தமிழகத்தில் கடந்த 07.11.10 அன்று சந்தேகத்திற்குரிய நாளில் பிறை எங்குமே தென்படாததைத் தொடர்ந்து துல்காயிதா மாதத்தை 30ஆக பூர்த்தி செய்து, 18.11.10 வியாழன் அன்று ஹஜ்ஜுப் பெருநாள் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவுப்பு செய்தது.
ஆனால், எந்த ஒரு மார்க்க நெறிமுறையையும் பேணாத தமிழக டவுன் காஜியோ மஹாராஷ்டிர மாநிலம் மாலேகானில் பிறை பார்த்ததன் அடிப்படையில் தமிழகத்தில் 17.11.10 அன்று பெருநாள் என்று தறிகெட்ட அறிவிப்பைச் அறிவித்தார். தமிழக டவுன் காஜியின் அறிவிப்பு எந்த ஒரு நெறிமுறையும், மார்க்க வரைமுறையும் அற்ற அறிவிப்பு என்பதை, பிறை குறித்த டவுன் காஜியின் கடந்த கால அறிவிப்புகளோடு ஒப்பிட்டு பார்த்தால் விளங்கிக் கொள்ளலாம்.
கடந்த ரமாலான் மாதம் முதல் பிறை தமிழகத்தில் தெரிவதற்கு முன்பே கேரள மாநிலத்தில் தென்பட்டது. இப்போது தமிழகத்திற்கு அருகிலுள்ள கர்நாடகாவையும் தாண்டி மஹாராஷ்டிராவிற்கு தாவிய தமிழக டவுன் காஜி, சென்ற ரமலானில் கேரள மாநிலத்தில் பார்க்கப்பட்ட பிறையை நிராகரித்தார். தமிழகத்தில் பிறை பார்க்கப்பட்டால் தான் ஏற்றுக் கொள்வேன் என்று கூறிவிட்டு இப்போது மஹாராஷ்டிராவை ஆதாரமாகக் கொண்ட மர்மம் நமக்கு விளங்கவில்லை.
உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த டவுன் காஜியின் பேட்டி:
”சமுதாய ஒற்றுமை” என்ற மாத இதழுக்கு சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தமிழகத்திலிருந்து பிறை பர்க்கப்பட்டதாக தகவல் கிடைத்தால் ஏற்றுக் கொள்வேன் என்றும், ”இந்தியாவில் ஒரே நாளில் பெருநாள் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திரா காந்தி அவர்கள் தனது ஆட்சியின் போது ஹிலால் கமிட்டி ஒன்றை ஏற்படுத்தினார்கள். சில மார்க்க காரணங்களினால் அதன்படி செய்ய முடியாமல் போனது” என்று அந்த பேட்டியில் இந்தியா முழுவதும் ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுவதற்கு சில மார்க்க காரணங்கள் தடையாக இருக்கின்றன என்று தெரிவித்துவிட்டு, தற்போது ”அவர் சொன்ன நிலைபாட்டிற்கு அவரே முரண்பட்டு” மஹாராஷ்டிரா பிறையை அறிவித்து மக்களைக் குழப்பியுள்ளார். அவர் கொண்டிருந்த நிலைப்பாட்டிலிருந்து அவரே குழம்பி விட்டு, மக்களையும் குழப்பி விட்டுள்ளார்.
சென்ற ரமலானில் அருகிலுள்ள கேரள மாநிலத்தில் தெரிந்த பிறையையே ஏற்காத தமிழக டவுன் காஜி தற்போது மஹாராஷ்டிர பிறையை ஏற்றுக் கொண்டு மக்களைக் குழப்பியுள்ளாரே இவரது நிலைப்பாடு தான் என்ன? இவர் விளங்கித் தான் செய்கிறாரா? அல்லது விளங்காமல் நிலை தடுமாறியுள்ளாரா? என்று அறிந்து கொள்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகத்திலிருந்து மாநிலச் செயலாளர்கள் கானத்தூர் பஷீர் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர் கடந்த 15.11.10 திங்கள் அன்று மாலை 5மணிக்கு டவுன் காஜியை நேரில் சந்தித்து விளக்கம் கேட்கச் சென்றனர்.
டவுன் காஜியின் அற்புத(?) விளக்கம்:
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில நிர்வாகிகளை அவரது அலுவலகத்தில் சந்தித்த டவுன் காஜியிடம், எந்த அடிப்படையில் 17.11.10 அன்று பெருநாள் என்று அறிவித்தீர்கள்? என்று கேட்டதற்கு, தமிழகத்தில் எங்கும் பிறை தென்படவில்லை, மஹாராஷ்டிர மாநிலம் மாலேகானில் பிறை தென்பட்டதன் அடிப்படையில் தான் அறிவித்தேன் என்றும், ஆந்திரா, கர்நாடகா என்று இந்தியாவில் எங்கு பிறை தென்பட்டாலும் அதை அறிவிப்பேன் என்று அவர் கடந்த காலத்தில் கொண்டிருந்த நிலைப்பாட்டிற்கு மாற்றமாகவும், அவர் அளித்த பேட்டிக்கு மற்றமாகவும் கூறியுள்ளார். அப்படியனால் கடந்த காலங்களில் டெல்லியில் பார்க்கப்பட்ட பிறையை ஏற்று பெருநாள் அறிவிக்காதது ஏன் என்று நமது நிர்வாகிகள் கேள்வி எழுப்பியதற்கு, டெல்லியில் இருந்து வரும் அறிவிப்பை ஏற்க மாட்டேன் என்று ஒரு அற்புத(?) விளக்கத்தைக் கூறியுள்ளார். டெல்லி என்பது இந்தியாவில் தானே உள்ளது, உங்கள் நிலைப்பாட்டின் படி அது என்ன வேறு நாடா? என்று நமது நிர்வாகிகள் கேட்டதற்கு, டெல்லியைப் பொறுத்த மட்டிலும் அவர்கள் அவர்களாக அறிவிப்பது கிடையாது. அவர்கள் கலகத்தாவை வைத்து அறிவிப்பார்கள் என்ற அறிவிப்பூர்வமான (?) விளக்கத்தைக் கூறியுள்ளார். கல்கத்தாவும் இந்தியாவில் தானே உள்ளது என்ற நமது நிர்வாகிகளின் கேள்விக்கு தகுந்த பதில் இல்லை.
டவுன் (DOWN) காஜியான, டவுன் (TOWN) காஜி?
இந்த முறை பெருநாளை நாங்களும் அறிவித்து விட்டோம், நீங்களும் அறிவித்து விட்டீர்கள் எனவே அடுத்த வருடம் 6 மாதங்களுக்கு முன்பாகவே வாருங்கள். நாம் அமர்ந்து பேசி முடிவெடுக்கலாம் என்று சமாளிப்பு பதில் தான் அவரிடத்திலிருந்து வந்ததே தவிர, ஒரு மார்க்கக் கடமையை நிறைவேற்றுவதற்கு அல்லாஹ்வை அஞ்சி முடிவெடுக்க வேண்டுமே என்ற பொறுப்புணர்வோடு உள்ளவர் போன்று அவர் நடந்து கொள்ளவில்லை. ஆகமொத்தத்தில் தடம்புரண்ட தனது பெருநாள் அறிவிப்பின் மூலம் டவுன்(TOWN)காஜி – டவுன்(DOWN)காஜி யாக மாறிவிட்டார்.
இதைப்போன்று கடந்த சில வருடக்களுக்கு முன்பாக தமிழகத்தைத் தாண்டி அந்தர்பல்டி அடித்து ஒரு பிறை அறிவிப்பைப் செய்த டவுன் காஜியிடம் அப்போது தலைமைப் பொறுப்பிலிருந்த சகோதரர் பீ.ஜே அவர்களும், பாபாஜான் என்ற சகோதரரும் நேரில் சென்று விளக்கம் கேட்டு, “உங்களது மத்ஹபு சட்டத்தில் கூட நீங்கள் கூறுவது போல, இல்லை” தத்தமது பகுதியில் பிறை பார்த்துத் தான் பிறையை அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே என்று பீஜே கூறிய போது மத்ஹப் கிதபுகளில் அப்படி இல்லை என்று அவர் மறுத்தார். உடனடியாக ஆதாரத்தைக் கையில் எடுத்துச் செல்லாததால் நாளை இதற்கான ஆதாரத்தை எடுத்து வருகிறேன் என்று கூறி விட்டு பீஜே வந்து விட்டார். மறுநாள் ஹனபி மத்ஹபின் ஏராளமான சட்டநூல்களில் இருந்து ஆதாரத்தை பிரிண்ட் எடுத்துக் கொண்டு போய் காட்டிய போது அதை அவரால் மறுக்க முடியவில்லை. “இனி வரக்கூடிய காலங்களில் தமிழகத்தில் காணப்படும் பிறையை மட்டும் தான் ஏற்றுக் கொள்வேன்” தமிழகத்திற்கு வெளியிலிருந்து வரும் அறிவிப்புகளை ஏற்க மாட்டேன்” என்ற நிலைப்பாட்டை ஒப்புக் கொண்டவர் தான் இந்த டவுன் காஜி என்பதையும் நாம் சுட்டிக் காட்டிக் கொள்கின்றோம்.
அதே நேரத்தில், கர்நாடக மாநிலம் குல்பர்காவில் பிறை பார்க்கப்பட்டதாக இந்த டவுன் காஜி அறிவிப்பு வெளியிட்ட போது, அதே நாளில் தாம்பரத்திலும் பிறை தென்பட்டது. பிறை பார்த்த நமது சகோதரர்கள் பிறை தென்பட்ட செய்தியை இந்த டவுன் காஜியிடம் தெரிவித்த போது நம் சகோதரர்கள் பார்த்த பிறையை ஏற்க மாட்டேன். குல்பர்க்கா பிறையைத் தான் ஏற்றுக் கொள்வேன் என்று தடுமாறி தறிகெட்டவர் தான் இந்த டவுன் காஜி என்பதையும் பதிவு செய்கின்றோம்.
நன்றி: ததஜ இணைய தளம்