Sunday, August 29, 2010

ஃபித்ராவின் சட்டங்கள்

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமாகும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புகாரி 1503

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர்மத்தை வழங்குவது அவசியம் ஆகும்.

ஒரு ஸாவு என்பது சுமார் இரண்டரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.

நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.

ஃபித்ராவின் நோக்கம்:

இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமையாக்கப்பட்டுள்ளது. நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழை களுக்கு உணவாகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817

நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்களின் சார்பில் வழங்கும் போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.

கொடுக்கும் நேரம்:

மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),
நூல்: புகாரி 1503, 1509

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.

பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.

பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.

பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, “பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்” என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.

ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே “நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்” என்று நான் கூறினேன். அதற்கு அவன் “எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது” எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, “நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். ”அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்” என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்” என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத் திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து “உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகி றேன்” என்று கூறினேன். “எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்” என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, “உன் கைதி என்ன ஆனான்?” என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். “அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்…. என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.

“இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்று தான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டுவதையே குறிக்கிறது. ஃபித்ராவை குறிக்கவில்லை” என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதம் தவறாகும்.

ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் ‘ரமளான் ஜகாத்’ என்ற சொல் ஃபித்ராவை மட்டும் தான் குறிக்கும்.

இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத் தினார்கள்” என்பது ஃபித்ராவைத் தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக்கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது. எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது.

எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது. திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது.

ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (அல்லது கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ரா வைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.

நபித்தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.

எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது. 

நன்றி: www.tntj.net

Tuesday, August 24, 2010

நோன்பு துறக்கும் போது ஓத வேண்டிய துஆ என்ன?

தமிழக்கத்தில் நோன்பு துறக்கும் துஆவாக அல்லாஹும்ம லக்க சும்த்து.. என்று துவங்கும் துஆவை ஓதி வருகிறார்கள். இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹும்ம லக்க சும்த்து... என்ற துஆ பல்வேறு வாசகங்களில் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூ ஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அனஸ் (ரலி), அலீ (ரலி) ஆகிய நான்கு நபித்தோழர்கள் வழியாகவும் முஆத் பின் ஸஹ்ரா என்று ஒரு தாபியி வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவைகள் அனைத்தும் பலவீனமான செய்திகளாகும்.

அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து

இந்த வாசகத்தை முஆத் பின் ஸஹ்ரா என்ற தாபியி அறிவிக்கும் செய்தி 

அபூதாவூத் (2011)
முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511
பைஹகீ பாகம்: 4, பக்கம்: 239
ஷுஅபுல் ஈமான் - பைஹகீ 3747
அத்தஃவாத்துல் கபீர் - பைஹகீ (426)
அஸ்ஸுஹ்த் வர்ரகாயிக் - இப்னுல் முபாரக் (1388,1390)
அஸ்ஸுனனுஸ் ஸகீர் - பைஹகீ (1102)
பழாயிலுல் அவ்காத் - பைஹகீ (141)
அல்மராஸில் - அபூதாவூத் (95)

ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவை இடம் பெற்ற அனைத்து நூல்களிலும் முஆத் பின் ஸஹ்ரா என்பவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அறிவிக்கிறார். இவர் நபித்தோழர் அல்ல! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பான செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திக்காத நபர் அறிவிப்பதை நாம் ஏற்கக் கூடாது. எனவே இந்தச் செய்தி பலவீனம் அடைகிறது.

மேலும் இந்தச் செய்தியை அறிவிக்கும் முஆத் பின் ஸஹ்ரா என்பவரின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படவில்லை. இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் இவரைப் பற்றி குறிப்பிடவில்லை. இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். எனவே இப்னு ஹிப்பான் மட்டும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்பதில்லை. எனவே முஆத் பின் ஸஹ்ரா என்பவர் யாரென அறியப்படாததால் மேலும் இச்செய்தி பலவீனமடைகிறது.

இதே செய்தி அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் மூலம் முஸன்னஃப் அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அபூ ஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து ஹுஸைன் பின் அப்துர் ரஹ்மான் அஸ்ஸுலமீ என்பவர் அறிவித்துள்ளார்.

இவர், அபூஜுஹைஃபா (ரலி), அம்ர் பின் ஹுரைஸ் (ரலி), இப்னு உமர் (ரலி), அனஸ் (ரலி), உமரா பின் ருவைபா (ரலி), ஜாபிர் பின் ஸமுரா (ரலி), உபைதுல்லாஹ் பின் முஸ்லிம் அல்ஹள்ரமீ (ரலி) ஆகிய ஆறு நபித்தோழர்களிடமிருந்தும் உம்மு ஆஸிம் (ரலி), உம்மு தாரிக் (ரலி) ஆகிய இரண்டு நபித் தோழியர்களிடமிருந்தும் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். 

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்

அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து எந்தச் செய்தியையும் அறிவித்ததாகக் குறிப்பு இல்லை. எனவே இந்தச் செய்தியும் ஆதாரத்திற்கு ஏற்றதாக இல்லை.

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஆனனீ ஃபசும்து வரஸகனீ வஅஃப்தர்த்து

இந்த வாசகம் முஸனஃப் இப்னு அபீ ஷைபா பாகம்: 2, பக்கம்: 511, பழாயிலுல் அவ்காத்-பைஹகீ (141) ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இச்செய்தியையும் முஆத் பின் ஸஹ்ரா என்பவரே அறிவிக்கிறார். நாம் முன்னர் முஆத் பின் ஸஹ்ரா என்பவர் தொடர்பாக கூறிய அனைத்து விமர்சனங்களும் இந்தச் செய்திக்கும் பொருந்தும் என்பதால் இந்தச் செய்தியும் பலவீனமடைகிறது.

லக்க சும்த்து வலா ரிஸ்க்கிக்க அஃப்தர்த்து வதகப்பல் மின்னீ இன்னக்கஸ் ஸமீவுல் அளீம்

இந்த வாசகம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் மூலம் தப்ரானீயின் அல்முஃஜமுல் கபீர் பாகம்: 10, பக்கம்: 292ல் இடம் பெற்றுள்ளது.

இதில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் அப்துல் மலிக் பின் ஹாரூன் என்பவர் பலவீனமானவர் ஆவார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

இவரும், இவருடைய தந்தையும் பலவீனமானவர்கள் என்று இமாம் தாரகுத்னீ அவர்களும், இவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாத்தம் அவர்களும், ஹதீஸ்களை இட்டுக்கட்டிக் கூறுபவர் என்று இப்னு ஹிப்பான் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்த செய்தி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் லிஸானுல் மீஸான் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியும் ஆதாரமற்றதாகி விடுகிறது.

பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து

இந்தச் செய்தி அனஸ் (ரலி) அவர்கள் மூலம் தப்ரானீ அவர்களின் 

அல்முஃஜமுல் அவ்ஸத் பாகம்: 16, பக்கம்: 338லும்
அல்முஃஜமுஸ் ஸகீர் பாகம்: 3, பக்கம்: 52லும்
கிதாபுத் துஆ பாகம்: 2, பக்கம்: 488லும்
அபூநுஐம் அவர்களின் அஹ்பார் உஸ்பஹான் பாகம்: 9, பக்கம்: 141லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவை இடம் பெற்றிருக்கும் அனைத்து நூல்களிலும் தாவூத் பின் ஸிப்ரிகான் என்பவர் இடம் பெற்றுள்ளார்.

ஜவ்ஸஜானீ அவர்கள், இவர் ஒரு பொய்யர் என்றும் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று யஃகூப் பின் ஷைபா, அபூ ஸுர்ஆ அவர்களும், இவர் நம்பகமானவர் இல்லை என்று இமாம் நஸயீ அவர்களும் பலவீனமானவர் என்று அபூதாவூத் அவர்களும் மேலும் பலரும் விமர்சனம் செய்துள்ளனர்.

நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்

எனவே இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல!

அல்லாஹும்ம லக்க சும்த்து வஅலைக்க தவக்கல்த்து வஅலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து

இந்த வாசகம் அலீ (ரலி) அவர்கள் மூலம் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்களின் அல்மதாலிபுல் ஆலிய்யா பாகம்: 3, பக்கம்: 408லும், முஸ்னதுல் ஹாரிஸ் பாகம்: 2, பக்கம்: 256லும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியில் இடம் பெறும் ஆறாவது அறிவிப்பாளர் ஹம்மாத் பின் அம்ர் அந்நஸீபி என்பவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டிச் சொல்லும் பொய்யர் என்று கடுமையாகக் குற்றம் சுமத்தப்பட்டவராவார்.

இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று இமாம் புகாரி அவர்களும், இவர் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று இமாம் நஸயீ அவர்களும், ஹதீஸ்களை இட்டுக் கட்டுபவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும், முற்றிலும் பலவீனமானவர் என்று இமாம் அபூஹாத்தம் அவர்களும், பொய்யர் என்றும் இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று பிரபலமானவர்களில் இவரும் ஒருவர் என்று இப்னு மயீன் அவர்களும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.

நூல்: லிஸானுல் மீஸான்

இதைப் போன்று ஐந்தாவது அறிவிப்பாளர் அஸ்ஸரிய்யு பின் காலித் என்பவர் யாரென அறிப்படாதவர் என்று இமாம் தஹபீ தனது மீஸானுல் இஃதிதால் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்தச் செய்தியும் பலவீனமடைகிறது.

ஆக மொத்தத்தில் அல்லாஹும்ம லக்க சும்து ... எனத் தொடங்கும் எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக இல்லை.

தஹபள்ளமவு... என்று ஆரம்பிக்கும் துஆ:

நோன்பு துறந்த பின், தஹபள்ளமவு வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ் எனும் துஆவை ஓதுவது நபிமொழி என்று நாம் கூறி வந்தோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த துஆவை ஓதியதாக அபூதாவூத், ஹாகிம், பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ஆதாரமாகக் கொண்டு மேற்கண்ட துஆவை ஓத வேண்டும் என்று நாம் கூறினோம். நமது உரைகளிலும், கட்டுரைகளிலும், நூல்களிலும் இதைத் தெரிவித்தோம்.

எதன் அடிப்படையில் இதை நாம் ஆதாரமாக ஏற்றோம் என்பதை முதலில் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

இந்தச் செய்தியை ஹாகிம் அவர்கள் பதிவு செய்து விட்டுப் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மர்வான் பின் ஸாலிம், அவரிடமிருந்து அறிவிக்கும் ஹுஸைன் பின் வாகித் ஆகிய இருவரும் அறிவிக்கும் ஹதீஸ்களை புகாரி, முஸ்லிம் ஆகிய இரு அறிஞர்களும் ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று குறிப்பிடுகின்றார்.

ஹாகிம் நூலை மேற்பார்வை செய்த ஹதீஸ் கலை அறிஞர் தஹபீ அவர்கள், மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியின் அறிவிப்பாளர் என்பதை வழிமொழிந்துள்ளார்கள்.

மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் புகாரியில் இடம் பெற்றுள்ளார் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் கூறியதன் அடிப்படையில் தான் நாமும் இதை வழிமொழிந்தோம்.

இமாம் புகாரி ஒருவரை ஆதாரமாகக் கொள்வதென்றால் அவரது நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டால் தான் ஏற்பார். பலவீனமானவர்களையோ, யாரென்று அறியாதவர்களையோ அவர் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதில் பெரும்பாலான அறிஞர்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. புகாரியின் சில அறிவிப்பாளர்கள் பற்றி சிலர் விமர்சனம் செய்திருந்தாலும் அதில் பெரும்பாலானவற்றுக்குப் பதிலும் அளிக்கப்பட்டுள்ளது.

ஹாகிம், தஹபீ ஆகிய இருவரும் மேற்கண்ட அறிவிப்பாளர் பற்றி, புகாரியில் இடம் பெற்றவர் என்று கூறுவதை நம்பித் தான் இதை ஆதாரப்பூர்வமானது என்று கூறினோம்.

மேலும் இதைப் பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களும் இதை ஹஸன் எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் என்று சான்றளித்துள்ளார்கள்.

ஆனால் ஹாகிம், தஹபீ, தாரகுத்னீ ஆகியோரின் கூற்றுக்கள் தவறு என்பது மறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேற்கண்ட மர்வான் பின் ஸாலிம் என்பவர் அறிவிக்கும் எந்த ஹதீஸும் புகாரியிலும் முஸ்லிமிலும் இல்லை.

ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறான தகவலைத் தந்துள்ளார்கள். புகாரி, முஸ்லிம் நூல்களில் மர்வான் அல்அஸ்பர் என்பார் அறிவிக்கும் ஹதீஸ் தான் இடம் பெற்றுள்ளது. மர்வான் பின் ஸாலிம் அறிவிக்கும் ஹதீஸ் புகாரி, முஸ்லிமில் இல்லை. மர்வான் அல்அஸ்பர் என்பவரை மர்வான் பின் ஸாலிம் என்று ஹாகிம், தஹபீ ஆகியோர் தவறாக விளங்கி இருக்கலாம் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறுவது மறு ஆய்வின் போது நமக்குத் தெரிய வருகின்றது.

மேலும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத்தன்மை பற்றி வேறு எந்த அறிஞராவது குறிப்பிட்டுள்ளாரா என்று ஆய்வு செய்ததில் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் அவ்வாறு கூறியதாகத் தெரியவில்லை.

இப்னு ஹிப்பானைப் பின்பற்றி, இமாம் தஹபீ அவர்கள் மட்டும், இவர் நம்பகமானவர் என்று கூறப்பட்டுள்ளார் என்று குறிப்பிடுகின்றார்.

இப்னு ஹிப்பான் அவர்கள், யாரென்று தெரியாதவர்களையும் நம்பகமானவர் என்று குறிப்பிடுவது வழக்கம். அவரது பார்வையில் நம்பகமானவர் என்றால் யாராலும் குறை கூறப்படாதவராக இருக்க வேண்டும். யாரென்றே தெரியாதவர்களை யாருமே குறை கூறி இருக்க முடியாது. இதனால் யாரென்று தெரியாதவர்களையும் இப்னு ஹிப்பான், நம்பகமானவர் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார்.

இதை அனைத்து அறிஞர்களும் நிராகரிக்கின்றனர். வேறு எந்த அறிஞரும் மர்வான் பின் ஸாலிம் என்ற மேற்கண்ட அறிவிப்பாளரின் நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தவில்லை.

எனவே யாரென்று அறியப்படாத மர்வான் வழியாக இது அறிவிக்கப்படுவதால் இது நிரூபிக்கப்பட்ட நபிமொழி அல்ல!

இதன் அடிப்படையில் நோன்பு துறப்பதற்கென்று தனியாக எந்த துஆவும் இல்லை என்பது உறுதியாகின்றது. சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்ற (புகாரி 5376) நபிமொழிக்கேற்ப பிஸ்மில்லாஹ் கூறுவது தான் 
சரியான நடைமுறை ஆகும்.

இந்த ஆக்கம் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் 'நோன்பு' என்று நூலில் இருந்து எடுக்கப்பட்டது. 

அந்த நூலை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

Tuesday, August 17, 2010

தராவீஹ் இருபதா? எட்டா?


நபி (ஸல்) அவர்கள் இருபது ரக்ஆத்துகள் தொழுதார்களா?

உமர் (ரலி) அவர்கள் இருபது ரக்ஆத்துகள் தொழுதார்களா?

ஸஹாபாக்கள் இருபது ரக்ஆத்துகள் தொழுதார்களா?

இது போன்ற கேள்விகளுக்கு விடை காண ''தராவீஹ் ஒர் ஆய்வு'' என்ற நூலை வாசிக்கவும். 

அந்த நூலை வாசிக்க இங்கே சொடுக்கவும்.

Friday, August 13, 2010

ரமலான் மாதத்தின் சிறப்புகள்

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்:
“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898), முஸ்லிம் (1956)

“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1899), முஸ்லிம் (1957)

ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.

இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!

“ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.

மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.

இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் “ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.

“ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்”என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.

இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

“யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
(நூல்: புகாரீ 1903)

இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936) இக்கருத்தை உறுதி செய்கிறது.

கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்:

மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். “ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்: முஸ்லிம் (2119)

கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்:
ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.

யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)

உம்ரா செய்தால் ஹஜ் நன்மை:
ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.

“ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), 
நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)

சுவர்க்கத்தில் தனி வாசல்:
நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது.

“சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)

அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்:
“நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894)

“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும்.

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது:
இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!

இணையதளத்தில் ரமலான் தொடர் சொற்பொழிவு நேரடி ஒளிபரப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில் தலைமையகத்தில் தினமும் இந்திய நேரம் இரவு 10 மணி முதல் 11 மணி வரை 'இஸ்லாம் கூறும் குடும்பவியல்' என்ற தலைப்பில் சகோதரர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிகழ்த்தும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி ஆன்லைன் பிஜே மற்றும் ததஜ இணையதளங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகின்றது. 

இணையதள ஒளிபரப்பு நேரம்:
இந்திய நேரம் இரவு 10 மணி முதல் 11 மணி வரை

இமயம் மற்றும் மெகா தொலைகாட்சிகளில் ஒளிபரப்பு நேரம்:
இந்த நிகழ்ச்சி தினமும் இந்திய நேரம் காலை 4 மணி முதல் 5 மணி வரை மெகா டிவியிலும், காலை 5 மணி முதல் 6 மணி வரை இமயம் டிவியிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

ஒவ்வோரு நாளும் நடைபெறும் நிகழ்ச்சி அடுத்த நாள் கீழ்காணும் லிங்கில் பதிவேற்றம் செய்யப்படும்:


பாருங்கள்! பார்க்கச் செய்யுங்கள்!!

Tuesday, August 10, 2010

அதிராம்பட்டிணத்தில் நடைபெற்ற 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சி


அதிரை 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியில் கடந்த 30.07.2010 அன்று 'இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம்' எனும் முஸ்லிம்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைவர் மௌலவி பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு பார்வையாளர்கள் கேட்ட மார்க்க கேள்விகளுக்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் பதில் அளித்தார். 


இதில் மக்கள் திரளாக கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday, August 04, 2010

மன அழுத்தத்தை தீர்க்க இஸ்லாம் கூறும் வழி

உரை: மௌலவி பி. ஜைனுல் ஆபிதீன்