Sunday, November 11, 2012

மாமனிதர் நபிகள் நாயகம் - முன்னுரை (தொடர் 1)


இந்த ஆக்கங்கள் சகோதரர் பிஜே அவர்கள் எழுதிய 'மாமனிதர் நபிகள் நாயகம்' என்ற நூலிலிருந்து வெளியிடப்படுகிறது.
மாமனிதர் நபிகள் நாயகம் - முன்னுரை (தொடர் 1):

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த நாகரீகமில்லாத சமுதாயத்தினர் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.

உலகில் உள்ள எல்லா மதங்களையும் ஆராய்ச்சி செய்து இது தான் சரியான மார்க்கம் என்று முடிவு செய்து அவர்களில் யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தூதராக நியமித்ததைக் கண்ணால் கண்டு விட்டு அவர்களை இறைத் தூதர் என்று நம்பினார்களா? என்றால் அதுவும் இல்லை.

திருக்குர்ஆனை அலசி ஆராய்ந்து பார்த்து விட்டு இது இறைவனின் வேதமாகத் தான் இருக்க முடியும் என்று முடிவு செய்து இஸ்லாத்தை ஏற்றார்களா? என்றால் அப்படியும் இல்லை. திருக்குர்ஆன் வசனங்களில் நூறில் ஒரு பகுதி அருளப்படுவதற்கு முன்பே பலர் இஸ்லாத்தை ஏற்று விட்டனர்.

மாறாக அவர்கள் முஹம்மது நபியைத் தான் கண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பது வருட வாழ்க்கையில் ஒரே ஒரு பொய் கூட சொல்லி அவர்கள் கண்டதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையும் ஏமாற்றியதாகவோ, யாருக்கும் அநீதி இழைத்ததாகவோ அவர்கள் அறிந்ததில்லை.

ஊரில் மிகப் பெரும் செல்வந்தராக இருந்தும் அதனால் ஏற்படும் செருக்கு எதனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அம்மக்கள் கண்டதில்லை. மாறாக தமது செல்வத்தைப் பிறருக்கு வாரி வழங்குவதில் இன்பம் காண்பவராகவே அவர்களைக் கண்டார்கள்.

சுயநலனில்லாத அவர்களின் பரிசுத்த வாழ்க்கையைத் தான் அம்மக்கள் கண்டார்கள்.

'நூறு சதவிகிதம் இவரை நம்பலாம்' என்று நபிகள் நாயகத்தின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை தான் இஸ்லாத்தை அவர்கள் ஏற்பதற்கு முதல் காரணமாக இருந்தது.

எந்த ஒரு மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் எவரது கடந்த கால வாழ்க்கையும் முழு அளவுக்குத் தூய்மையாக இருக்க முடியாது. மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையைத் தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில் 'நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது' என்ற சொல் வழக்கு இங்கு உள்ளது.

தாம் இறைத்தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் நபிகள் நாயகம் அவர்களுக்கு மட்டுமே இருந்தது.

இதை முன் வைத்தே இறைத்தூதர் என்பதை நிலை நாட்டுமாறு திருக்குர்ஆனும் அவர்களுக்குக் கட்டளையிட்டது.

'அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(அல்குர்ஆன் 10:16 )

எனவே இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்கு முன் நபிகள் நாயகத்தைத் தான் முதலில் அறிய வேண்டும்.
நபிகள் நாயகத்தை அறிந்து கொள்ள பல வரலாற்று நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அவை நபிகள் நாயகத்தின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக உயிரோட்டமில்லாத நடையில் உள்ளன. நபிகள் நாயகத்தின் குண நலன்களை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் வகையில் அவை அமையவில்லை.

நபிகள் நாயகம் அவர்களின் குண நலன்களைப் பற்றி எழுதப்பட்ட சில நூல்களில் பெரும்பாலும் கட்டுக் கதைகள் தான் உள்ளன. ஆதாரப்பூர்வமான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அவை அமையவில்லை.

இந்தக் குறையை நிறைவு செய்யும் வகையில் தான் மாமனிதர் நபிகள் நயாகம் என்ற நூலை வெளியிடுகின்றோம்.


நபிகள் நாயகத்தின் ஆளுமையை அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் உதவும் என்று பெரிதும் நம்புகிறோம்.

மாமனிதர் நபிகள் நாயகம்:

சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், ஆட்சித் தலைவர்கள், பயனுள்ள பல கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கியவர்கள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்கள், மாவீரர்கள், வாரி வழங்கிய வள்ளல்கள், பண்டிதர்கள் மற்றும் மதங்களைத் தோற்றுவித்தோர் என பல்லாயிரக்கணக்கான சாதனையாளர்கள் உலகில் தோன்றி மறைந்துள்ளனர்.

இத்தகைய சாதனையாளர்களிலிருந்து முக்கியமான இடத்தைப் பிடித்த நூறு சாதனையாளர்களைத் தேர்வு செய்து 'த ஹன்ட்ரட்' (The Hundred) என்ற நூலை மைக்கேல் ஹார்ட் (Michael Heart) எனும் வரலாற்று ஆய்வாளர் எழுதினார். இது 'நூறு பேர்' என்ற பெயரில் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.

மனித குலத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை அவர் வரிசைப்படுத்தும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதல் இடத்தை அளித்தார். முதல் சாதனையாளராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அந்த நூல் அவர் குறிப்பிடுகிறார்.

மைக்கேல் ஹார்ட் கிறித்தவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவராக இருந்தும் கூட 'மக்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றால் முதடம் நபிகள் நாயகத்துக்குத் தான்' என்று குறிப்பிடுகிறார்.

வரலாற்று நாயகர்கள் குறித்து நடுநிலையோடும், காய்தல் உவத்தலின்றியும் யார் ஆய்வு செய்தாலும், எந்தக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் அவரால் நபிகள் நாயகத்துக்குத் தான் முதலிடத்தைத் தர முடியும்.

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதர் அன்று கூறிய, நடைமுறைப்படுத்திக் காட்டிய அனைத்தையும் அப்படியே பின்பற்றும் ஒரு சமுதாயம் உலகில் இருக்கிறது என்றால் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயம் மட்டும் தான்.

வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி கொடுக்கல் வாங்கல், குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என எந்தப் பிரச்சினையானாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டவாறு நடக்கக் கூடிய சமுதாயம் பதினான்கு நூற்றாண்டுகளாக உலகில் இருந்து வருகிறது.

'அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் வழிகாட்டி' என்று உலகில் கால் பகுதிக்கும் அதிகமான மக்கள் நம்புகின்றார்கள். இத்தகையோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் காட்சியையும் உலகம் காண்கிறது.

உலகில் எந்தத் தலைவருக்கும் இந்தச் சிறப்புத் தகுதி கிடைத்ததில்லை என்பதை யாராக இருந்தாலும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

மனைவி, மக்கள், பெற்றோர், உற்றார் மற்றும் அனைவரையும் விட, ஏன் தம் உயிரையும் விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அதிகம் நேசிக்கக் கூடிய பல கோடிப் பேர் இன்றும் வாழ்கிறார்கள்.

உலக மக்களால் காட்டுமிராண்டிகள் வாழும் பூமியாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பாலைவனத்தில் பிறந்த ஒருவரால் இவ்வளவு உயர்ந்த நிலையை அடைய முடிந்தது எப்படி?

இக்கேள்விக்கான விடை தான் இந்நூல்..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாற்று நூலாக இது இருக்குமோ என்று யாரும் கருதிவிட வேண்டாம்.

இது வரலாற்று நூல் அல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய ஆன்மீகப் பாதையை விளக்கும் நூலும் அல்ல.

இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கை கோட்பாடுகளையோ, அதன் சட்டதிட்டங்களையோ விளக்குவதற்காகவும் இந்நூல் எழுதப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களைப் பட்டியட்டு பிரமிப்பை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமன்று.

மாறாக 1400 ஆண்டுகளுக்கு முன் உலகில் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏனைய தலைவர்களிடமிருந்து எப்படி தனித்து விளங்கினார்கள்?

'நபிகள் நாயகம் (ஸல்) போன்ற ஒரு மனிதரை உலகம் கண்டதில்லை' என்று எண்ணற்ற முஸ்லிம் அல்லாத தலைவர்களும், சிந்தனையாளர்களும், வரலாற்றாசிரியர்களும் ஏற்றிப் போற்றுவது ஏன்?

நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் அவர்களை இன்றளவும் அப்படியே பின்பற்றுவது ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கான விடையே இந்நூல்.


முஸ்லிமல்லாத நண்பர்கள் நபிகள் நாயகத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினால் அவர்களது சிறப்பையும், தகுதிகளையும் நிச்சயம் அறிந்து கொள்ள இந்நூல் உதவும்.


முஸ்லிம்களுக்குக் கூட நபிகள் நாயகம் (ஸல்) குறித்து அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் இதில் உள்ளன.

இன்ஷா அல்லாஹ் தொடரும்

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.