Wednesday, March 18, 2015
உலக ஆசை!
ஸஹீன் பின்த் ஜாஹிர் ஹுஸைன்
இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் அல்லாஹ் அதை எதற்காகப் படைத்திருக்கிறானோ அந்த நோக்கத்தை அது செயல்படுத்துகிறது. இறைவனுக்கு அடிபணிந்து நடக்கிறது. ஆனால் பகுத்தறிவுள்ள மனிதன் மட்டுமே தான் படைக்கப்பட்ட காரணத்தை மறந்து விட்டு அழிந்து போகும் இந்த உலகமே பெரிது என வாழ்கிறான். தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்யும் இவனை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்று இறுமாப்பில் வாழ்கிறான்.
மரணத்திற்குப் பிறகு ஒரு வாழ்க்கை கிடையாது என நம்புவோரின் நிலை இதுவென்றால் மறுமை வாழ்க்கையை நம்பும் முஸ்லிம்களும் இதில் விதி விலக்கல்ல. உலக ஆசையில் அல்லாஹ்வையும் மறுமையையும் மறந்து வாழ்கின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வை ஆராய்ந்தால் இந்த உலகத்தை நாம் எவ்வாறு மதிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள் 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதியளித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பை நாங்கள் தயாரித்துத் தருகிறோம். அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்''எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், 'எனக்கும் இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும் அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும் இவ்வுலகத்துக்கும் உள்ளது'' எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.
இதை நபிகள் நாயகத்தின் தோழர்களில் ஒருவரான அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். நூல்கள்: திர்மிதி,இப்னுமாஜா
நாம் வெளியூருக்கு பயணம் செய்தால் வீடு திரும்ப வேண்டும் என்ற நோக்கத்தில் வெளியூரில் நமது வேலையை முடிப்போம். அதே போல் தான் இந்த உலகமும். இது நிரந்தரம் கிடையாது. நாம் அனைவரும் மறுமையை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பவர்கள் தான்.
இந்த உலகம் என்பது வெறும் வீணும் விளையாட்டுமே என்று அல்லாஹ்வும் தன் திருமறைக் குர்ஆனில் கூறுகிறான்.
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா? அல்குர்ஆன். 6:32)
இவ்வுலகை விட மறுமை தான் சிறந்தது என்று அல்லாஹ் கூறியிருக்கும் போது நாம் மறுமையைப் பெரிதாக நினைக்கிறோமா?
தங்கள் பிள்ளைகள் உலகக் கல்வியில் முன்னேற வேண்டும் என்று தான் பெற்றோர்கள் விரும்புகிறார்களே தவிர மார்க்கக் கல்வி கற்று ஆலிமாக ஆலிமாவாக வர வேண்டும் என்று விரும்புவதில்லை. இத்தனைக்கும் மார்க்கக் கல்வி கற்க இலட்சக்கணக்கில் செலவழிக்கத் தேவையில்லை, சீட் கேட்டு அலையத் தேவை இல்லை. மிக இலகுவாக கிடைக்கும் மார்க்கக் கல்விக்கு இவர்கள் மதிப்பதில்லை. ஒரு வேளை பணிரெண்டாம் வகுப்பில் ஃபெயிலாகி விட்டால் மதரஸாவில் சேர்க்க நினைக்கிறார்களே தவிர மார்க்கப் பிரச்சாரராக தங்கள் பிள்ளைகள் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் மிகக் குறைவு. மறுமையில் வெற்றியைத் தேடித் தரும் மார்க்கக் கல்வியில் இவர்களின் நிலை இது.
அது போல் இவ்வுலகில் பணம் வீடு நகை என எல்லா வசதிகளுடனும் சொகுசுகளுடனும் வாழ விரும்புவோர் நிரந்தரமான சொர்க்கத்தின் இன்பங்களை அடைய ஆசைப்படுவதில்லை.
அதே நேரத்தில் இந்த உலகத்தை ஆசைப்படக் கூடாது என்று நாம் சொல்லவில்லை. இவ்வுலகம் என்பது காஃபிருக்கு தான் சுவர்க்கமே தவிர முஸ்லிமைப் பொருத்த வரை ஒரு சிறைச்சாலை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதின் அடிப்படையில் கட்டுப்பாடுகளுடன் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும்.உலகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து மறுமையை மறந்து விடக் கூடாது.
நாம் மரணித்த பிறகு நம்மை பின் தொடரும் மூன்று காரியங்களைக் குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குத் தெளிவுபடுத்துகிறார்கள்
'ஒரு மனிதன் மரணித்து விட்டால் மூன்று காரியங்கள் தவிர மற்ற செயல்பாடுகள் முடிந்து விடும்.
அவைநிலையான தர்மம், பிறர் பயன் பெறும் கல்வி, தனக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள சந்ததி'என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி நூல்: முஸ்லிம் 3084
நாம் கஷ்டப்பட்டு சேர்த்த செல்வமோ நம் மீது அதிகமான பாசம் செலுத்தும் குடும்பமோ மரணத்திற்குப் பிறகு நம்மைப் பின் தொடராது. மாறாக நாம் செய்யும் நல்லமல்களே நம்முடன் வரும். எனவே அதிகமான நன்மைகளை நாம் செய்ய வேண்டும்.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே படைப்புகளில் மிகச் சிறந்தவர்கள் (அல்குர்ஆன். 98:7) என்று அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.
மறுமையை ஒப்பிடும் போது இவ்வுலகம் என்பது கடலில் நம் விரலை முக்கியெடுத்தால் எந்த அளவிற்கு தண்ணீர் சொட்டுமோ அந்த அளவு தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் இந்த அற்ப உலகத்தில் சிறிது செல்வம் நமக்குக் கிடைத்ததும் சிலருக்கு ஆணவமும் ஆடம்பரம் எனும் பெயரால் காசைக் கரியாக்கும் பழக்கமும் திமிரும் வந்து விடுகிறது. மற்றவர்களை மட்டமாக நினைக்க ஆரம்பித்து விடுகின்றனர். மேலும் உலக ஆசைக்கு அடிபணிந்து சினிமா, மது, சூது என சீரழிந்து விடுகின்றனர். ஆனால் தாங்கள் செய்யும் இந்த தவறுகளால் நிரந்தரமாக கிடைக்க இருக்கிற மறுமையின் இன்பங்களை இழக்க வேண்டி வரும் என்பதை இவர்கள் மறந்து விடுகிறார்கள். இனி வரும் காலங்களிலாவது மறுமைக்காக வாழும் நன்மக்களாக நாம் மாறுவோம். அதிக நன்மை புரிவோம்.
குறிப்பு : ஒவ்வொரு வாரமும் பெண்கள் பயான் நடைபெறும்போது ஒரு மாணவி பயான் செய்கிறார் அதனை இங்கே தருகிறோம்
0 கருத்துரைகள் :
Add to Flipboard Magazine.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளையின் சார்பாக கட்டப்பட்டு வரும் மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டிட பணிக்கு உதவுங்கள்.
Post a Comment
அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.
நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.
தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.