி விட்டு, அவற்றை பாடசாலைகளாக, தொழிற்பயிற்சிக் கூடங்களாக அல்லது வீடின்றி தவிக்கும் ஏழைகள் வசிக்கும் இடங்களாக மாற்றும் அந்த நாள் தூரத்தில் இல்லை, இன்ஷா அல்லாஹ்!
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.