தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுக் குழு கூட்டம் இன்று (30-1-11) காலை 10.30 மணிக்கு மேலாண்மைக்குழுத் தலைவர் சம்சுல் லுஹா அவர்கள் தலைமையில் சேலத்தில் பரபரப்புடன் துவங்கியது.
இதில் வரும் தமிழக சட்ட மன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது? தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு என்ற முக்கிய அம்சங்கள் இடம் பெற்றது.
முதலாவதாக மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மத் அல்தாஃபி அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
புதிய மாநில நிர்வாகிகள்:
தலைவர்:
பி.ஜே
பொதுச் செயலாளர்: ரஹ்மதுல்லாஹ்
பொருளாளர்: அன்வர் பாஷா
து. தலைவர்: அப்துர் ரஹீம்
து. பொதுச் செயலாளர்: சைய்யத் இப்ராஹீம்
மாநிலச் செயலாளர்கள்:
அப்துல் ஹமீது
சாதிக்
அப்துல் ஜப்பார்
யூசுப் (திருவள்ளூர்)
அஷ்ரஃப்தீன் பிர்தௌசி
மாலிக் (ராம்நாடு)
சாதிக் ( கோபிசெட்டிபாளையம்)
பொதுக்குழு தீர்மானம்:
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
2011 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி சேலம் நேரு கலை அரங்கில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் 11 வது மாநிலப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
தமிழகம்
1.முஸ்லிம்களின் கடுமையான போராட்டங்களுக்குப் பின் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இட ஒதுக்கீட்டை திமுக அரசு சட்டமாக்கியது. ஆனால் இட ஒதுக்கீடு அமுலுக்கு வந்தது முதல் இன்று வரை வழங்கப்பட்ட வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டி அடிப்படையில் 3.5 கிடைக்கவே இல்லை. ஒவ்வொரு வேலைக்கும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் விளம்பரம் செய்யப்படும் போது அந்த விளம்பரத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 ஒதுக்காமல் ஒரு சதவிகிதம் அளவுக்கு ஒதுக்கி பகிரங்கமாக விளம்பரங்கள் செய்யப்பட்டன. இதைத் திரட்டி முதல்வரிடம் நாம் கொடுத்து உடனே இவற்றை சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடன் அந்தக் குளறுபடிகளைச் சரி செய்வதாக அரசு மூலம் எழுத்து மூலமான உத்தரவாதம் தந்தனர். ஆனால் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின் இரண்டு தடவை துணை முதல்வரைச் சந்தித்து இக்கோரிக்கையை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.ஆனாலும் எதிர்காலத்தில் இதுபோல் நடக்காமல் இருக்க கண்காணிப்பு ஆணைத்தை நேற்று (29.01.11) அமைத்துள்ளது ஆறுதல் அளிக்கிறது. கண்காணிப்பு ஆணையம் எதிர்காலத்தில் செய்யப்படும் நியமனங்களை மட்டும் கண்காணிக்காமல் இடஒதுக்கீடு அளிக்கப்பட்ட காலம் முதல் இது வரை செய்யப்பட்டுள்ள நியமனங்களையும் ஆய்வு செய்யவேண்டும் என்று இப்பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
மனித நேய மக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
எனவே முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கினால் திமுகவிற்கு ஆதரவு அளிப்பது, திமுக முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீட்டை சட்டமாக்காமல், அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்குவதாக வாக்குறுதியளித்தால் அவர்களை ஆதரிப்பது என்றும், தற்போது நிலைமை இன்னும் தெளிவாகாத காரணத்தால் தேர்தல் நெருக்கத்தில் இன்ஷா அல்லாஹ் மாநில செயற்குழுவைக்கூட்டி அதில் யாருக்கு ஆதரவு என்ற முடிவு எடுக்ககப்படும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.
2. தமிழக அரசின் சமத்துவப் பொங்கல் தமிழக அரசு ஜனவரி 15 ஐ தமிழ் புத்தாண்டாகக் கடந்த 8.2.2008 அன்று அறிவித்து ஆணை பிறப்பித்தது. பொங்கலைக் கொண்டாடுபவர்கள் அந்நாளில் சூரியனுக்கும் கால்நடைகளுக்கும் வணக்க வழிபாடு செய்வர். பொங்கல் அன்று இது போன்ற வழிபாடு நடத்துவது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களின் நடைமுறை. விருப்பம் உள்ளவர்கள் அதைச் செய்கின்றனர். ஆனால் ஜனவரி 15 ஆம் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்ததோடு நின்று விடாமல் அனைத்து சமுதாய மக்களையும் அன்றைய தினத்தில் வீடுகளில் விளக்கேற்றுமாறும் வழிபாடு நடத்துமாறும் வலியுறுத்தும் விதமாக தமிழ அரசின் அறிவிப்புகள் அமைந்துள்ளன.
அது மட்டுமில்லாமல் அரசு அலுவகங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் அனைவரும் சமத்துவப் பொங்கல் கொண்டாடுமாறு கட்டளை பிறப்பித்து முஸ்லிம்கள் மீதும் இன்னொரு மதத்தின் நம்பிக்கை தினிக்கப்பட்டுள்ளது. பொங்கலையொட்டி தமிழக அரசுபொங்கல் பரிசு என்ற பெயரில் அரிசி, வெல்லம் போன்ற பொருட்களை வழங்குகிறது. அவ்வாறு வழங்கும் பையில் சூரியனை வணங்குவது போன்ற ஒரு படத்தை இடம் பெறச் செய்துள்ளது. இது பற்றி சட்டசபையில் நேற்று அமைச்சர் வேலு கூறுகையில் இது எங்கள் சின்னம் அல்ல, பொங்கல் அன்று சூரியனை வணங்குவதை குறிக்கும் சின்னம் என்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அரசே இது போன்ற செயலை செய்யுமாறு நேரடியாக வலியுறுத்துகின்றது.
அரசு அலுவலகங்களிலும் அன்றைய தினத்தில் வழிபாடு நடத்தப்படுகின்றது.
மத சார்பற்ற ஜனநாயக அரசு, இது போன்ற காரியங்களில் ஈடுபடக்கூடாது. ஏனெனில் இவ்வாறு கால்நடைகளுக்கும் சூரியனுக்கும் வணக்க வழிபாடு செய்வது முஸ்லிம்களின் அடிப்படைக் கொள்கையான படைத்த இறைவனை மட்டுமே வணங்க வேண்டும் என்பதற்கு எதிரானதாகும். முஸ்லிம்கள் இது போன்ற வழிபாடுகளில் ஈடுபட வலியுறுத்தும் தமிழக அரசின் செயல் முற்றிலும் ஜனநாயகத்திற்கும் மத சார்பற்ற தன்மைக்கும் எதிரானதாகும்.
தமிழக அரசின் ஜனநாயகத்திற்கும் மத சார்பற்ற தன்மைக்கும் எதிரான இந்த நடவடிக்கையை வண்மையாகக் கண்டிக்கின்றோம் என்பதையும், அரசு இது போன்று செயல்படுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாடறிந்த மூதறிஞருக்கு முஸ்லிம்கள் சூரியனையோ கால்நடைகளையோ வழிபட மாட்டார்கள் என்ற சாதாரண உண்மை கூட எப்படி தெரியாமல் போனது. இஸ்லாம் மதத்துக்கு எதிரான செயலை முஸ்லிம்களும் செய்ய வேண்டும் என்று உத்தரவு இடுவதை சென்ற வருடமும் நாம் கண்டித்து முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு சென்றோம். அதன் பிறகும் முதல்வர் இவ்வாறு அறிவிப்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீண்டும் ஒரு முறை கண்டிக்கிறது.
3. நடிகர்களுக்கு நிலம்
பாதைகளின் ஓரம் சாரத்தில், கூவத்தின் நாற்றத்தில் குடிசை கட்டிக் கொண்டு மழையிலும் வெயிலிலும் வாடுகின்ற சேரி மக்களைக் கொண்டது தான் தமிழகம். இந்தத் தமிழகத்தில் வன்முறை, ஆபாசம், விபச்சாரம், விரசம் போன்ற தீமைகளின் தொழிற்சாலைகளாகத் திகழ்கின்ற திரைப்படத் துறையினருக்கு, கூத்தாடிகளுக்கு 90 ஏக்கர் நிலத்தைத் தாரை வார்த்துக் கொடுத்து, அதில் வீடு கட்டிக் கொடுக்கும் தமிழக முதலமைச்சரை இப்பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அந்நிலத்தைத் திரும்பப் பெற்று வீடில்லாத மக்களுக்கு வழங்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
4. பாபர் பள்ளிபோன்று தொடரும் அக்கிரமம்
பள்ளிவாசல் விஷயத்தில் முஸ்லிம்களில் இரு ஜமாஅத்தார்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டவுடன் காவல்துறையும் வருவாய்த் துறையும் யோர்த்துக் கொண்டு பாபர் மஸ்ஜித்தைப் போன்று இழுத்து மூடுகின்ற அக்கிரமத்தை செய்து வருகின்றன. நீதிமன்றத்தின் உத்தரவையும் மீறி எஸ்.பி. பட்டணம் பள்ளிவாசலில் இந்த அநியாயத்தை காவல்துறையும் வருவாய்துறையும் நடத்தியது.
இந்த அக்கிரமத்தையும் அராஜகத்தையும் தமிழ அரசு உடனே தடுத்து நிறுத்தும் படி இப்பொதுக்குழுக் கேட்டுக் கொள்கின்றது.
புதுவை அரசு
1. புதுவை மாநில அரசுக்கு கோரிக்கை
புதுவை மாநிலத்தில் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 6.1 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவதாக புதுவை சட்டமன்றத்தில் புதுவை காங்கிரஸ் அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தைச் சட்டமாக்குவோம் என்றும் ஆந்திராவைப் போன்று புதுவையில் வட்டியில்லா கடன் வழங்குவோம் என்றும் புதுவை காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது. ஆனால் 2 சதவிகித இட ஒதுக்கீடு மட்டும் அளித்து முஸ்லிம்களை ஏமாற்றியுள்ளது. அது மட்டுமின்றி ஒட்டு மொத்த புதுவை மாநிலத்தில் இட ஒதுக்கீடு அளிக்காமல் பதுவை காரைக்கால் பகுதியில் மட்டும் தான் இந்த இட ஒதுக்கீடு என்று தகவல்கள் வருகின்றன. அதன்படி பார்த்தால் புதுவை காரைக்காலில் இரண்டு சதம் என்றால் ஒட்டு மொத்த புதுவையில் ஒரு சதவிகிதம் தான் ஆகிறது. ஒரு சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி முஸ்லிம்களை வஞ்சிக்கும் காங்கிரசின் இந்த துரோகத்தை இந்த பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது
மேலும் வட்டி இல்லா கடன் வழங்குவதாக எழுத்து மூலம் அளித்த வாக்குறுதியும் நிறைவேற்றாமல் புதுவை காங்கிரஸ் அரசு ஏமாற்றி வருவதை இப்பொதுக்குழு கண்டிக்கிறது.
முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முன்வந்துள்ளதாக மேற்குவங்க அரசு அறிவித்தது. முஸ்லிம் சமுதாயம் இதை வரவேற்று தனது நன்றிகளையும் தெரிவித்தது. ஆனால் அது அறிவிப்போடு நிற்கிறது. அதற்கான எந்த முயற்சியும் செய்வதாக தெரியவில்லை. எனவே கொடுத்த வாக்கை நிறைவேற்றுமாறும் அம்மாநிலத்தில் 25 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்வதைக் கருத்தில் கொண்டு அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு அளிக்குமாறு அம்மாநில அரசை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
மத்திய அரசு, மாநில அரசு
1. சீர் கெட்டு வரும் சட்டம் ஒழுங்கு
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் கொலை கொள்ளை கற்பழிப்பு கூலிப்படை அட்டகாசம் அதிகரித்தவன்னம் உள்ளண. கடந்த மூன்றாண்டுகளில் தமிழகத்தில் குழந்தைகள், சிறுமிகள், பெண்கள் கடத்தல் அதிகரித்து வருகிறதெனவும், 2007ம் ஆண்டு 1097 பேரும், 2008ல் 1155 பேரும், கடந்த ஆண்டு 1133 பேரும் கடத்தப்பட்டுள்ளனர் என தமிழக காவல்துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
சட்டங்களும் தண்டனைகளும் சமூக விரோதிகளுக்கு பயத்தை ஏற்படுத்தி குற்றங்கள் செய்வதிலிருந்து விலகிப்போக வைக்க வேண்டும். ஆனால் எத்தகைய பயமுமின்றி பிஞ்சுக் குழந்தைகளைக் கொலை செய்தல், கற்பழித்தல் என சமூக விரோதிகள் தொடர்ந்து செயல்படுவது, தற்போதைய சட்டத்தின் அடிப்படையில் வழங்கும் தண்டனை கடத்தல்காரர்களுக்கு சிறிதளவு கூட பயத்தை ஏற்படுத்தவில்லை என்பதை படம் பிடித்து காட்டுகிறது. ஆகையால் இத்தகைய குற்றங்களுக்கு வழங்கும் தண்டனையை இன்னும் கடுமையாக்க வேண்டும். அரபு நாடுகளை போன்று சட்டத்தை கடுமையாக்கினால் தான் குற்றங்கள் குறைந்து பொது மக்கள் நிம்மதியாக வாழ முடியும். மக்கள் தம் குழந்தைகளை எவ்வித அச்சமுமின்றி பள்ளிக்கூடங்களுக்கும் அனுப்ப முடியும். கற்பழிப்பு, கொலை போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கினால் மட்டுமே சமூக விரோதிகளிடத்தில் பயத்தை ஏற்படுத்த முடியும். ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் கற்பழிப்பிற்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று கருத்தை வெளியிட்டிருக்கிறது. எனவே சட்டத்தை இயற்ற வேண்டிய இடத்தினில் இருக்கின்ற மத்திய அரசு இந்த விசயத்தில் உடனடியாகத் தலையிட்டு இத்தகைய குற்றங்களுக்கு மரண தண்டனை என்று சட்டமியற்ற வேண்டும். பொது மக்களின் நலன் என்ற அடிப்படையில் மாநில அரசு இதை வலியுறுத்த வேண்டும்.
2. விலைவாசி உயர்வு
அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயருவதற்கு பெட்ரோல் டீசல் விலை உயர்வு அடிப்படைக் காரணமாக உள்ளது. இந்த விலை உயர்வுக்கு மத்திய மாநில அரசுகள் விதிக்கும் அநியாய வரிகளே காரணமாக உள்ளன. விவசாயி பாட்டாளி மற்றும் பொதுமக்களை மிகப்பெரும் அளவில் இது பாதிப்பதால் மத்திய அரசு உடனே பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெறுவதுடன் பிற நாடுகளைப் போன்று நமது நாட்டிலும் பெட்ரோல் டீசலுக்கு வரி விதிப்பதைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
3. ஆன்லைன் வியாபாரம்
பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும் போது விலைகள் குறைவதும், உற்பத்தி குறையும் போது விலைகள் அதிகரிப்பதும் இயற்கையாக நடக்கும் நிக்ழ்வு தான். இதற்கு அரசாங்கம் பொறுப்பாகாது என்பது உண்மை என்றாலும் தற்போது விலைவாசி வின்னை முட்டும் அளவுக்கு ஏறியிருப்பதற்கும் மத்திய அரசின் கொள்கை தான் காரணமாகும்.
பொருளைப் பார்க்காமலே உலகில் எங்கோ இருந்து கொண்டு ஆன்லைன் வியாபாரம் மூலம் எல்லாப் பொருள்களையும் முடக்கி வைத்து செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்துகின்றனர். மத்திய அரசின் அனுமதியும் இதற்கு இருக்கிறது. ஒரு சில பணமுதலைகள் அனைத்துப் பொருள்களையும் ஆன்லைனில் பேரம் பேசி முடக்கி விட்டு தாறுமாறாக விலையை ஏற்றி விற்பனை செய்வதால் தான் தங்கம் முதல் தானியம் வரை விலைவாசி உயர்கிறது. ப.சிதம்பரமும் பிரதமர் மன்மோகன் சிங்கும் பணமுதலைகளுக்கு ஆதரவான ஆன்லைன் சூதாட்ட வணிகத்துக்கு உடந்தையாக இருப்பது தான் விலைவாசி உயர்வுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. எந்தப் பொருளையும் ஆன்லைன் மூலம் வீற்பதும் வாங்குவதும் முற்றாக தடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது. பணக்காரர்களுக்கு ஆதரவான கொள்கை காரணமாக விலைவாசி ஏறுவதற்குக் காரணமான மத்திய அரசை இப்பொதுக்குழு கண்டிக்கிறது
மேலும் பெட்ரோல் விலை ஏற்றம் என்பது இன்னும் பல பொருள்களின் விலை ஏற்றத்துக்கு வழி வகுக்கும் என்பது தெரிந்திருந்தும் மாதத்துக்கு இரண்டு தடவை பெட்ரோல் விலையை உயர்த்தும் மத்திய அரசைக் கண்டிக்கிறோம். 100 ரூபாய் பெட்ரோலுக்கு எழுபது ரூபாய் வரி போட்டு ஒரு பக்கம் மத்திய அரசு கொள்ளை அடிக்கிறது. இன்னொரு பக்கம் நட்டம் எனக் கூறி நாடகமாடி மக்களை ஏமாற்றுகிறது. எழுபது ரூபாய் வரி போடா விட்டால் பாகிஸ்தானில் கொடுப்பது போல் 25 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோல் விற்க முடியும். எனவே பெட்ரோலியப் பொருள் மீது எல்லா வரிகளையும் ரத்து செய்து 25 ரூபாய்க்கு பெட்ரோல் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
மக்களை வெள்ளைக் காரனை விட அதிகம் சுரண்டி பெட்ரோல் விலை உயர்வு மூலம் அனைத்து பொருள்கள் விலையும் ஏறுவதற்குக் காரணமான மத்திய அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
தமிழக அரசின் அனைத்து இலவசத் திட்டங்களிலும் முஸ்லிம்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகின்றனர். இலவச இரண்டு ஏக்கர், இலவச வீடுகள், சமத்துவபுரம் வீடுகள், இலவச வீட்டு மனப்பட்டாக்கள், வீட்டு வசதி வாரியத்தின் மூலம் ஒதுக்கப்படும் வீடுகள், இலவச எரிவாயு இணைப்பு உள்ளிட்ட அனைத்திலும் கந்துடைப்புக்காக ஓரிரு முஸ்லிம்களின் புகைப்படம் வெளியிடப்படுகிறது. முஸ்லிம்களின் சதவிகிதத்துக்கும் அவர்களது வறுமை நிலைக்கும் ஏற்ப இவை வழங்கப்படவில்லை என்று இந்தப் பொதுக்குழு குற்றம் சாட்டுகிறது.
அனைத்து நலத்திட்டங்களிலும் முஸ்லிம்களுக்குக் கிடைத்தது எவ்வளவு என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
மத்திய அரசு
1- பாபர் மஸ்ஜித்
கடந்த செப்டம்பர் 30ஆம் தேதியன்று அலகாபாத் நீதிமன்றம் 60 ஆண்டுகாலமாக நிலுவையில் இருந்த பாபர் மஸ்ஜித் தொடர்பான தனது தீர்ப்பை வழங்கியது. இந்தத் தீர்ப்பு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தை மீள முடியாத அதிர்ச்சியிலும், ஆத்திரத்திலும் ஆழ்த்தியிருக்கின்றது. அது இந்திய நாட்டின் அரசியல் சட்ட வரம்புகளைத் தாண்டி, இந்தியாவின் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு முரணாக அளிக்கப்பட்டுள்ளது. இது முஸ்லிம்களின் வாழ்வுரிமையான வழிபாட்டு உரிமையைப் பறித்துள்ளது. இந்தத் தீர்ப்பு சட்டத்திற்குப் புறம்பானது.
பாபர் மசூதி இருந்த இந்த இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். இப்படி முடிவு எடுக்க எந்தச் சட்டவிதியும் உரிமையியல் சட்டத்தில் இல்லை. அப்பட்டமாக சட்டம் மீறப்பட்டுள்ளது.
அப்படியே ஒருவர் குறிப்பிட்ட இடத்தில் பிறந்திருந்தால் அதற்காக அவர் அந்த இடத்தின் உரிமையாளராவார் என்று இந்தியாவிலும் உலகில் எந்த ஒரு நாட்டிலும் சட்டம் இல்லை. எனவே இவர்களின் தீர்ப்பு சட்ட விரோதமானது.
குறிப்பிட்ட இடம் யாருக்குச் சொந்தம் என்பதைத் தீர்மானிக்க அந்த இடத்தில் இதற்கு முன் என்ன இருந்தது என்று தோண்டிப் பார்க்க வேண்டும் என்று இந்தியாவிலோ வேறு எந்த நாட்டிலோ சட்டம் இல்லை. இதையும் அந்த நீதிபதிகள் மீறியுள்ளனர்.
தோண்டப்பட்ட இடத்தில் கிடக்கும் பொருளைக் கொண்டு இன்னார் இந்த மாதிரியான கட்டடத்தை இடித்தார் என்று கண்டு பிடிக்கலாம் என்று இந்திய உரிமையியல் சட்டத்தில் சட்ட விதி ஏதும் இல்லை. இதையும் நீதிபதிகள் மீறியுள்ளனர்.
குறிப்பிட்ட இடத்தில் ராமருக்குக் கோவில் இருந்தது என்று கூறுவது நீதிமன்றத்தின் வேலையல்ல. அந்த வேலையை நீதிபதிகள் செய்துள்ளனர்.
அந்த இடத்தில் இருந்த ராமர் கோவிலை பாபர் இடித்தார் என்று கற்பணையாக முடிவு செய்யும் அதிகாரம் நீதிபதிகளுக்கு இல்லை
ஆவணம் யார் பெயரில் இருந்தது என்பதைப் பார்ப்பது தான் நீதிமன்றத்தின் வேலை. ஆனால் எடுத்துக் காட்டப்பட்ட ஆதாரங்களை அவர்கள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.
யாருடைய அனுபவத்தில் இருந்து வருகிறது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. 1528 முதல் 450 வருடம் முஸ்லிம்களின் அனுபவத்தில் தான் பாபர் மஸ்ஜித் இருந்து வந்தது என்பது உலகம் அறிந்த உண்மை. ஆனால் இந்த உண்மையையும் நீதிபதிகள் கண்டு கொள்ளவில்லை.
ஒரு இடம் குறித்து தீர்ப்பு அளிப்பதற்கு ஸ்டேட்டஸ் கோ – அதாவது இப்போது எப்படி இருக்கிறதோ அப்படி நீடிப்பது – என்ற நிலை வழக்குத் தொடுத்த நேரத்தில் உள்ள நிலையைத் தான் குறிக்கும். வழக்குத் தொடுத்த 1949 ல் அது முஸ்லிம்களிடம் தான் இருந்தது. அதை அலட்சியம் செய்து விட்டு இப்போது அது பள்ளிவாசலாக இல்லை என்று கூறியிருப்பது அப்பட்டமான மோசடியாகும்.
1992 வரை அது பள்ளிவாசலாக இருந்தது என்பதும் அது திட்டமிட்டு இடிக்கப்பட்டது என்பதும் உலகறிய நடந்ததாகும். ஆனால் இப்போது பள்ளிவாசல் அங்கே இல்லை என்பதால் அது இந்துக்களுக்குச் சொந்தம் எனக் கூறியிருப்பது அப்பட்டமான சட்ட மீறலாகும். பள்ளிவாசல் இடிக்கப்படாமல் இருந்தால் இவர்கள் என்ன தீர்ப்பு சொல்வார்கள்? இடிக்கச் சொல்லி உத்தரவு போடுவார்களா?
இப்படி அடுக்கடுக்கான சட்ட மீறல் செய்து சிறுபாண்மை மக்களுக்கு வரலாற்றில் இது வரை நடந்திராத மாபெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
எனவே சட்ட விரோதமான இத்தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளையும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
இந்த வழக்கை நாட்டின் உயர் அதிகாரம் படைத்த உச்ச நீதிமன்றம் மறுவிசாரணைக்கு உட்படுத்தி சட்டப்படி தீர்ப்பு அளிக்க ஆவண செய்யுமாறு இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
பாபரி மஸ்ஜித் தீர்ப்பு குறித்து யாருக்கும் அஞ்சாமல் நியாயமான கருத்து தெரிவித்த முலாயம் சிங் யாதவ், லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரையும் இந்த அநீதியைக் கண்டித்து குரல் எழுப்பிய நியாயவான்கள், சட்ட வல்லுனர்கள், ஊடகத்துறையினர் உள்ளிட்ட அனைவரையும் இந்தப் பொதுக்குழு வெகுவாகப் பாராட்டுகின்றது.
அலஹாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான மாத்திரத்தில் இதை வரவேற்ற திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ், மற்றும் போலி சமுதாய இயக்கங்களை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது.
பாபர் மசூதி இடிப்பில் பங்கேற்ற அத்வானி போன்றோர் மீது நடவடிக்கை எடுப்பதில் மென்மையான அணுகுமுறையைக் கையாண்டு வரும் மத்திய காங்கிரஸ் அரசை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. நீதிமன்றங்களின் மீது இருந்த நம்பிக்கையை இந்தத் தீர்ப்புக்குப் பின் முஸ்லிம்கள் இழந்து விட்டனர். எனவே பாபர் மஸ்ஜிதைப் பூட்டியதற்கும் அதை வழிபாட்டுக்கு திறந்து விட்டதற்கும் பள்ளிவாசல் இடிக்கப்படும் போது தடுக்கத் தவறியதற்கும் பொறுப்பான காங்கிரஸ் கட்சி தனது துரோகச் செயலுக்கு பரிகாரம் தேடும் வகையில் நாடு சுதந்திரம் அடையும் போது யாரிடம் எந்த வழிபாட்டுத்தலம் இருந்ததோ அது அவர்களுக்கே சொந்தம் என்ற சட்ட வரம்புக்குள் பாபர் மஸ்ஜிதையும் கொண்டு வர வேண்டும். அதன் மூலம் எல்லா வழக்குகளையும் செயலிழக்கச் செய்து பள்ளிவாசல் இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய காங்கிரஸ் அரசை இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
பாபரி மஸ்ஜித் பாணியில் இனி வேறொரு மஸ்ஜிதில் கை வைப்பதற்கு யார் முயற்சி செய்தாலும் அதே பாணியில் முஸ்லிம்கள் தங்கள் உயிரையும் அர்ப்பணித்து பள்ளிவாசலைக் காக்க வேண்டும் என்று முஸ்லிம் சமுதாயத்தை இந்தப் பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
2. நாடு முழுவதும் தனி இட ஒதுக்கீடு
நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் கமிஷன் முஸ்லிம்களுக்கு மத்திய அரசுப் பணிகளிலும் அனைத்து மாநிலங்களிலும் பத்து சதவிகிதம் தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு தருவோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்களித்து முஸ்லிம்களின் ஓட்டுக்களை அறுவடை செய்த காங்கிரஸ் நீதிபதி மிஸ்ரா அவர்களின் பரிந்துரை அளிக்கப்பட்ட பின்பும் ஆழ்ந்த உறக்கத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறது.
மத்திய அரசின் உறக்கத்தைக் கலைப்பதற்காக 2010 ஜூலை 4 அன்று பதினைந்து லட்சம் முஸ்லிம்கள் திரண்டு நீதிபதி மிஸ்ரா அவர்களின் பரிந்துரயை செயல்படுத்துமாறு கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து பிரதமரையும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அவர்களையும் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் நேரில் சந்தித்து இக்கொரிக்கையை வலியுறுத்தி விளக்கிக் கூறி மனுவாகவும் அளித்தனர். இட ஒதுக்கீடு தருவோம் என்று சொன்ன அவர்கள் இதற்காக ஒரு துரும்பையும் எடுத்துப் போட்டதாகத் தெரியவில்லை. மத்திய அரசின் இந்த அலட்சியப் போக்கை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் உடனே முஸ்லிம்களுக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீட்டை இந்தியா முழுவதும் சட்டமாக்க இந்தப் பொதுக்குழு வலியுறுத்துகின்றது.
3. கல்வி உதவித் தொகை
சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் கல்வி உதவி, கல்விக் கடன் ஆகியவை சென்ற ஆண்டு அதிகாரிகளின் ஆணவப் போக்காலும் கல்வி நிலையங்களின் அலட்சியப் போக்காலும் பெரும்பாலான முஸ்லிம்களுக்குக் கிடைக்கவில்லை. அது போல் நடக்காமல் இருக்க தெளிவான வழிகாட்டுதலை வழங்கி அலைக்கழிக்காமல் முஸ்லிம் சமுதாயம் பயன் பெற தெளிவான வழிகாட்டுதலை அறிவிக்குமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
4. பயங்கரவாதத்தை பாரபட்சமின்றி தடை செய்க
இந்திய நாட்டின் அமைதிக்கும், இந்திய அரசியல் சட்டத்திற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக தொடர்ந்து இருந்து வருகின்ற இயக்கங்களின் பட்டியலில் முதலிடம் பெறுபவை ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள் உள்ளிட்ட சங்பரிவார் இயக்கங்கள் தான். மாவோயிஸ்ட்டுகளின் தீவிரவாதத்திற்கு சற்றும் குறையாத இத்தகைய இந்துத்துவா தீவிரவாத இயக்கங்கள் தான் நம் நாட்டில் நிகழ்ந்த பல குண்டுவெடிப்புகளுக்கு மூளையாகச் செயல்பட்டவை என்பதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முழுநேர ஊழியராக பணியாற்றும் சுவாமி அசீமானந்தா நீதிபதியிடம் வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் தெளிவுபடுத்துகிறது. ஆனால் பயங்கரவாதச் செயல்களில் துளியும் சம்பந்தப்படாத அப்பாவி முஸ்லிம்களைக் குண்டு வெடிப்புகளில் ஈடுபட்டனர் என்று காவி மயமாகிப் போய்விட்ட காவல்துறையும் புலனாய்வு துறையும் கைகோர்த்துக் கொண்டு அவர்களைக் கைது செய்து அப்பாவிகளின் வாழ்க்கையை சிதைத்து விட்டனர். எனவே அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈட்டை அளித்து, அவர்கள் குற்றமற்றவர்கள் என்று ஊடகங்களின் வழியாக பகிரங்கமாக அறிவித்து அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று சம்மந்தப்பட்ட மாநில அரசுகளயும் மத்திய அரசையும் இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது
இந்தியாவைச் சேர்ந்த டாக்டர் ஹனீப் என்பவர் ஆஸ்திரேலிய அரசால் தீவிரவாதியாக சித்தரிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். பின்னர் அவர் அப்பாவி என்பதை அறிந்து கொண்ட ஆஸ்திரேலிய அரசு அவரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டதுடன. பால கோடி ரூபாய் நட்ட ஈட்டையும் வழங்கியுள்ளது. அந்நிய நாட்டுக்காரருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஆஸ்திரேலிய நாடு நீதி வழங்கும் போது சொந்த நாட்டு மக்களை பொய் வழக்கில் கைது செய்த மத்திய மாநில அரசுகள் அதற்கு மன்னிப்பு கேட்காததுடன் நட்ட ஈடும் வழங்காமல் இருப்பது நாட்டுக்கு அவமானம் என்று இப்பொதுக் குழு சுட்டி காட்டுகிறது. நாட்டில் நிகழ்ந்த அனைத்து குண்டுவெடிப்புகளையும் முழுமையாக திறந்த மனதுடன் விசாரிக்கும் வண்ணம் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை மத்திய அரசு உடனே ஏற்படுத்த வேண்டும். அந்த குழுவில் காவி சிந்தனையுடைய அதிகாரிகள் இடம் பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமை. மகாராஸ்டிரா தீவிரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்கரே படுகொலையையும் இந்துத்துவாவினர் தான் செய்திருப்பார்கள் என்பதை திக் விஜய் சிங் வெளியிட்ட தொலைபேசி உரையாடல் நிரூபிக்கிறது. ஆகவே இந்தப் படுகொலையையும் மீண்டும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உண்மைக் குற்றவாளிகளைக் கண்டு பிடித்து தண்டிக்க வேண்டும். உண்மையை வெளிக்கொணர வேண்டுமென்ற உன்னத நோக்கத்துடன் இந்த விசாரணையை மத்திய அரசு அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக் கொள்கிறது.
5. பள்ளிவாசலை இடித்த காங்கிரஸ்
தில்லியில் ஹஸ்ரத் நிஜாமுதீன் இரயில் நிலையம் அருகிலுள்ள ஜானக்புரி பி பிளாக்கில் உள்ள நூர் மஸ்ஜித் என்ற முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலம் ஒன்றை அரசு நிலத்தில் இருப்பதாகப் பொய்யான காரணமொன்றைக் கூறி கடந்த 12 ஆம் தேதி தில்லி மாநில காங்கிரஸ் அரசு இடித்து தரை மட்டமாக்கி இருக்கிறது. இந்தப் பள்ளிவாசல் புறம்போக்கு நிலத்திலில்லை. மாறாக வக்ப் வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில் தான் இருக்கிறது என்பதற்கான ஆவணங்களை வக்ப் வாரியம் சமர்ப்பித்த பிறகும் கூட தில்லி மாநில காங்கிரஸ் அரசு மத துவேசத்துடன் நூர் பள்ளிவாசலை இடித்திருக்கிறது. முஸ்லிம்களின் பரவலான எதிர்ப்பால் கலவரமடைந்த தில்லி மாநில முதல்வர் ஷீலா தீட்சித் மீண்டும் பள்ளிவாசல் கட்டித்தரப்படும் என்று அறிவித்திருக்கிறார். இதே போன்றதொரு அறிவிப்பைத் தான் பாபர் மஸ்ஜித் இடித்த சமயத்தில் அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம ராவ் பாராளுமன்றத்தில் அறிவித்தார். ஆனால் இன்று வரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. முஸ்லிம்களின் வழிப்பாட்டுத்தலங்களான பள்ளிவாசல்களை இடிப்பதில் காங்கிரஸ்காரர்களும் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை இந்தப் பள்ளிவாசல் இடிப்பு உறுதிப்படுத்துகிறது. ஏற்கெனவே 2009 ஆம் ஆண்டு திபியாவாலி என்று அழைக்கப்படும் புராதனச் சின்னமாகத் திகழ்ந்த பள்ளிவாசல் ஒன்றை இடித்தது. இப்போது மறுபடியும் இன்னொரு பள்ளிவாசலை இடித்து பாஜகவுக்கு சமமாக காங்கிரசிலும் காவிச் சிந்தனை பரவியிருக்கிறதென்பதை நிரூபித்திருக்கிறார்கள். ஏற்கெனவே பாபர் மஸ்ஜித் இடிப்பினாலும், அதன் பின்னர் வெளியான பாபர் மஸ்ஜித் தொடர்பான அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பினாலும் காங்கிரசின் மேல் கடுமையான அதிருப்தியில் இருக்கின்ற இந்திய முஸ்லிம்களை இந்த பள்ளிவாசல் இடிப்பு இன்னும் அக்கட்சியின் மேலுள்ள வெறுப்பை அதிகமாக்கியிருக்கிறது. இந்த வெறுப்பு வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் உட்பட பல மாநிலத் தேர்தல்களில் எதிரொலித்து காங்கிரசின் ஆட்சிக்கட்டில் கனவை நிராசையாக்கி விடுவதற்கான வாய்ப்புகளை அதிகமாக்கியிருக்கின்றன. இதற்குப் பிறகும் காங்கிரஸ் தொடர்ந்து முஸ்லிம்களைச் சீண்டிக் கொண்டிருந்தால் அக்கட்சியை மழையில் கரையும் மணல் கோட்டையைப் போன்று கரைத்து, மத்திய ஆட்சிக் கட்டிலிலிருந்தும் காங்கிரசை அகற்றி விடுவார்களென்பதை காங்கிரஸ் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். அரசு நிலத்தில், நடைபாதையில் இருக்கிற வழிப்பாட்டுதலங்களை அகற்ற முடியாத காங்கிரஸ் அரசு காவி உணர்வுடன் முஸ்லிம்களின் சொந்த நிலத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல்களைக் குறிவைத்து இடித்ததை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வன்மையாகக் கண்டிக்கிறது.
6. சிறுபான்மையினர் மேம்பாட்டுக்காக மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ஆதாரம் உரியோருக்கு வழங்கப்படாமல் அப்படியே திரும்ப அனுப்பப்படுகின்றது. முஸ்லிம்கள் இந்த நிதி கோரி விண்ணப்பிக்கும் போது அந்த நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றே சம்பந்தப்பட்டத் துறையினர் பதிலளிக்கின்றனர். இந்த அநீதியை உடனே தடுத்து நிறுத்தி உரியவருக்கு நிதி கிடைக்க ஆவண செய்யுமாறு மத்திய அரசை இம்மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
7. வக்ஃபு சொத்துகள்
முஸ்லிம் சமுதாயத்தின் தனவந்தர்கள் அறப்பணிகளுக்காக அர்ப்பணித்துச் சென்ற சொத்துக்கள் வக்பு வாரியத்தின் துணையுடன் தான் சுருட்டப்பட்டுள்ளன. எனவே கிறித்தவ சமுதாயம் எப்படி தனது அறப்பணிகளுக்கான சொத்துக்களை அரசின் தலையீடு இல்லாமல் தானே நிர்வகித்துக் கொள்கிறதோ அது போல் முஸ்லிம்களின் வக்பு சொத்தை அந்தந்த பகுதி முஸ்லிம்களே நிர்வாகம் செய்யும் வகையில் வக்பு போர்டை முற்றாகக் கலைத்து விட வேண்டும். சில தனியார்கள் வர்த்தக நோக்கத்தில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு உதவும் வகையில் வக்பு வாரிய லட்டர் பேடில் வாரியத் தலைவர் நிதி உதவி கேட்டு செல்வந்தர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். வக்பு வாரியத்தின் சார்பில் இக்கல்லூரி நடத்தப்படுகிறது என்று பொய்யான தகவலை அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார். வக்பு வாரியத்தின் பெயரை தனி நபர்கள் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தும் வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மான் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.
இராமநாதபுரத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் எதிரிகளாக அறியப்படும் தமுமுகவினர் நடத்திய போராட்டத்தில் பேருந்துகள் சேதமாக்கப்பட்டதற்கு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் மீது வழக்குப் போட்டு கைது செய்ய முயற்சிக்கும் தமிழக அரசின் பழிவாங்கும் போக்கை இந்தப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
மத்திய அரசு
8. தொல்லியல் ஆய்வு கழகம்
1948ல் டெக்கானில் தவ்லதாபாத் கோட்டையிலுள்ள ஜும்ஆ மஸ்ஜிதை தொல் பொருள் ஆய்வுக் கழகம் கோயிலாக மாற்றியது. 2003ல் மத்திய பிரதேசம் தார் என்ற ஊரில் 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கமால் மவ்லா பள்ளிவாசலை இந்துக்கள் வணங்கும் கோயிலாக மாற்றியது.
16ஆம் நூற்றாண்டில் ஷேர்ஷா ஆட்சியில் சூரியில் கட்டப்பட்ட புராண கிலாவுக்குக் கீழ் இந்துக்களின் இந்திர பிராஸா நகரம் இருப்பதாக தொல்பொருள் ஆய்வுக் கழகம் கதை கட்டியது.
இப்படி முஸ்லிம்களின் கோட்டை, கொத்தளங்கள், பள்ளிவாசல்கள், நினைவுச் சின்னங்களுக்கு உள்ளே கோயில் இருப்பதகாகக் கதை கட்டுவதை மட்டுமே தொழிலாகக் கொண்டு தொல்பொருள் ஆய்வுக் கழகம் செயல்பட்டு வருகின்றது. பாபரி மஸ்ஜித் பள்ளி விஷயத்தில் அதைக் கோயிலாக மாற்றுவதற்கு இந்தக் கழகம் தான் முழு வேலையையும் செய்து வருகின்றது.
இப்படி மத துவேஷத்தைத் தூண்டி, வகுப்புக் கலவரத்திற்கு வித்திடுகின்ற இந்தத் தொல் பொருள் ஆய்வுக் கழகத்தை மத்திய அரசு உடனே கலைக்கவேண்டும்; அதன் கைவசம் உள்ள 118 பள்ளிவாசல்களை உடனே முஸ்லிம்களிடம் மீட்டித் தர வேண்டும் என்று மத்திய அரசை இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.
உலகம்
1. துனிஷியா,எகிப்து புரட்சி
துனிஷியாவிலும் எகிப்திலும் ஆட்சியாளர்களுக்கு எதிரான புரட்சி வெடித்திருக்கின்றது. இதுவரை இஸ்லாமிய நாடுகளில் இல்லாத தற்கொலை முயற்சிகள் அண்மையில் துனிஷியாவில் தொடங்கி தற்போது அவை எகிப்து, அல்ஜீரியா நாடுகளிலும் பரவிக் கொண்டிருக்கின்றது.
இஸ்லாமிய நாடான எகிப்தின் ஆட்சி ஃபிர்அவ்னிடமிருந்து மீட்கப்பட்டு மூஸா (அலை) அவர்களின் சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அந்நிய சக்திகளிடமிருந்து மீட்கப்பட்டு முஹம்மது (ஸல்) அவர்களின் சமுதாயத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சமுதாயங்களிடம் ஆட்சி ஒப்படைக்கப்பட்டது அடிப்டைக் காரணம் அவர்களிடமிருந்த ஏகத்துவக் கொள்கை தான்.
இந்த ஏகத்துவத்தை மறந்ததால் ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள துனிஷியாவில் இதுவரை 23 ஆண்டுகள் ஆட்சி செலுத்திய ஜைனுல் ஆபிதீன் என்பவர் நாட்டை விட்டுத் துரத்தி அடிக்கப்பட்டு விட்டார்.
அதுபோல் ஏகத்துவக் கொள்கைக்குப் பரிசாக வழங்கப்பட்ட எகிப்தையும் ஃபிர்அவ்னை விடக் கேடாக ஆட்சி செய்கின்ற அதிபர் ஹோஸ்னி முபாரக், கலவரத்தை அடக்குவதற்காக முஸ்லிம்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றும், கைது செய்து சிறையிலடைத்தும் கொண்டிருக்கின்றார். இந்தக் கொடுமைகளை நிறுத்தி உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று ஹோஸ்னி முபாரக்கைக் கேட்டுக் கொள்வதுடன் இந்தப் புரட்சி தங்கள் நாடுகளிலும் தொற்றிக் கொண்டு விடுமோ என்று பயப்படுகின்ற இஸ்லாமிய நாடுகள், இதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு, தாங்கள் நாடுகளில் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான ஆட்சியை அமைத்துக் கொள்ளும்படி இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கின்றது.
2. பலஸ்தீன ஆக்கரமிப்பு
பலஸ்தீன ஆக்கிரமித்து அந்நாட்டின் மக்களை அகதிகளாக்கி அவர்களையும் அன்றாடம் அழித்து தனது ஆக்கிரப்பை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேலை வன்மையாக கண்டிப்பத்துடன் அந்நாட்டுடன் தனது உறவை இந்தியா உடனே துண்டித்துக்க வேண்டும் என்று மத்திய அரசை இப்பொழுக் குழு கேட்டுக் கொள்கின்றது.