கவனமற்ற தொழுகையாளிகளுக்கு கேடு தான்!
ஜாஃபர் நிஷா பின்த் ஷேக் ஃபரீத்
அல்லாஹ்வை இறைவனாகவும் முஹம்மத் நபியை தங்களின் வழிகாட்டியாகவும் ஏற்றுக் கொண்ட பிறகு தொழுகை என்ற கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இஸ்லாத்தின் இரண்டாவது கடமையாக வலியுறுத்தப்பட்டுள்ள இந்த தொழுகையை முஸ்லிம்களில் பலர் புறக்கணித்து வருகின்றனர். சிலர் பெயரளவில் இந்தத் தொழுகையைத் தொழுது வருகின்றனர். பிறருக்குக் காட்டுவதற்காகவும் கவனமில்லாமலும் தொழும் இத்தகைய தொழுகையாளிகளை திருக்குர்ஆனில் அல்லாஹ் பல இடங்களில் கண்டிக்கிறான். தொழுகையை புறக்கணிப்பது எப்படிப் பாவமோ தொழுகையில் பொடு போக்காக இருப்பதும் பாவம் தான்.
தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவனே அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை . தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர். அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர். (திருக்குர்ஆன். 107: 1-7)
அநாதையை விரட்டுவோரும் ஏழைக்கு உணவளிக்க தூண்டாதவர்களும் பிறருக்கு காட்டுவதற்காக தொழுபவர்களும் மறுமையை நம்பாதவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் கவனமில்லாமல் தொழுவோருக்குக் கேடு தான் என்றும் அல்லாஹ் எச்சரிக்கிறான்.
இன்று பலர் தொழுகையில் நின்றாலும் அவர்களின் கவனெல்லாம் வேறு எங்கோ இருக்கும். வெறுமனே குனிந்து நிமிர்வது மட்டுமே தொழுகை என்று இவர்கள் நினைக்கின்றனர். இன்னும் சிலர் தொழுகையிலேயே தூங்குவார்கள். தொழுகையில் என்ன ஓதிக் கொண்டிருக்கிறோம்? எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை கூட உணராமல் தொழுவோரும் உண்டு.
பொருள் தெரியாமல் ஓதினாலும் திருக்குர்ஆனுக்கு நன்மை உண்டு என்றாலும் அதையும் முறையாக ஓதுகிறோமா? வேக வேகமாக ஓதி விட்டு வேக வேகமாக ருகூவு, ஸஜ்தா செய்து விட்டு தொழுகையை நிதானமின்றி முடித்து விடுகிறோம். இது எப்படி இறைவனால் ஏற்கப்படும்? என்பதை நாம் சிந்திப்பதில்லை.
ஒரு நேரம் தொழுவது, ஒரு நேரம் தொழாமல் இருப்பது என்று தொழுகையைத் திருடுவோரும் இருக்கிறார்கள். இந்தத் தொழுகையில் என்ன பயன் இருக்கிறது? இப்படிப்பட்ட கவனமற்ற தொழுகையாளிகளுக்கு நன்மைக் கிடைக்காது, கேடு தான் ஏற்படும் என்பதைத் தான் மேற்கண்ட வசனம் கூறுகிறது.
மேலும் இத்தகைய தொழுகை நயவஞ்சகத்தின் அடையாளம் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் எச்சரித்துள்ளார்கள்.
நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான்அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறி களாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர். (அல்குர்ஆன். 4:132)
ஃபஜ்ர், இஷா ஆகியத் தொழுகைகளைவிட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதும் இல்லை. அவ்விரு தொழுகைகளிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்துவிடுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி (657)
தொழுவதற்கு நேரமில்லை என்று சொல்லி லுஹர், அஸர், மஹ்ரிப், இஷா ஆகிய நான்கு தொழுகைகளையும் வேண்டுமென்றே விட்டு விட்டு மொத்தமாக இரவில் களா என்ற பெயரில் சிலர் தொழுது வருகின்றனர். இதுவும் தொழுகையில் பொடுபோக்காக இருப்பது தான்.
நாம் நினைத்த நேரத்தில் தொழுவதற்காக இறைவன் தொழுகையைக் கடமையாக்கவில்லை. ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனி நேரம் இருக்கிறது. அந்த நேரத்தில் தான் அதை நிறைவேற்ற வேண்டும்.
நாம் நம்மையறியாமல் தூங்கி விட்டாலோ மறந்து விட்டாலோ நினைவு வந்தவுடன் விட்ட தொழுகையைத் தொழுவது தான் களாவாகும். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதிக்கிறார்கள். வேண்டுமென்று தொழுகையை விடுவது களாவாகாது. தொழுகையைப் பாழாக்குவதாகத் தான் ஆகும்.
தொழுகையில் பொடுபோக்காக இருப்பதே பாவம் என்றால் அறவே தொழாமல் இருப்பது எவ்வளவு பெரிய பாவம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.தொழ நேரமில்லை, சுத்தமாக இல்லை என்றெல்லாம் பல்வேறு சாக்கு போக்குகள் சொல்லி தொழுகையைப் பலர் புறக்கணிக்கின்றனர்.
டி.வி பார்க்கவும் சினிமாவுக்கு போகவும் ஊர் சுற்றவும் புறம் பேசவும் பொருளாதாரம் திரட்டவும் பல மணி நேரங்களை செலவளிக்கும் நாம் தொழுகைக்காக மட்டும் நேரம் இல்லை என்பதை இறைவன் ஏற்றுக் கொள்வானா?
இவ்வுலகில் காற்று மழை, உணவு, மலைகள், சூரியன், சந்திரன் என அனைத்தையும் நாம் அனுபவிப்பதற்காக படைத்த இறைவன், அவனை வணங்குவதற்காகவே நம்மைப் படைத்திருக்கிறான். இறைவன் படைத்த நோக்கத்தை நிறைவேற்றவும் அவனுக்கு நன்றி செலுத்தவும் இனி வரும் காலங்களிலாவது தொழுகையில் பொடுபோக்காக இருப்பதைத் தவிர்த்து உள்ளச்சத்துடன் தொழுவோம். சுவர்க்கத்தைப் பெறுவோம்!
குற்றவாளி களிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். "நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்க வில்லை'' எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளை1 பொய்யெனக் கருதி வந்தோம். உறுதியான காரியம் (மரணம்) எங்க ளிடம் வரும் வரை'' (எனவும் கூறுவார்கள்). எனவே பரிந்துரைப்போரின் பரிந்துரை அவர்களுக்குப் பயன் தராது . (அல்குர்ஆன். 74:40-48)
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.