Wednesday, September 05, 2012

தப்லீக் தஃலீம் – தொகுப்பு ஓர் ஆய்வு (தொடர் - 2) - தொழுகையா? சொர்க்கமா?

தப்லீக் தஃலீம் – தொகுப்பு ஓர் ஆய்வு  (தொடர் -2)

தொழுகையா? சொர்க்கமா?

இப்னு ஸீரின் (ரஹ்) கூறுகிறார்கள்; சொர்க்கம் செல்லுதல், இரண்டு ரக்அத்கள் தொழுதல். இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத்தேர்ந்தெடுத்துக் கொள்ள எனக்கு அனுமதியளித்தால் இரண்டு ரக்அத்கள் தொழுவதையே நான் தேர்ந்தெடுத்துக் கொள்வேன். ஏனெனில் சொர்க்கம் செல்வது என்னுடைய மகிழ்ச்சிக்காக வேண்டியதாகும். இரண்டு ரக்அத்கள் தொழுவதோ என்னுடைய எஜமானனின் திருப்திக்காக வேண்டியதாகும்.

தொழுகையின் சிறப்பு என்ற பகுதியில் பக்கம் 25 ல் இவ்வாறு கதையளக்கிறார் ஸகரிய்யா சாஹிப்.

மேலோட்டமாகப் பார்க்கும் போது தொழுகையின் சிறப்பைக் கூறுவது போல் இது தோற்றமளித்தாலும் சிந்தித்துப் பார்க்கும் போது இதில் மலிந்துள்ள அபத்தங்கள் தெரியவரும்.

இப்னு ஸீரின் என்பவர் மிகவும் சிறந்த மார்க்க அறிஞர் ஆவார். ஹிஜ்ரி 110 ல் மரணமடைந்த இப்பெரியார் ஹதீஸ்களை அறிவிக்கும் போது அதன் வார்த்தைகளில் கூட மாற்றம் செய்யாமல் அறிவிக்கும் அளவுக்குப் பிடிப்புள்ளவர்.

இது போன்ற பெரியார்களின் பெயரைப் பயன்படுத்தினால் தான் மக்களிடம் எடுபடும் என்பதற்காக அந்தப் பெரியாரின் பெயரைப் பயன்படுத்தியுள்ளார் ஸகரிய்யா சாஹிப். இப்னு ஸீரின் இவ்வாறு கூறினால் எந்த நூலில் இது இடம் பெற்றுள்ளது? அந்த நூல் எந்த ஆண்டில் யாரால் எழுதப்பட்டது? ஹிஜ்ரி 110 ல் மரணமடைந்த அப்பெரியார் இவ்வாறு கூறுயிருந்தால் அந்தக்காலக்கட்டத்திலோ அதற்கடுத்த காலகட்டத்திலோ எழுதப்பட்ட நூல்களில் இது இடம் பெற்றுள்ளதா? என்று எந்த விபரத்தையும் ஸகரிய்யா சாஹிப் கூறவில்லை. இப்னு ஸீரின் என்னவோ இவரது வகுப்புத் தோழர் போலவும் அவர் வந்து நேரில் கூறியது போலவும், 1300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பற்றி சித்தரிக்கிறார் ஸகரிய்யா சாஹிப். இந்தப் பெரியார் இவ்வாறு கூறியிருக்க முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு இதன் தவறுகளை ஆராய்வோம்.

அல்லாஹ்வோடு அவனது அடியார்கள் நடந்து கொள்வதற்கு சில ஒழுங்குகள் உள்ளன. அல்லாஹ்வின் ஏற்பாட்டில் குறை காண்பது போலவோ, அல்லாஹ் சொன்னதைவிட சிறந்ததை அல்லாஹ்வுக்குச் சொல்லிக் கொடுப்பது போலவோ ஒரு அடியான் பேசினால் அவன் அல்லாஹ்வின் மதிப்பை உணரவில்லை என்று பொருள்.

தொழுகை மற்றும் ஏனைய வணக்கங்களை நிறைவேற்றினால் அதன் பரிசு சுவர்க்கம் என்பது இறைவனின் எற்பாடு. இந்த ஏற்பாட்டை குறை காண்பது உண்மை முஸ்லிமுக்கு அழகல்ல.

முஹம்மது (ஸல்) அவர்களை நபியாக ஆக்குவதற்குப் பதில் என்னை நபியாக அவன் ஆக்கியிருந்தால் இப்படிச் செய்திருப்பேன்என ஒருவன் கூறினால் அதை எந்த முஸ்லிம் ஜீரணிக்கமாட்டான். இறைவன் அவ்வாறு ஆக்கவில்லை என்பது தெளிவாகத் தெரியும் போது அவ்வாறு ஆக்கியிருந்தால்...எனக்கூறுவது ஆணவப்போக்காகவே கருதப்படும். சொர்க்கத்தையும், இரண்டு ரக்அத் தொழுவதையும் எதிரெதிரே நிறுத்தி இதில் எது வேண்டும் என இறைவன் கேட்க மாட்டான்.

இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானதல்ல. ஒன்றுக்கு பரிசு மற்றொன்று என்ற வகையில் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இறைவனுடன் மரியாதைக்குறைவாக நடக்கும் இது போன்ற வார்த்தைகளை ஸகரிய்யா சாஹிப் சொல்ல முடியுமே தவிர பெரியார் இப்னு ஸீரின் சொல்லியிருக்க மாட்டார்கள்.

இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு இறைவன் கூறினால் நான் தொழுவதையே தேர்ந்தெடுப்பேன் என்பதில் மற்றொரு தவறும் உள்ளது.

ஒரு பேச்சுக்காக இப்படி இறைவன் கேட்பதாகவே வைத்துக் கொள்வோம். அப்படிக் கேட்கும்போது இவர் இதைத்தான் தேர்ந்தெடுப்பேன் என்று எப்படிக் கூற முடியும்?

அந்த நேரத்தில் இறைவன் எத்தகைய முடிவு எடுக்கும் வகையில் நம் உள்ளத்தைப் புரட்டுகின்றானோ அந்த முடிவைத் தான் எடுக்க முடியுமே தவிர இந்த முடிவைத் தான் எடுப்பேன் என்று கூற முடியாது. அவ்வாறு கூறுவதும் ஆணவப்போக்காகும். எவரும் தான் நினைத்தவாறெல்லாம் முடிவெடுப்பேன் என்று கூறமுடியாது.

சொர்க்கம் செல்வது என்னுடைய மகிழ்ச்சிக்காக வேண்டியதாகும். இரண்டு ரக்அத்கள் தொழுவது என்னுடைய எஜமானனின் திருப்திக்காக வேண்டியதாகும்என்ற வாசகமும் இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கின்றது.

இந்த வாசகத்தில் இறைவன் தொழுகையின்பால் தேவையுள்ளவன் போன்று சித்தரிக்கப்படுகின்றான். இறைவன் எதை எப்போது செய்யச் சொல்கின்றானோ அப்போது அது இறைவனின் திருப்திக்கு உரியதாகின்றது. இறைவன் தொழச்சொல்லும் போது தொழுவதும் தொழாதே என்று சொல்லும் போது தொழாமலிருப்பதும் தான் இறைவனின் திருப்திக்குரியதாகும்.

நோன்பு வைப்பது இறைவனின் திருப்திக்காக. பெருநாள் எனது திருப்திக்காக. எனவே நான் இறைவன் திருப்திக்காக பெருநாள் அன்று நோன்பு வைப்பேன் என்று ஒருவன் கூறினால் அவனை விட அறிவிலி எவனும் இருக்க முடியாது. இப்படிச் செய்வதால் இறைவனின் கடுமையான கோபத்திற்கு அவன் ஆளாகுவான். இறைவனின் திருப்தியைப் பெறமுடியாது.

இறைவன் சுவர்க்கத்துக்குப் போகச் சொல்லும் போது எனக்கு சுவரக்கம் வேண்டாம் தொழப் போகிறேன்என்று கூறுபவனுக்கும் பெருநாள் தினத்தில் நோன்பு வைப்பவனுக்கும் அடிப்படையில் எந்த வித்தியாசமும் இல்லை.

தொழுகையின் சிறப்பை விளக்க, குர்ஆனில் எத்தனையோ வசனங்கள் உள்ளன. ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. அதை விடுத்து இது போன்ற அபத்தங்களைக் கூறி தொழுகையின் சிறப்பை விளக்க எந்த அவசியமும் இல்லை.

பெரியார்கள் எவ்வளவு ஈடுபாடுடன் இருந்திருக்கிறார்கள் பார்த்தீர்களா?” என்று புருவத்தை உயரச்செய்வதே இதன் நோக்கம்.

பாவங்களைப் பார்க்காத பெரியார்:
கடந்த காலத்தில் வாழ்ந்து மறைந்த நல்லோர்களைப் பற்றி பொய்களையும் மிகையான புகழுரைகளையும் தப்லீகின் தஃலீம் தொகுப்பில் ஏராளமாக நாம்காண முடிகிறது. இந்த வகையிலமைந்த பொய் ஒன்றைக் காண்போம்.

உளூ செய்பவர் கழுவப்பட வேண்டிய உறுப்புக்களை கழுவும் போது அவ்வுறுப்புகளால் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்று ஆதாரபூர்வமான பல ஹதீஸ்கள் உள்ளன. நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளதால் உண்மை முஸ்லிம்களுக்கு இதில் எந்த சந்தேகமும் ஏற்படப் போவதில்லை. இது பற்றி வந்துள்ள ஹதீஸ்களை விளக்கவுரை ஏதுமின்றி மொழிமாற்றம் செய்தாலே உளூவின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.

ஸகரிய்யா சாஹிப் இது பற்றி வந்துள்ள ஒரு ஹதீஸை எழுதிவிட்டு அதற்கு விளக்கவுரை என்ற பெயரில் கதையளந்திருக்கிறார்.

கஷ்ப் என்னும் அகப்பார்வை உடைய பெரியோர்களுக்கு உறுப்புகளிலிருந்து பாவங்கள் நீங்குவது புலப்படுகிறது. இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களுடைய சம்பவம் பிரபலமானதாகும். உளூச் செய்யும் போது அதன் மூலம் எந்தப்பாவம் கழுவப்படுகிறது என்பதையும் அவர்கள் கண்டு கொள்ளும் ஆற்றல் பெற்றிருந்தார்கள்.

(பார்க்க தொழுகையின் சிறப்பு பக்கம் 27)

உளூவின் சிறப்பு பற்றி விளக்குவதற்கு இந்த இடத்தில் இந்தக்கதை அவசியமில்லாமலிருந்தும் வலுக்கட்டாயமாக இந்த இடத்தில் நுழைக்கப்படுகிறது. இதை நாம் பல்வேறு கோணங்களில் அலசிப்பார்க்க வேண்டியது அவசியம்.

ஸகரிய்யா சாஹிப் கூறுவது போல் கஷ்பு எனும் அகப்பார்வை என்று ஒன்று உண்டா: திருக்குர்ஆனிலோ ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலோ இதற்கு உண்டா? நிச்சயமாக இல்லை. சூபியாக்கள் என்ற வழி கேடர்களும் முரீது வியாபாரிகளும் கண்டுபிடித்த தத்துவமே கஷ்பு என்பது.

மற்றவர்களுக்கு இருப்பதைவிட கூடுதலான மரியாதையை மக்களிடமிருந்து பெறுவதற்காக தங்களுக்கு அகப்பார்வை உண்டு என்று கூறி மக்களை இவர்கள் மிரளச் செய்தார்கள். இந்தப் போலி ஞானத்தையே ஸகரிய்யா சாஹிப் அவர்கள் இங்கே இஸ்லாத்தின் பெயரால் அறிமுகம் செய்கிறார்.

இறைவனுடன் வஹீ எனும் தொடர்பு கொண்டிருந்த நபிமார்களுக்குத்தான் இறைவன் புறத்திலிருந்து மற்றவர்களுக்கு கிடைக்காத ஞானம் கிடைக்குமே தவிர மற்றவர்களுக்கு விசேஷ ஞானம் எதுவுமில்லை.

கஷ்பு எனும் அகப்பார்வை இருப்பது உண்மையானால் அந்த அகப்பார்வை இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களுக்கு இருந்தது உண்மையானால் அவர்களை விட பலமடங்கு உயர்வான மதிப்புடைய நபித்தோழர்களுக்கு அந்த ஞானம் இருந்திருக்க வேண்டும். ஆனால் நபித்தோழர்களில் எவருமே எந்தெந்த பாவங்கள் கழுவப்படுகின்றன என்பதை அறிந்திருந்தார்கள் என்று காணமுடியவில்லை. நபித்தோழர்கள் கஷ்பு எனும் ஞானத்தின் வாயிலாக இதை அறிந்திருப்பார்களானால் பாவங்கள் கழுவப்படுகின்றன, என்ற விபரத்தை நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கூற வேண்டிய அவசியமில்லை.

நபித்தோழர்களை விட்டு விடுவோம். நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் எத்தனையோ நபித்தோழர்கள் உளூச் செய்திருக்கிறார்கள். அது போன்ற சந்தர்ப்பங்களில் இவரது இந்தப் பாவம் கழுவப்படுகின்றது என்று நபி (ஸல்) கூறியதுண்டா? நிச்சயமாக இல்லை. ஸகரிய்யா சாஹிப் நபித்தோழர்களை விடவும் நபி (ஸல்) அவர்களை விடவும் உயர்வானவர்களாக, தான் பின்பற்றும் இமாமைக் கருதுகிறார். இது போன்ற மிகைப்படுத்தப்பட்ட பொய்யான புகழுரைகள் தான் மத்ஹபுகளையும் தரீக்காக்களையும் தாங்கிப் பிடித்து கொண்டிருக்கின்றன.

மறைவான ஞானம் இறைவனுக்கு மாத்திரமே உரியது எனபதில் எவருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒருவன் எவருக்கும் தெரியாமல் ஒரு பாவம் செய்கின்றான் என்றால் அதுபாவம் செய்தவனுக்கும் இறைவனுக்கும் மட்டும் தெரிந்த விஷயமாகும். இவர்கள் கற்பனை செய்து கொண்டிருக்கும் கஷ்பு என்பது, அந்த ஞானத்தில் மற்றவர்களுக்கு பங்கு போட்டுக் கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது. கஷ்பு என்னும் ஞானம (?) பெற்றவர்கள் இறைவனுக்கு மாத்திரமே தெரிந்த இந்த இரகசியத்தையும் அறிந்து கொள்வார்கள் என்ற நச்சுக் கருத்து இதன் மூலம் இஸ்லாத்திற்குள் நுழைக்கப்படுவதை சிந்திக்கும் போது உணரலாம். இவர்கள் மதிக்கும் பெரியார்களுக்கு இறைத்தன்மையில் பங்கு போட்டுக் கொடுக்கும் இந்தக் கதையை எப்படி நம்ப முடியும்?

மற்றொரு வழியிலும் நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம் உளூச் செய்யும்போது எந்தெந்த பாவங்கள் கழுவப்படுகின்றன என்பதை அபூஹனீபா (ரஹ்) அவர்கள் கண்டதை அவர்களைத் தவிர மற்ற எவரும் அறிந்து கொள்ள முடியாது. அபூஹனீபா (ரஹ்) அவர்களே தன்னைப் பற்றி இவ்வாறு கூறியிருந்தால் மட்டுமே மற்றவர்களால் அதை அறிய முடியும்.

அபூஹனீபா (ரஹ்) அவர்கள் எந்த நூலிலாவது தன்னைப் பற்றி இவ்வாறு எழுதியுள்ளார்களா? நிச்சயமாக இல்லை. அல்லது இவர்கள் தமது மாணவர்களில் எவரிடமாவது கூறி அந்த மாணவர்களாவது எழுதி வைத்திருக்கின்றார்களா? அதுவும் இல்லை.

அபூஹனீபா (ரஹ்) அவர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த விஷயம் அவர்கள் கூறாமல் மற்றவர்கள் அறிந்து கொள்ள முடியாத இந்த விஷயம் ஸகரிய்யா சாஹிபுக்கு எப்படித் தெரிந்தது? அபூஹனீபா (ரஹ்) அவர்களின் காலத்திற்குச் சுமார் 1200 ஆண்டுகள் பின்னர் வாழ்ந்த ஒருவர் இதை எப்படி அறிய முடியும்? இந்த தஃலீம் தொகுப்பை தங்களின் வேதப்புத்தகமாகக் கொண்டாடுவோர் இதை விளக்குவார்களா?

இறந்தவர்கள் பெயரால் எதை வேண்டுமானாலும் கூறலாம் என்ற அசட்டுத் துணிவில் மார்க்கத்துடன் விளையாடிப்பார்க்கிறது இந்த தஃலீம் தொகுப்பு.

ஸஹாரன்பூர் அரபிக் கல்லூரியில் பல்லாண்டுகள் ஹதீஸ் வகுப்பு நடத்தி, தனக்குத் தானே ஷைகுல் ஹதீஸ் (ஹதீஸ் கலை மேதை) என்று பட்டம் சூட்டிக் கொண்ட ஸகரிய்யா சாஹிப் ஒரு ஆதாரமும் இல்லாமல் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் சம்பவம் பிரபலமானதாகும் என்று மொட்டையான முத்திரையுடன் இதைப் பதிவு செய்தது எப்படி என்பது தான் விந்தையாக உள்ளது.

அமல்களின் வணக்க வழிபாடுகளின் சிறப்புகளைக் கூறுவது போன்ற பாணியில் பெரியார்களுக்கு தெய்வீக அம்சம் வழங்கி தங்களுக்கும் அதில் ஒரு பாதியை பங்கு போட்டுக்கொள்வதே இவர்களின் நோக்கமாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இன்ஷாஅல்லாஹ் தொடரும்

1 கருத்துரைகள் :

இவ்வளவு கப்சாக்கள் நிறைந்த புத்தகங்களை வைத்து இருக்கும் தப்லீக் ஜமாத்தினரை............

தப்லீக் ஜமாத் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளிகளில் ஹைதர் அலி ஆலிம்? அவர்கள் இந்த அசத்தியவாதிகளை எதிர்த்து பேசி இருக்கிறாரா..?

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.