Friday, April 05, 2013

விருதுநகரில் ஒரு வியத்தகு மனிதநேயப்பணி!

விருதுநகரில் ஒரு வியத்தகு மனிதநேயப்பணி

vir
விருதுநகர் மாவட்டம், விருதுநகரைச் சேர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளை உறுப்பினராகிய ஐ.ஷேக் அப்துல்லாஹ் என்பவர் அங்குள்ள செந்தில் குமரன் கல்லூரியில் பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றார். (மேலுள்ள புகைப்படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளவர்) தனது சொந்த வேலை காரணமாக 10.03.13 அன்று விருதுநகரிலிருந்து சுமார் 25கி.மீட்டர் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் என்ற கிராமத்திற்கு சென்றிருந்தார்.


 அன்று இரவு 11 மணிக்கு தனது வேலையை முடித்து விருதுநகருக்கு திரும்பும் போது, சங்கரலிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இரண்டு பவுன் தங்கச் செயின் ஒன்று கீழே கிடந்துள்ளது. அதைக் கண்டெடுத்து அதன் உரிமையாளர் யாரேனும் நகையைத் தேடி அங்கு வருகிறார்களா என அரை மணி நேரம் வரை காத்திருந்து, யாரும் தேடி வராததால் விருதுநகர் திரும்பிவிட்டார். மறுநாள் அது தங்க நகைதானா என்பதை ஆய்வு செய்து தங்க நகைதான் என்பதையும் அதன் எடை 13கிராமும் 820 மில்லியும் உள்ளது என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டார்.

டிஎன்டிஜே நிர்வாகிகளிடம் ஆலோசனை:

பின்னர் நமது ஜமாஅத் நிர்வாகிகளிடம் இரண்டு பவுன் தங்கச் சங்கிலியை, தான் கண்டெடுத்த விஷயத்தை தெரியப்படுத்தியுள்ளார். இதுகுறித்து என்ன செய்யலாம் என்பதை நமது விருதுநகர் நிர்வாகியுடன் ஆலோசித்துள்ளார்.

டிஎன்டிஜேயின் வழிகாட்டுதல்:

பிறருக்கு உடமையான பொருட்கள் கீழே கிடந்து கண்டெடுக்கப்பட்டால் அதுகுறித்து ஒரு வருடகாலம் மக்களுக்கு அறிவிப்புச் செய்ய வேண்டும் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் ஓர் ஆண்டு வரை அதைப் பற்றி விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நமது நிர்வாகியின் ஆலோசனையின்படி இது குறித்து விளம்பரப்படுத்த முடிவெடுத்தார்.

கடந்த மார்ச் 10ஆம் தேதி கீழே கிடந்து ஒரு தங்க நகையை எடுத்துள்ளோம். அதைத் தவறவிட்டவர்கள் அதன் அடையாளத்தைச் சொல்லி பெற்றுக் கொள்ளவும் என்ற வாசகங்கள் அடங்கிய ஒரு அறிவிப்பை அவரே தயார் செய்துள்ளார்.

 ஏ4 சைஸ் தாளில் கலர் ஸ்கெட்ஜைப் பயன்படுத்தி அவரே தனது கைப்பட மேற்கண்ட வாசகங்களை எழுதி பல பிரதிகள் தயாரித்துக்கொண்டு, கல்லூரி விடுமுறை நாளன்று விருதுநகரிலிருந்து சங்கரலிங்கபுரம் சென்று மக்கள் கூடும் முக்கிய இடங்களில் பேருந்து நிலையம் மற்றும் அதைச் சுற்றி உள்ள பல பகுதிகளில் இவரே ஒட்டியுள்ளார்.

இவர் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் தேவையுடையோராக இருந்தும்கூட கீழே கண்டெடுத்த நகையை உரியவரிடம் ஒப்படைக்க அதன் உரிமையாளர் அடையாளத்தைக் கூறி பெற்றுக் கொள்ளலாம் என வாசகத்தை எழுதி பொது மக்கள் பார்வைக்கு தன்னால் முடிந்த அளவுக்கு விளம்பரப்படுத்தி வந்துள்ளார்.

 இவரிடம் இதுகுறித்து கேட்டபோது, இதை போஸ்டராக அடித்து பரவலாக அனைத்து பகுதிகளிலும் ஒட்டி எப்படியாவது அந்தப் பொருளுக்கு உரியவரிடம் அதை ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால் போஸ்டர் அடிக்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. அதனால்தான் கைகளாலேயே எழுதி இந்த அறிவிப்பை தயார் செய்தேன் என்று அவர் கூறியது நம் நெஞ்சை நெகிழச் செய்தது.

அறிவிப்பு ஒட்டப்பட்ட மறுநாள் இரவு 7 மணியளவில் சங்கரலிங்கபுரத்தில் ஸ்வீட் ஸ்டால் வைத்திருக்கும் ஒரு சகோதரர் நமது உறுப்பினரைத் தொடர்பு கொண்டு எங்க ஊர் விசேஷத்திற்காக வந்த இடத்தில் எங்க ஊரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது இரண்டு பவுன் செயினை தொலைத்து விட்டு அழுததாகவும், அந்தப் பெண்ணையே போன் செய்ய சொல்வதாகவும் கூறியுள்ளார். அவர் தொலைபேசியில் தொடர்பு கொண்ட சிறிது நேரத்தில் திண்டுக்கல்லிருந்து அய்யாசாமி என்பவருடைய மனைவி பேசுவதாக ஒரு பெண்மணி நமது உறுப்பினருக்கு போன் செய்தார். அவர் அந்த நகையைப் பற்றிய முழு அடையாளத்தையும் தெரிவித்தார்.

அந்தப் பெண்ணிடம் நகையின் பில்லைக் கொண்டு வந்து காட்டி நகையைப் பெற்றுக் கொள்ளுமாறு நமது உறுப்பினர் கூற, அந்தப் பெண்ணும் கணவரும் மறுநாள் மாலை விருதுநகர் வந்தனர். அத்தம்பதியினர் அவரின் செயலை கண்டு வியந்தனர். இதுபோன்ற ஒரு இளைஞரை இந்தக் காலத்தில் பார்ப்பது மிகுந்த ஆச்சர்யமாக உள்ளது என்றும், இப்படியும் இளைஞர்கள் இருக்கின்றார்களா என்று எங்களுக்கு ஆச்சர்யமாக உள்ளது என்றும் அவரிடம் கூறியுள்ளனர். அதற்கு நமது உறுப்பினரோ இவ்வாறு எங்களை நடக்கச் சொல்லி வழிகாட்டுவது எங்களுடைய இஸ்லாமிய மார்க்கம்தான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு காட்டியுள்ள வழிமுறையின் பிரகாரம்தான் நாங்கள் நடந்து வருகின்றோம். எங்களுக்கு இந்த உலக வாழ்வு என்பது முக்கியமல்ல; மறுமை வாழ்வு என்று ஒன்று உள்ளது. அதில் நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பதும், நம்மைப் படைத்த இறைவனது திருப்பொருத்தத்தைப் பெற வேண்டும் என்பதும்தான் எங்களது குறிக்கோள் என்பதை அவர் விளக்க தூய இஸ்லாமிய கொள்கையும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

இதைக்கேட்டவுடன் அவர்களது வியப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. அந்த நகையானது தங்களது மகளுக்கு அவரது மாமனார் வீட்டில் அளித்தது என்றும், குழந்தை பெற்றுக்கொள்ள எங்களது வீட்டில் எனது மகள் வந்துள்ளார் என்றும், அவர் குழந்தை பெற்றுத் திரும்பும்போது இந்த நகை இல்லாமல் சென்றால் அவர்கள் கேள்வி கேட்பார்களே! நாங்கள் எப்படி அதற்கு பதில் சொல்லப்போகின்றோம் என்றும் நாங்கள் அழுது கொண்டிருந்தோம். நீங்கள் செய்த இந்த உதவியை நாங்கள் மறக்கவேமாட்டோம் என்று கூறியுள்ளனர்.

எங்களை உங்களது வீட்டிற்கு கூட்டிச் செல்ல வேண்டும் என்று தம்பதியர் அவரிடத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். உங்களுடைய பெற்றோர்களை சந்தித்து உங்களுடைய பெற்றோர்கள் முன்னிலையில்தான் நகையைத் தரவேண்டும் எனக் கூறி விடாப்பிடியாக நின்றுள்ளனர்.

இறுதியாக நமது உறுப்பினர் நகையைப் பெற்றுக் கொள்ள வந்த தம்பதியர் இருவரையும் நமது டிஎன்டிஜே விருதுநகர் மர்கஸிற்கு அழைத்து வந்துள்ளார்.

சங்கரலிங்கபுரத்தில் அவர்கள் நகையைத் தொலைத்துவிட்டு பேருந்து நிலையத்தில் இரவு 11.00 மணி வரை தேடி அழுததாகவும் அவர்களுக்கு ஸ்வீட் கடைக்காரர் உதவ முன் வந்ததாகவும் கூறினர். ஸ்வீட் கடைக்காரர் போக்குவரத்து அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு அவர்கள் வந்த பேருந்தில் தேடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஆனால் அன்று அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் உட்கார்ந்து அழுது கொண்டிருந்த இடத்திலிருந்து சில அடிதூரத்தில் இருந்துதான் நமது உறுப்பினர் அந்த நகையை கீழே கண்டெத்துள்ளார்.

நமது விருதுநகர் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் அவர்களின் பில்லை வாங்கிப் பார்த்துவிட்டு அவர்கள் நகைதான் என உறுதி செய்து விட்டு உரியவரிடம் நகை ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் நம் நிர்வாகிகள் அவர்களுக்கு இஸ்லாம் குறித்த போதனைகளை எடுத்துக் கூறி தாவா செய்துள்ளனர். மேலும், மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் அவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளனர். அவர்கள் அதை பெற்றுக்கொண்டு நமது உறுப்பினருக்கு ஒரு தொகையை அன்பளிப்பாக தர முன்வந்தனர். அவர்கள் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக சில நோட்டுக்களை எடுத்து நமது உறுப்பினரது கையில் திணிக்க, அதைப் பெற மறுத்த நமது உறுப்பினரும், நமது கிளை நிர்வாகிகளும் அவர்களுக்கு இது குறித்து விளக்கமளித்துள்ளனர்.

இப்போது நாங்கள் உங்களிடம் இந்தப் பணத்தைப் பெற்றோமானால் நாங்கள் இந்தப் பணத்திற்காகத்தான் இந்த வேலையைச் செய்தோம் என்று ஆகிவிடும். நாங்கள் நம்மை படைத்த இறைவனது திருப்தியை நாடித்தான் இதைச் செய்தோமே அன்றி இந்த உலக வாழ்வில் கிடைக்கும் ஆதாயத்திற்காக இந்த உதவியை நாங்கள் செய்யவில்லை என்று நமது நிர்வாகிகளும், உறுப்பினரும் விளக்கமளிக்க இப்படியும் ஒரு மனிதர்களா? இந்த அளவிற்கு வழிகாட்டக்கூடிய ஒரு அழகான மார்க்கமா? என்று நமது சகோதரர்களை நினைத்தும், இஸ்லாமிய மார்க்கம் குறித்தும் உயர்ந்த எண்ணத்துடன் அந்தத் தம்பதியினர் அங்கிருந்து விடைபெற்றுச் சென்றுள்ளனர்.

இருப்பினும் அத்தம்பதிகள் பள்ளிவாசலுக்கோ, வேறு ஏதேனும் ஏழை மாணவர்களின் கல்வி உதவிக்கோ தங்களைத் தொடர்பு கொள்ளலாம் எனக்கூறி அவர்களின் முகவரியை கொடுத்துவிட்டு இஸ்லாத்தின் மீதான மதிப்பு உயர்ந்தவர்களாகவே ஊர் திரும்பிச் சென்றனர்.

இன்றைய மீடியாக்களில், குறிப்பாக திரைப்படங்களில் முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் அப்பாவி பொது மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பங்கம் விளைவிப்பவர்கள் என ஒருவிதப் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது அவப்பெயரை தொடர்ந்து சுமத்துகின்ற இச்சூழலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இன்றைய இளைஞர்களை ஏகத்துவக் கொள்கையில் வார்த்தெடுப்பதன் மூலம் அனைத்து தீய கேடுகளை விட்டும் தடுத்து, பல சமூக சேவைகளில் ஈடுபடுவதன் மூலம் பிறமத சகோதரர்களிடமும் இந்த தூய இஸ்லாத்தை சரியான முறையில் கொண்டு சேர்த்து, இளைஞர்களுக்கு மறுமை வெற்றிக்கான பாதையைக் காட்டி வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்…
இன்றைய காலகட்டத்தில் பற்பல சம்பவங்களை நாம் காண்கின்றோம்.

விபத்து நேர்ந்து குற்றுயிரும் கொலை உயிருமாக கிடக்கக்கூடியவர்களிடமிருந்து கிடைத்தவரை வாரிச் சுருட்டிக் கொண்டு ஓடுவோர் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் கிடைத்த தங்க நகையை உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்காக கைகளாலேயே அது குறித்த அறிவிப்பு வாசகங்களை எழுதி, எந்த இடத்தில் தங்க நகை கிடைத்தோ அந்த ஊருக்கே சென்று விளம்பரப்படுத்தி, சம்பந்தப்பட்டவரிடம் அந்த நகையை நமது உறுப்பினர் ஒப்படைத்திருக்கும் இந்தச் சம்பவம் நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

இந்த ஜமாஅத்தின் பயிற்சிப் பாசறையில் உருவாக்கப்படக்கூடிய ஒவ்வொரு இளைஞர்களும் இதுபோன்றுதான் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி ஒரு இளைஞரா என்று நீங்கள் எண்ணி வியக்க வேண்டாம். இஸ்லாத்தை சரியான முறையில் போதித்து அதை பின்பற்றச் சொல்லும் இந்த ஜமாஅத்தில் உள்ளவர்கள் அனைவருமே இப்படித்தான் இருக்கின்றார்கள் என்று நகையைப் பெற வந்தவர்களிடம் நமது நிர்வாகிகள் கூற அவர்களுக்கு வியப்புக்குமேல் வியப்பு.

இதுபோன்ற மனித நேயப்பணிகளை இன்னும் அதிகமதிகம் நமது சகோதரர்கள் செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

வாங்கிய வரதட்சணையைத் திருப்பிக் கொடுக்கும் அதிசயம்!

திருமணம் முடிப்பதற்காக பெண் பார்க்கும் போது மணமகன் வீட்டார் பெண்ணிடத்தில் பல லட்சம் ரூபாய்கள் ரொக்கமாகவும், நகையாகவும், வீடு, இரண்டு சக்கர வாகனம், கார் என்று கொள்ளையடிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

இப்படி இளைஞர் சமுதாயம் பணத்திற்காகவும், நகைக்காகவும் ஆளாய்ப் பறக்கும் இவ்வேளையில் இந்த ஜமாஅத்தில் இருக்கக்கூடிய இளைஞர்களும், இளைஞர்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களும் பெண் வீட்டாரிடத்தில் நயா பைசா கூட வாங்க மாட்டோம். மாறாக, நாங்கள் பெண்ணுக்கு மஹர் கொடுத்து மணம் முடிப்போம் என்று உறுதி பூண்டு திருமணம் முடித்து வரும் நிகழ்வுகளைக் காண்கின்றோம். அப்படிப்பட்ட ஒரு அப்பழுக்கற்ற சமுதாயத்தை இந்த ஜமாஅத் ஏகத்துவப் பிரச்சாரத்தின் வாயிலாக வார்த்தெடுத்து வருகின்றது.

வரதட்சணை வாங்குவது பாவம் என்பதை அவர்களுக்கு உணர்த்துவதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே வாங்கிய வரதட்சணையைப் பெண் வீட்டாரிடம் திரும்ப ஒப்படைக்கும் அதிசய நிகழ்வுகளும் நடந்து வருவதை அறிந்து அனைவரும் பூரித்துப் போகின்றனர். வாங்கிய வரதட்சணையை திருப்பிக் கொடுத்து தாங்கள் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தம் தேடிக் கொள்ளும் நிகழ்வுகள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.

பணத்தை ஹலாலான வழியில் தான் சம்பாதிக்க வேண்டும். ஹராமான வழியில் சம்பாதித்த பணமானது இந்த உலகத்திலும் நமக்குக் கேட்டைத்தான் ஏற்படுத்தும், மறுமையிலும் அதனால் கேடுதான் ஏற்படும் என்பதை உணர்ந்ததால்தான் கீழே கிடந்த பொருளை எடுத்து உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்வுகளும், வாங்கிய வரதட்சணையை திரும்ப ஒப்படைக்கும் நிகழ்வுகளும் நடக்கின்றன.

உதாரணத்திற்கு ஒரேயொரு நிகழ்வை இங்கு சுட்டிக்காட்டியுள்ளோம். இதுபோன்று ஆயிரக்கணக்கான சகோதரர்கள் தாங்கள் செய்த தவறுக்கு வருந்தி வாங்கிய வரதடசணையை திருப்பிக் கொடுத்து வருகின்றனர்.

நன்றி   http://www.tntj.net/141757.html

0 கருத்துரைகள் :

Post a Comment

அல்லாஹ்விற்கு பயந்து எழுதவும். கட்டுரைக்கு சமபந்தம் இல்லாதவைகள் வெளியிடப்படாது.

நியாயமான கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவாக பதில் அளிக்கப்படும், இன்ஷா அல்லாஹ்.

தங்களின் இணையதளங்களை விளம்பரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பதியப்படும் எந்த கருத்தும் வெளியிடப்படாது.

 
தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்