Saturday, November 17, 2012

ஆஷூரா நோன்பு



ஆஷூரா நோன்பு
முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் நோற்கப்படும் நோன்பு ஆஷூரா நோன்பு எனப்படுகிறது.
ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன் இந்த நோன்பு கட்டாயமாக இருந்தது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் விரும்பியவர் நோற்கலாம் என்ற நிலைக்கு வந்தது. (ஹதீஸின் கருத்து)
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நுல்: புகாரி 1592
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்று மற்றவர்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது நபித்தோழர்கள், அல்லாஹ்வின் தூதரே! இந்த நாளை யூதர்களும், கிறித்தவர்களும் மகத்துவப்படுத்துகின்றனரே? என்று கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அடுத்த வருடம் அல்லாஹ் நாடினால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் எனக் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு வருவதற்குள் மரணித்து விட்டார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 1916
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளின் கடைசி வருடத்திலும் ஆஷூரா நோன்புக்குக் கட்டளையிட்டுள்ளார்கள். மேலும் யூதர்களும், கிறித்தவர்களும் இந்த நாளை மகத்துவப்படுத்துகின்றனரே என்று கேட்கப்பட்ட போது அவர்களுக்கு மாறு செய்யும் வகையில் 9, 10 ஆகிய இரு நாட்கள் நோன்பு நோற்பதாகக் கூறியுள்ளனர்.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆசைப்பட்ட இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.
முஸ்லிம்களும், கிறித்தவர்களும், யூதர்களும் மதிக்கின்ற பெரியார் மூஸா நபியாவார். இவர்கள் ஃபிர்அவ்னிடமிருந்து இந்த நாளில் தான் காப்பாற்றப்பட்டார்கள். இந்த நாளில் தான் ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டான்.
இந்த நோக்கத்திற்காகத் தான் இந்த நாளில் நோன்பு நோற்கப்படுகிறது என்பதை ஏராளமான ஹதீஸ்கள் விளக்குகின்றன. மூஸா நபி காப்பாற்றப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கத் தான் இந்த நோன்பு நோற்கிறோம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆனால் சில முஸ்லிம்கள் கர்பலா எனும் இடத்தில் ஹுசைன் (ரலி) கொல்லப்பட்டது இந்த நாளில் தான்; எனவே இந்த நோன்பு நோற்கிறோம் என்று நினைக்கின்றனர்.
ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதற்கும் இந்த நோன்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஹுஸைன் (ரலி) கொல்லப்பட்டதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எப்படி இந்த நாளில் நோன்பு நோற்றிருப்பார்கள்? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
மார்க்கத்தில் ஒரு காரியம் கடமையாகவோ, சுன்னத்தாகவோ ஆக வேண்டுமானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்தில் தான் ஆகுமே தவிர அவர்களுக்குப் பின்னால் உலகத்தில் என்ன நடந்தாலும் அதற்காக எந்த ஒரு வணக்கமும் மார்க்கத்தில் நுழைய இயலாது.
ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் காலத்திலேயே, இம்மார்க்கத்தை இன்று நான் முழுமைப்படுத்தி விட்டேன் (அல்குர்ஆன் 5:3) என்று அல்லாஹ் பிரகடனம் செய்து விட்டான்.

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.